Published:Updated:

உதவிக்கு யாரும் வரல; தள்ளுவண்டியில் 4 கி.மீ தூரம் பயணம்!-தங்கையின் கணவரை காப்பாற்றப் போராடிய அக்காள்

உடல்நிலை சரியில்லாத ஒருவரை தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற நிலையில், அவர் உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தள்ளுவண்டி
தள்ளுவண்டி

பொருளாதாரம், விஞ்ஞானம் மற்றும் மருத்துவத்துறையிலும் வளர்ச்சியடைந்துவிட்டோம் என்று நாம் பெருமை பொங்கிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில்தான், மூன்று வேளை உணவைக் கூட உறுதிப்படுத்த முடியாமல், அடிப்படைத் தேவையான மின்சாரம், குடிநீர் போன்றவைகூட கிடைக்காமல் லட்சக்கணக்கான மக்கள் இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதை உறுதிசெய்யும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படியான ஒரு சம்பவம் தற்போது புதுச்சேரியை ஒட்டிய தமிழகப் பகுதியில் நடந்திருக்கிறது.

தள்ளுவண்டியில் சுப்பிரமணியன்
தள்ளுவண்டியில் சுப்பிரமணியன்

செங்கல் சூளையில் கற்களை அடுக்கி எடுத்துச்செல்லும் தள்ளுவண்டியில் ஒருவர் கிடத்தப்பட்டிருக்க, அதை வயதான ஒரு பெண்மணி தள்ளிக்கொண்டு செல்வதைப் போன்ற ஒரு புகைப்படம் நேற்று சமூக வலைதளத்தில் உலா வந்தது. பார்ப்பவர் மனதைக் கலங்கவைக்கும் அந்தப் புகைப்படம் குறித்து விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் நம்மைப் பதற வைத்தது. விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள ஒழிந்தியாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர், மல்லிகா.

இருளர் சமூகத்தைச் சேர்ந்தவரான இவர், புதுச்சேரி மாநிலம் திருக்கனூரை அடுத்த சுத்துக்கேணி என்ற பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் செங்கல் சூளையில் தங்கி வேலை செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மல்லிகாவைப் பார்க்க அவரது தங்கை பவுணும், அவரது கணவர் சுப்பிரமணியனும் (65) சுத்துக்கேணி வந்தனர். ஏற்கெனவே காச நோயால் பாதிக்கப்பட்டிருந்த சுப்பிரமணியனுக்கு இருமல் அதிகமாக இருந்ததால், சில தினங்கள் அங்கேயே தங்கி ஓய்வெடுத்திருக்கிறார்.

இந்தப் படத்தை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டவர்கள், அந்த நேரத்தில் அவசர உதவி 100 அல்லது 108 எண்ணுக்கு போன் செய்திருந்தால், சுப்பிரமணியன் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும்.
காவல்துறை

நேற்று முன்தினம் (30.10.2019) அன்று, சுப்பிரமணியனின் உடல்நிலை மிகவும் மோசமடையவே, அருகிலிருக்கும் புதுச்சேரி காட்டேரிக்குப்பம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல முடிவெடுத்திருக்கிறார்கள். காரில் அழைத்துச்செல்லுமளவிற்கு பொருளாதார வசதி இல்லை என்பது ஒருபுறமிருக்க, செல்போன் வைத்திருக்காத, போதுமான படிப்பறிவைக்கூட பெற்றிருக்காத மல்லிகாவும் அவரது கணவரும், செங்கல்லை ஏற்றும் தள்ளு வண்டியில் சுப்பிரமணியனைப் படுக்கவைத்து, 4 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் காட்டேரிக்குப்பம் அரசு மருத்துவமனைக்கு தள்ளிக்கொண்டு சென்றிருக்கிறார்கள்.

`உதவித்தொகை கேட்டு ஒரு வருஷமா அலையுறேன்; நடக்கல!' - 92 வயது சுதந்தரப் போராட்ட தியாகி வேதனை

ஆனால், அங்கு சுப்பிரமணியனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்கள். இறந்த சுப்பிரமணியனை ஏற்றிச்செல்ல மருத்துவமனை ஆம்புலன்ஸ் உதவியைக் கேட்டிருக்கிறார் மல்லிகா. ஆனால், தமிழகப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஆம்புலன்ஸ் அனுப்ப மருத்துவமனை தரப்பு மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

தள்ளுவண்டி
தள்ளுவண்டி

வேறு வழியில்லாமல், அதே வண்டியில் சுப்பிரமணியனின் சடலத்தை மீண்டும் செங்கல் சூளையை நோக்கித் திரும்பியிருக்கிறார் மல்லிகா. அப்போது அந்த பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காட்டேரிக்குப்பம் (புதுச்சேரி) உதவி ஆய்வாளர் முருகானந்தம், மல்லிகாவிடம் விசாரித்திருக்கிறார். அதன்பிறகு, இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் கோட்டக்குப்பம் பகுதியின் நிர்வாகி அகமது அலி என்பவரைத் தொடர்புகொண்டு, இலவச ஆம்புலன்ஸ் உதவியைக் கேட்டிருக்கிறார். அவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்க, சுப்பிரமணியனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று அடக்க செய்திருக்கிறார்கள்.

``இந்தப் படத்தை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டவர்கள், அந்த நேரத்தில் அவசர உதவி 100 அல்லது 108 எண்ணுக்குப் போன் செய்திருந்தால் சுப்பிரமணியன் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கலாம்'' என்று ஆதங்கப்படுகிறார்கள் காவல் துறையினர்.