Published:Updated:

`சொந்தக் கட்டடமும் இல்ல; போக்குவரத்து வசதியும் இல்ல!’ - அரசு அருங்காட்சியகத்தின் அவல நிலை!

இரா.கோசிமின்
ஆர்.எம்.முத்துராஜ்

``முன்பை விட தற்போது ஓரளவுக்குக் கூட்டம் வருகிறது. விருதுநகரில் அருங்காட்சியகம் வைக்கும் அளவுக்கு அரசுக்குச் சொந்தமான கட்டடம் எதுவும் இல்லை"

அருங்காட்சியகம்
அருங்காட்சியகம் ( ஆர்.எம்.முத்துராஜ் )

விருதுநகர் மாவட்ட அரசு அருங்காட்சியகம் 18 ஆண்டுகளாக வாடகை கட்டடத்திலேயே இயங்கி வருவதால் சொந்தக் கட்டடம் கட்ட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அருங்காட்சியகம்
அருங்காட்சியகம்
ஆர்.எம்.முத்துராஜ்

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனை அருகே அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. பழங்காலப் பொருள்களை பாதுகாப்பாக வைத்து பராமரிப்பதும், பார்வையாளர்களை பார்க்க வைப்பதும்தான் அருங்காட்சியகத்தின் நோக்கம். இங்கே பழங்காலச் சிற்பங்கள், பழங்கால நாணயங்கள், மரச்சிற்பங்கள், அயல்நாட்டு நாணயங்கள், முதுமக்கள் தாழி, ஓவியங்கள், இசைக்கருவிகள் போன்றவை விளக்கங்களுடன் வைக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் கூட ஒரே கல்லில் ஆன இரண்டு இசைக்கலைஞர்களின் சிற்பத்தைக் கண்டுபிடித்து இங்கே கொண்டு வந்துள்ளனர். அருங்காட்சியத்தைப் பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.5, சிறியவர்களுக்கு ரூ.3 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் போக்குவரத்து வசதி இல்லாத இந்த அருங்காட்சியகத்துக்கு போதிய அளவில் பார்வையாளர்கள் வருவதில்லை.

அருங்காட்சியகம்
அருங்காட்சியகம்
ஆர்.எம்.முத்துராஜ்

நாளொன்றுக்கு சராசரியாக 20 பேர் மட்டுமே வருகை தருகின்றனர். விடுமுறை நாள்களில் மட்டும் சற்று எண்ணிக்கை அதிகமாக இருக்கும். வாடகை கட்டடத்தில் இயங்குவதால் அரசு நிதியும் வீணாகிறது. மாதம் ரூ.16,000 வாடகை செலுத்தப்பட்டு வருகிறது. எனவே, அரசு கட்டடத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பரத்ராஜா என்பவர் கூறும்போது, “எங்கோ ஓர் இடத்தில் பராமரிப்பின்றி கிடக்கும் பழங்காலப் பொருள்களை எடுத்து வந்து மக்கள் பார்வையிடும் வகையில் அருங்காட்சியகத்தில் வைக்கின்றனர். இவற்றை பொதுமக்கள் முழுமையாகப் பார்வையிடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால், தற்போது அருங்காட்சியகம் அமைந்துள்ள இடத்தில் போதிய இடவசதி இல்லை. இதனால் சிற்பங்கள் எல்லாம் வெளியே கிடக்கின்றன.

சிற்பம்
சிற்பம்
ஆர்.எம்.முத்துராஜ்

வாடகை கட்டடத்திலேயே இயங்குவதால் மாதம்தோறும் பல்லாயிரம் ரூபாய் வாடகைக்காக மட்டுமே செலவழிக்கப்படுகிறது. ஆனால், போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் பொதுமக்களோ, மாணவர்களோ இங்கே வந்து பார்வையிட முடியவில்லை. அருங்காட்சியகம் இருக்கும் இடம் கூட பலருக்கு தெரியவில்லை. எனவே, போக்குவரத்து வசதிகள் நிறைந்த இடத்தில் சொந்தக் கட்டடத்தில் அரசு அருங்காட்சியகம் அமைத்து தர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கிருஷ்ணம்மாளிடம் கேட்டபோது, ``2001 முதல் அருங்காட்சியகம் வேறு ஒரு இடத்தில் இருந்தது. அங்கே கூட்டமே வரவில்லை. பின்னர் 2003 ஆம் ஆண்டு முதல் தற்போது உள்ள இடத்தில் செயல்பட்டு வருகிறது. அருங்காட்சியகம் குறித்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். முன்பை விட தற்போது ஓரளவுக்குக் கூட்டம் வருகிறது. விருதுநகரில் அருங்காட்சியகம் வைக்கும் அளவுக்கு அரசுக்குச் சொந்தமான கட்டடம் எதுவும் இல்லை. நாங்களும் பல இடங்களை தேடியுள்ளோம்.

சிற்பம்
சிற்பம்
ஆர்.எம்.முத்துராஜ்

தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள விளையாட்டு மைதானம் அருகே இடம் கேட்டுள்ளோம். அங்கே இடம் கிடைத்தவுடன் அரசிடம் நிதி பெற்று அருங்காட்சியகத்துக்கு புதிதாகக் கட்டடம் கட்டிவிடுவோம். பின்னர் தேவையான அனைத்து வசதிகளையும் அங்கே செய்துவிடலாம்” எனத் தெரிவித்தார்.