Published:Updated:

நிவர் புயலைத் தாங்குமா கல்பாக்கம் அணுமின் நிலையம்?! - பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கல்பாக்கம் அணுமின் நிலையம்
கல்பாக்கம் அணுமின் நிலையம்

கல்பாக்கம் அருகில் நிவர் புயல் கரையைக் கடப்பதால், அங்குள்ள அணுமின் நிலையத்துக்கு ஆபத்து ஏற்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே நிவர் புயல் கரையைக் கடக்கப்போவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து சுமார் 70 கி.மீ தொலையில் உள்ள கல்பாக்கத்தில், சென்னை அணுமின் நிலையம் (Madras Atomic Power Station) செயல்பட்டுவருகிறது.

மணிக்கு சுமார் 130 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று சொல்லப்படும் அதிதீவிரத் தன்மை கொண்ட இந்த நிவர் புயல், கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு அருகில் கரையைக் கடக்கப்போவதாகச் செய்திகள் வந்துள்ளன. இந்தப் புயலால், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த சென்னை அணுமின் நிலையத்துக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சமும் கவலையும் எழுந்துள்ளது.

கல்பாக்கம் அணுமின் நிலையம்
கல்பாக்கம் அணுமின் நிலையம்

இந்த நிலையில், சென்னை அணுமின் நிலையத்தில் முன்னெச்சரிக்கையாகப் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ``அணுமின் நிலையத்தில் அனைத்துவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். கடற்பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கிவைத்தும், மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்தும் வைத்துள்ளோம். அணுமின் நிலையத்தின் கட்டடங்கள் அனைத்தையும் ஆய்வுசெய்துள்ளோம். நிலைய அதிகாரிகள் உஷார் நிலையில் இருக்கிறார்கள்.

சென்னை அணுமின் நிலையம் தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. யூனிட் 2-ன் முழு உற்பத்தித் திறனான 220 மெகாவாட் மின்சார உற்பத்தி தொடர்ந்து நடைபெறுகிறது. அணுமின் நிலையத்தின் பணிகள் வழக்கம் போல நடைபெற்றுவருகின்றன. நிவர் புயல் கரையைக் கடக்கும் நேரத்தில், புயலின் தாக்கத்தை அணுமின் நிலையம் வெற்றிகரமாக எதிர்கொள்ளும்” என்று சென்னை அணுமின் நிலைய இயக்குநர் ஸ்ரீனிவாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அணுமின் நிலையத்தைச் சேர்ந்த ஊழியர்களிடம் நாம் பேசியபோது, “நிவர் புயலால் இங்கு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. தேவையான பணியாளர்கள் மற்றும் பொறியாளர்கள் மட்டுமே தற்போது பணியில் இருக்கிறார்கள். மற்ற அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர்” என்றனர்.

கல்பாக்கம் அணுமின் நிலையம்
கல்பாக்கம் அணுமின் நிலையம்

அணுமின் நிலையத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளிடம் நாம் பேசியபோது, “தற்போது அணுமின் நிலையப் பகுதியில் தேசியப் பேரிடர் மீட்புப்படையினர் தயார் நிலையில் இருக்கிறார்கள். உயர் அதிகாரிகள் அனைவரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். சுனாமி வந்தபோது அணுமின் நிலைய வளாகத்துக்குள் சில இடங்களில் கடல்நீர் புகுந்தது. எனவே, அப்போதே சுற்றுச்சுவர் உள்ளிட்ட பாதுகாப்புகளை வலுப்படுத்திவிட்டோம். எனவே, இப்போது அதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாது. நிவர் புயலால் எந்தவித பாதிப்பும் அணுமின் நிலையத்துக்கு ஏற்படாத வகையில் அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறோம். தற்போது அணுமின் நிலையம் வழக்கம் போல செயல்பட்டுவருகிறது.

இங்கு கட்டடங்கள் எல்லாம் வலுவாக உள்ளன. எனவே, எந்தப் பிரச்னையும் இல்லை. வேண்டுமானால், இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை எடுத்துச்செல்லும் மின் கம்பிகள் புயலால் சேதமடையலாம். கடல் சீற்றம் அதிகம் இருந்தால், அதிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கும் சில ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். 130 கி.மீ வேகத்துக்கு காற்று வீசும் என்று சொல்லப்பட்டாலும், அதையெல்லாம் தாங்கும் அளவுக்கு அணுமின் நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிப்புகள் எதுவும் இருக்காது” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு