Published:Updated:

`சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டமா?’ -உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

சென்னை
சென்னை

தற்போதுள்ள ஊரடங்கு, வரும் 30-ம் தேதியோடு முடிவடைகிறது. இதற்கிடையில் மருத்துவக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவை தீவிரமாக அமல்படுத்துவது தொடர்பாக, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வழக்குகள் நேற்று பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்பட்டன.

சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் கட்டுக்குள் கொரோனா... முதல்வர் சொல்வது உண்மைதானா?
சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

பட்டியலிடப்பட்ட வழக்குகளை விசாரித்து முடித்த பின்னர் நீதிபதிகள், தமிழக அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணனிடம், `தமிழகத்தில் கொரோனா தொற்று 36,000-த்துக்கும் அதிகமானோருக்கு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக, சென்னையில் வைரஸ் பரவல் அதிகமாக இருக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன?’ என்று கேள்வி எழுப்பினர். தாமாக முன்வந்து வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள் குடிமகனாக, பொதுமக்களின் நலனின் அக்கறை கொண்டு இந்தக் கேள்வியை எழுப்பியதாகத் தெரிவித்தனர்.

மேலும், சென்னையில் ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்த திட்டம் இருக்கிறதா என்றும், ஊரடங்கு தொடர்பாக தற்போதைய நடவடிக்கைகளில் மாற்றம் எதுவும் செய்யப்பட இருக்கிறதா என்றும் கேள்வியை முன்வைத்தனர். இதுதொடர்பாக அரசிடம் விளக்கம் கேட்டு பதிலளிக்கும்படி அரசு வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் அவகாசம் கொடுத்திருந்தனர்.

கொரோனா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு

அந்த வகையில், உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அளித்த பதிலில், சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவக் குழு அவ்வப்போது அளிக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுவருகிறது.

தற்போதுள்ள ஊரடங்கு, வரும் 30-ம் தேதியோடு முடிவடைகிறது. இதற்கிடையில் மருத்துவக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இ-பாஸ் நிறுத்தம்? -கொரோனா பரவலால் `திடீர்' நடவடிக்கை

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சென்னையில் இ-பாஸ் வழங்குவது நிறுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறதே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, சென்னையில் இ-பாஸ் வழங்குவது நிறுத்தப்படவில்லை என்றும் அப்படி வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என்றும் அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

சென்னை சென்ட்ரல் (எம்.ஜி.ஆர்) ரயில் நிலையம்
சென்னை சென்ட்ரல் (எம்.ஜி.ஆர்) ரயில் நிலையம்

தமிழக அரசின் விளக்கத்தைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், இதுதொடர்பாக வரும் திங்கள்கிழமை முழுமையாக விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர். சென்னையில் ஊரடங்கைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த வழக்கு இதுவரை பட்டியலிடப்படவில்லை. அந்த வழக்கு வரும் திங்கள்கிழமைக்கு மேல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு