Published:Updated:

`சீனாவில் 2%, பிற நாடுகளில் 0.2%'- கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர்

அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா பாதிப்பைத் தடுக்க தமிழகத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வுகான் நகரில் தொடங்கியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் தற்போது அனைத்து நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதனால் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் மட்டும் இதுவரை 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களிலும் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா
கொரோனா

இதற்கிடையில், இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா பாதிப்பு தொடர்பாகத் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிப் பேசியுள்ளார், ``சீனா மட்டுமல்லாது அதன் அண்டை நாடான தென் கொரியா, ரஷ்யா, இத்தாலி போன்ற பல நாடுகளிலும் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து நாடுகளிலிருந்தும் சென்னை வரும் விமானப் பயணிகள் கண்காணிக்கப்பட்டு தீவிர சோதனைக்குப் பிறகே வெளியில் அனுப்பப்படுகிறார்கள்.

இதற்காக அரசுத் தரப்பில் மருத்துவர்கள் மற்றும் காவலர்கள் என 75 பேர் கொண்ட குழுவும் விமானநிலையம் தரப்பில் 25 பேர் என மொத்தம் 100 பேர் கொண்ட குழு 24 மணி நேரமும் விமான நிலையத்தைக் கண்காணித்து வருகிறார்கள். விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் ஒரு முறை பயன்படுத்தினால் மீண்டும் அதை முழுவதும் சுத்தம் செய்த பிறகே அடுத்த முறை பயன்படுத்தப்படுகிறது. இதற்கான கூடுதல் ஆம்புலன்ஸ்கள் விமானநிலையத்தில் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா தடுப்பு குறித்து நேற்று அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்ட உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில் தமிழக தலைமைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கொரோனா தொற்றுக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது, மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்ற அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தத்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வழங்கும் அறிவுரைகளை அப்பகுதியில் உள்ளவர்கள் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்பது எங்கள் வேண்டுகோள்.

`கொரோனாவுக்கு 5 மருந்து கசாயம்!' - விவரிக்கும் சித்த மருத்துவர் வீரபாபு

கல்லூரிகள், பள்ளிகள், விடுதிகள், தொழிற்சாலை, அலுவலகங்கள், திருமண மண்டபங்கள், தியேட்டர்கள், வணிகவளாகங்கள் எனப் பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் உள்ள கதவுகள், கைப்பிடிகள் போன்றவற்றைக் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். மேலும், இந்த அனைத்து இடங்களிலும் கொரோனா தொடர்பாக விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம். முக்கியமாகப் பொதுமக்கள் தங்கள் கைகளை நன்கு கழுவி தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தி வருகிறோம். சீனாவில் பாதிப்பு ஏற்பட்டபோதே இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தத் தொடங்கிவிட்டோம்.

விமானநிலையம்
விமானநிலையம்

20% வைரஸ் பரவல் நேரடியாக நடைபெறுகிறது மீதமுள்ள 80% வைரஸ் பாதித்தவர்கள் பயன்படுத்திய பொருள்களைத் தெரியாமல் நாம் பயன்படுத்துவதால் பரவுகிறது. அதனால் இந்த விஷயத்தில் பொதுமக்களுக்கும் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். கொரோனாவைக் கண்டு யாரும் பயம், பதற்றம் கொள்ளத் தேவையில்லை. இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் இந்த மூன்று அறிகுறிகளும் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இதுவரை 1,00,111 பேரை நாங்கள் நேரடியாகக் கண்காணித்து வருகிறோம். அவர்களிடம் தொலைபேசி எண் பெற்றும் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம்.

வெளிநாடுகளிலிருந்து வந்த 54 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதில் அவர்கள் அனைவருக்கும் எதிர்மறையான முடிவுகள், அதாவது வைரஸ் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை. பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் அதே நேரம் அலட்சியமாகவும் செயல்படவேண்டாம். சீனாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 2% பேர், அதாவது 100-ல் இரண்டு பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். அதேபோல் பிற நாடுகளைப் பொறுத்தவரை 0.2%.., 1000 பேரில் இருவருக்கு உயிரிழப்பு ஏற்படுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்

கேரளாவில் வைரஸ் பாதிப்பு உறுதி செய்தபோதே அனைத்து மாவட்ட எல்லைகளும் அலர்ட் செய்யப்பட்டுக் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டன. ஆனால், தற்போது கேரளாவில் எந்த பாதிப்பும் இல்லை. இருந்தும் எங்களின் கண்காணிப்பு இன்றுவரை தொடர்ந்துகொண்டுள்ளது. அதேபோல் விமான நிலையங்களும் முன்பிலிருந்தே கண்காணிக்கப்பட்டு வருகிறது தற்போது கூடுதலாக ரயில் நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற இடங்களிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள் அனைத்திலும் தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் தயார் நிலையில் உள்ளன. அதேபோல் தமிழகத்துக்குத் தேவையாக மருந்துகள், ஊசிகள், முகக் கவசங்கள், மருத்துவர்களின் பாதுகாப்பு உடைகள் போன்ற அனைத்தும் தேவைக்கும் அதிகமாக வைத்துள்ளோம்.

இதற்குத் தேவையான நிதியை வழங்குவதாக முதல்வர் அறிவித்துள்ளார். அதேபோல் தனியார் மருத்துவமனைகளும் அலர்ட் செய்யப்பட்டுள்ளன. அங்கும் தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் மற்றும் மருந்துகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 300 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் இது விரிவுபடுத்தப்படும். எந்தப் பிரச்னைகளையும் எதிர்கொள்ளத் தமிழகம் தயார் நிலையில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு