Published:Updated:

``நான் ஒரு வி.ஐ.பி. என்னை ஒன்றும் செய்யமுடியாது!” - மிரட்டும் வேலூர் இப்ராஹிம்... பெண்ணின் புகார்

பி.ஜே.பி தலைவர்களுடன் இப்ராஹிம்
பி.ஜே.பி தலைவர்களுடன் இப்ராஹிம்

``நான் வி.ஐ.பி. என் மீது புகார் கொடுத்தால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது. எனக்கே போலீஸ் பாதுகாப்பு இருக்கு. மோடி, பி.ஜே.பி எல்லாம் என் பின்னால் இருக்கிறார்கள்”

பி.ஜே.பி பெயரையும் மோடியின் பெயரையும் சொல்லி என்னையும் என் குடும்பத்தினரையும் மிரட்டி வீட்டை அபகரிக்க முயல்கிறார் வேலூர் இப்ராஹிம் என்று காவல்துறையிடம் முறையிட்டு இருக்கிறார் இளம்பெண் ஒருவர்.

கதிஜா
கதிஜா

தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமாத் என்கிற அமைப்பை நிறுவி நடத்திவருபவர் வேலூர் இப்ராஹிம். மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகத் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார் இப்ராஹிம். மேலும், பி.ஜே.பி-க்கு ஆதரவான அமைப்பாகவும் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் செயல்பட்டு வருகிறது. இதனால் வேலூர் இப்ராஹிம்க்கு எதிராகப் பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன இஸ்லாமிய அமைப்புகள். இந்தநிலையில், சில தினங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் சோழபுரம் காவல்நிலையத்தில் கதிஜா என்கிற பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் வேலுார் இப்ராஹிம் மீது வழக்கு பதவி செய்துள்ளது காவல்துறை. அத்துமீறி வீடு புகுந்ததற்கான சட்டப்பிரிவுகளில் இந்த வழக்கு பதிவு செய்துள்ளது.

மற்றொருபுறம் வேலூர் இப்ராஹிரம் சில தினங்களுக்கு முன்பு, இரண்டு பேர் தன்னைக் கத்தியால் குத்த வந்ததாகவும், காவல்துறையின் பாதுகாப்பு தனக்கு இருந்தால் அந்த கத்திக்குத்தில் இருந்து காப்பாற்றப்பட்டதாகவும் ஒரு தகவலைப் பதிவு செய்திருந்தார். அதே நேரம்தான் சோழபுரம் காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. கதிஜா விவகாரத்தில் என்ன நடந்து என்று கதிஜாவிடம் கேட்டபோது, ``வேலூர் இப்ராஹிம் வேறு யாரும் அல்ல, என் அம்மாவின் தம்பிதான். என் அம்மாவின் அக்கா (பெரியம்மா)-வுக்கு சொந்தமாக வீடு ஒன்று ரெட்ஹில்ஸ் காந்திநகர் பகுதியில் உள்ளது. அவருக்கு குழந்தை இல்லாததால் என்னையும் என் அண்ணனையும் அவர் வளர்த்து வந்தார். அவருக்குப் பிறகு, அந்த வீடு எங்களுக்குத்தான் என உயில் எழுதி வைத்திருந்தார். அந்த வீட்டில்தான் நாங்கள் வளர்ந்து வந்தோம். இரண்டு மாதங்களுக்கு முன் என் பெரியம்மா இறந்துவிட்டார். துக்கத்துக்கு வந்த என் மாமா இப்ராஹிம் தொழுகை நடத்த வேண்டும் என்று எங்கள் வீட்டுக்குள் வந்தவர், வீட்டிலிருந்து வெளியேற மறுத்துவிட்டார். அவர் குடும்பத்தையும் இந்த வீட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார்.

சம்பவ இடத்தில் காவல்துறை விசாரணை
சம்பவ இடத்தில் காவல்துறை விசாரணை

எங்களை வீட்டிலிருந்து வெளியேறச் சொன்னதும், நாங்கள் மேல்வீட்டுக்குச் சென்றுவிட்டோம். அதற்குப் பிறகு, என் வீட்டிற்கான கரன்ட், தண்ணீர் எல்லாத்தையும் கட் பண்ணிவிட்டார். நாங்கள் போலீஸில் புகார் கொடுத்தோம். அதற்கு எங்களிடம் வந்து, ``நான் வி.ஐ.பி. என் மீது புகார் கொடுத்தால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது. எனக்கே போலீஸ் பாதுகாப்பு இருக்கு. மோடி, பி.ஜே.பி எல்லாம் என் பின்னால் இருக்கிறார்கள்” என்று மிரட்டினார்.காவல்துறையினர் எங்கள் புகாரை ஆர்.டி.ஓ விசாரணைக்கு மாற்றிவிட்டார்கள்.

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக எங்கள் வீட்டிலிருந்து அவர்கள் வெளியே சென்ற பிறகு, நாங்கள் வெளிக் கதவு, உள் கதவு எல்லாத்தையும் பூட்டினோம். உடனே இரவு வீட்டுக்கு வந்த அவர், கடப்பாரையை வைத்து கதவை உடைத்தார். அவர் மனைவி சுவர் ஏறிக் குதித்து கதவை உடைத்து உள்ளே வந்தார். அதைத் தட்டிக்கேட்கப்போன என் அண்ணன், அப்பாவை அவர் திட்ட இவர்கள் திருப்பி திட்ட தள்ளுமுள்ளாகியது. அதனால் என் அப்பா, அண்ணன் இருவர் மீதும் புகார் கொடுத்தார்.

`அவர் இல்லை; மகளுடன் வறுமையில் தவிக்கிறேன்!’ -முதல்வரின் காலில் விழுந்து கதறிய போலீஸ்காரரின் மனைவி

எங்கள் வீட்டை ஆக்கிரமித்துவிட்டு எங்களை மிரட்டியதால் நாங்கள் சோழவரம் காவல்நிலையத்தில் மீண்டும் புகார் கொடுத்தோம். அங்கே வழக்கு பதிவு செய்துள்ளனர். என் அண்ணனையும் அப்பாவையும்தான், தீவிரவாதிகள் தன்னை தாக்க வந்ததாக அவர் பொய்யாகச் சொல்லிவருகிறார். அடுத்தவர் வீட்டை அபகரித்துவிட்டு அதற்குத் துணையாக அரசாங்கத்தையும் இழுக்கிறார்” என்று கண்கலங்கினார்.

கதவை உடைக்கும் இப்ராஹிம் மனைவி.(வீடியோபதிவில்)
கதவை உடைக்கும் இப்ராஹிம் மனைவி.(வீடியோபதிவில்)

மேலும், சில வீடியோக்களையும் நம்மிடம் அளித்தார் கதிஜா. அந்த வீடியோவில் ஒரு வீட்டின் கதவை இப்ராஹிம் உடைப்பதும் மறுபுறம் அவர் மனைவி கடப்பாரையை வைத்து உடைப்பதும் இருக்கிறது. மற்றொரு வீடியோவில், ``நான் ஒரு வி.ஐ.பி என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது” என்று இப்ராஹிம், கதிஜா குடும்பத்தினரிடம் உரையாடுவதும் பதிவாகியிருக்கிறது. தற்போது காவல்துறையின் பாதுகாப்பு இப்ராஹிமுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்மீது வழக்கு பதிவாகியிருப்பதால் எந்த நேரமும் அவர் கைது செய்யப்படலாம் என்கிற நிலை இருக்கிறது. மற்றொரு புறம் கதிஜா தரப்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அந்த வீட்டுக்குள் இப்ராஹிம் நுழையக் கூடாது என்று தடை வாங்கியிருக்கிறார்கள். கதிஜா வசிக்கும் வீட்டுக்கு அருகில் வேலூர் இப்ராஹிமின் சொந்தவீடு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் குறித்து வேலூர் இப்ராஹிமைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ``என் மீது தனிப்பட்ட வஞ்சகத்தை மனதில் வைத்து இப்படி ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனக்கு பாதுகாப்பாக இருந்த காவல்துறையினரே எனக்குத் துணையாக இந்தச் சம்பவந்தில் ஈடுபட்டதாகப் புகாரில் சொல்லியிருக்கிறார்கள். அதைக்கூட விசாரிக்காமல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வேலூர் இப்ராஹிம்
வேலூர் இப்ராஹிம்

சாதாரண குடும்ப விவகாரத்துக்கு மோடி பெயரை நான் ஏன் பயன்படுத்தப்போகிறேன். அந்த வீட்டை என் அக்கா 2012-ம் ஆண்டு என் பெயருக்கு எழுதித் தந்துவிட்டார். அவர்கள்தான் அத்துமீறி என் வீட்டுக்குள் நுழைந்தனர். அதனால்தான் இப்போது ஆர்.டி.ஓ விசாரணையில் இருக்கிறது. என் மீது கத்திக்குத்து நடத்தவும் முயற்சிகள் நடந்தன. இதற்குப் பின்னால் இஸ்லாமிய அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. என் உறவினரை வைத்து என் மீது சிக்கல் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள்” என்கிறார் அவர்.

பின் செல்ல