Published:Updated:

கோவை: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு... படுக்கை பற்றாக்குறை! - அவதியுறும் மக்கள்

இ.எஸ்.ஐ மருத்துவமனை
இ.எஸ்.ஐ மருத்துவமனை

கோவையில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அவதிப்படுகிறார்கள்.

ஊரடங்கில் அடுத்தடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. முக்கியமாக, தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. கோவை மாவட்டத்தில் தினமும் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

கோவை
கோவை
கோவை: கல்யாண் ஜூவல்லர்ஸ், தி.மு.க பிரமுகர்கள்மீது நோய்த் தொற்றுப் பரவல் சட்டத்தில் வழக்கு பதிவு!

நேற்று மட்டும் கோவை முழுவதும் 579 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 16,662 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 315 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பிரச்னைகளும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன.

முக்கியமாக, நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. கோவை சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு கொரோனா `பாசிட்டிவ்’ என ரிசல்ட் வந்திருக்கிறது. இதையடுத்து, அவர் அன்று மாலை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். ஆனால், அங்கு இரண்டு மணி நேரம் காக்கவைத்துவிட்டு, `படுக்கை இல்லை’ என அனுப்பிவிட்டனர்.

கோவை
கோவை

இது குறித்து அந்த நபர் நம்மிடம் கூறுகையில், ‘இ.எஸ்.ஐ மருத்துவமனையிலிருந்து கிளம்பும்போதே, மாநகராட்சியிலிருந்து என்னை அழைத்து, `காலை 9 மணி அளவில் ஆம்புலன்ஸ் வரும் தயாராக இருங்கள்’ என்றனர். நானும் தயாராக இருந்தேன். ஆம்புலன்ஸ் வரவில்லை.

நம்மால், நம் வீட்டில் இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்று நான் கொடிசியாவிலுள்ள கொரோனா சிகிச்சை மையத்துக்குச் சென்றேன். அங்கும் படுக்கை இல்லாமல் வெளியில் காத்திருக்க வேண்டிய சூழல். என்னை மாதிரியே கொரோனா பாதிக்கப்பட்ட சுமார் 30 பேர் வெளியில் நின்றுகொண்டிருந்தோம். வெளியில் குடிப்பதற்குத் தண்ணீர்கூட இல்லை.

இ.எஸ்.ஐ மருத்துவமனை
இ.எஸ்.ஐ மருத்துவமனை

காலையிலிருந்து காத்திருந்து மதியம்தான் உள்ளே அனுமதித்தனர். நாங்கள் அப்படியே வெளியில் நிற்பது, மற்றவர்களுக்கும் பாதுகாப்பு இல்லைதானே... எனவே, படுக்கைகளை விரைந்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கோவையில் சலூன் கடை நடத்திவருகிறார். அவருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகி, கிட்டத்தட்ட இரண்டு நாள்கள் இ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் கொடிசியா மையத்துக்கு அலைந்திருக்கிறார். இரண்டு நாள்கள் போராட்டத்துக்குப் பிறகுதான் அவரை கொடிசியாவில் அனுமதித்துள்ளனர். ``சிகிச்சை அளிப்பதில் எந்தக் குறையும் இல்லையென்றாலும், படுக்கை கிடைப்பதற்கு படாத பாடு பட வேண்டியிருக்கிறது.

காத்திருப்பு
காத்திருப்பு

கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால், படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும்” என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து, விளக்கம் கேட்க சுகாதாரத்துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டோம். அவர்கள் நம் அழைப்பை ஏற்கவில்லை. அவர்களுக்கு வாடஸ்அப்பில் குறுஞ்செய்தியும் அனுப்பியிருக்கிறோம். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் தரும் பட்சத்தில் உரிய பரிசீலனைக்குப் பின் பதிவு செய்யத் தயாராக இருக்கிறோம்!

அடுத்த கட்டுரைக்கு