Published:Updated:

`புதிய தாலுகா; 30 ஆண்டு காத்திருக்கணும்!’ - ராணிப்பேட்டை கலெக்டர்

கலெக்டர் திவ்யதர்ஷினி
கலெக்டர் திவ்யதர்ஷினி

`ராணிப்பேட்டை மாவட்டத்தில், அடுத்த 30 ஆண்டுகளுக்குப் பின்னரே புதிய தாலுகா உருவாக்கப்படும்’ என்று கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

வேலூரிலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டிருக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தில், புதிய கட்டுமானப் பணிகளை நேற்று முன்தினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து, அரக்கோணம் பி.டி.ஓ அலுவலக அடிக்கல்நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ராணிப்பேட்டை கலெக்டர் திவ்யதர்ஷினி, ``மாவட்டத் தலைநகரிலிருந்து ஒரு மணி நேரத்தில் எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் செல்லும் வகையில்தான் ராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை

மேலும், புதிய வருவாய்க் கோட்டம் தோற்றுவிக்கப்பட்டு தாலுகாக்களும் பிரிக்கப்பட்டுள்ளன. எனவே, அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்த மாவட்டத்தில் புதிய தாலுகா உருவாக வாய்ப்பில்லை. அரக்கோணம் பி.டி.ஓ அலுவலகக் கட்டடம் ஓராண்டில் கட்டி முடிக்கப்படும். அரக்கோணத்தில் மார்ச் 29-ம் தேதியன்றுதான் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார்.

அந்த நேரத்தில், நோய்ப் பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தந்தனர். கொரோனாவுக்கு மருந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும், மாஸ்க் அணிவது மட்டுமே. இப்போது, கொரோனா சாதாரண காய்ச்சல்போல வந்தால் போய்விடும் என்ற நிலைமை உள்ளது. அதேநேரம், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் இறக்க நேரிடுகிறது.

கலெக்டர் திவ்யதர்ஷினி
கலெக்டர் திவ்யதர்ஷினி

நம்முடைய மாவட்டத்தில் தினமும் 1,400 பேருக்குத் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் 10 சதவிகித பேருக்குத்தான் `பாசிட்டிவ்’ வருகிறது. கொரோனா நோயாளிகளுக்காக 3,419 படுக்கை வசதிகளும் தயார்நிலையில் உள்ளன. 12 `கோவிட் கேர் சென்டர்’கள் இயங்கிவருகின்றன. நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், மூன்று கோவிட் கேர் சென்டர்கள் மூடப்படும் நிலையில் உள்ளன. 6,000 நோயாளிகள் வந்தாலும் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்படும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு