Published:Updated:

`சுதந்திர தினத்தில் எந்த மரியாதையும் இல்லை!'- கண்ணீர் வடிக்கும் தர்மபுரி தியாகியின் மனைவி

எம்.வடிவேல்

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் உள்ளிட்ட அரசு விழாக்களில் தியாகிகளுக்கு உரிய மரியாதை அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கணவருடன் பார்வதி
கணவருடன் பார்வதி

தர்மபுரி மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் 47 பேர் ஓய்வூதியம் பெற்றுவருகிறார்கள். ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகியவற்றின்போது தியாகிகளையும் அவர்களின் வாரிசுகளையும் அழைத்து சிறப்பு மரியாதை அளிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், தற்போது தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தியாகிகளுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காரணம், சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தியாகிகள் பலர் மறைந்துவிட்டனர். அவர்களின் மனைவிமார்களை அழைத்து கௌரவப்படுத்தி வருகின்றனர். ஆனால், தர்மபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு விழாக்களில் தியாகிகளுக்கு உரிய மரியாதையும் அரசு வழங்கும் சிறப்புச் சலுகைகளையும் தருவதில்லை என்கின்றனர்.

பார்வதி
பார்வதி

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் முள்ளுவாடி பகுதியைச் சேர்ந்த சுதந்தரப் போராட்ட தியாகி வடிவேலின் மனைவி பார்வதியைச் சந்தித்துப் பேசினோம். ``2017 ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் சமயம், அவர் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையிலிருந்தார். எழுந்து நிற்கக் கூட உடலில் பலம் இல்லை. ஆனால், சுயநினைவு மட்டும் நன்றாக இருந்தது. சுதந்திர தின விழாவுக்கான அழைப்பிதழ் வந்து சேர்ந்தது. அவரது உடல் நிலையைக் கருத்தில்கொண்டு குடும்ப உறுப்பினர்கள் சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என முடிவு செய்தோம். அன்று முதல் அவர் சாப்பிடுவதை நிறுத்திவிட்டார். இரண்டு நாள்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்துவிட்டோம். பிறகு வாகன வசதி ஏற்பாடு செய்து சுதந்திர தின விழாவுக்கு அழைத்துச் செல்வதாக உறுதி அளித்த பிறகு சாப்பிட ஆரம்பித்தார். அவர் விருப்பப்படியே சுதந்திர தின விழாவுக்கு அழைத்துச் சென்றோம். அடுத்த மாதமே எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார். கடைசிவரை சுதந்திர இந்தியாவின் மீது அளவற்ற பற்றுக்கொண்டிருந்தார்.

அவரின் நினைவாக, ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தின விழாவின்போது தேசியக் கொடிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வருவேன். என்னைப் போலத் தியாகிகளின் மனைவிமார்கள் பலரும் விழாவில் கலந்துகொள்ள வருவார்கள்.

ஆனால் கடந்த ஓர் ஆண்டாகத் தியாகிகளுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை. பலர் கிராமப் பகுதியிலிருந்து வரவேண்டியுள்ளது. கொஞ்சம் லேட்டாக விழாவுக்கு வந்தால்கூட விழாவில் அனுமதிப்பதில்லை. இதைப் பற்றிக் கடந்த குடியரசு தினத்தன்று மாவட்ட ஆட்சியர் மலர்விழியிடம் தெரிவித்தோம். அப்போது மட்டும் கேட்டுக்கொண்டார். இந்தமுறை சுதந்திர தினத்துக்கு நான் உள்ளிட்ட சிலருக்கு அழைப்பிதழ் அனுப்பவில்லை. இதற்கு முன்பு இருந்த மாவட்ட ஆட்சியர்கள் அமுதா, விவேகானந்தன் போன்றவர்கள் தியாகிகளுக்கு உரிய மாரியாதை அளிப்பார்கள். தியாகிகளுக்கு என்று குறைதீர்ப்பு கூட்டம், மருத்துவ முகாம் என ஸ்பெஷலாக ஏற்பாடு செய்து எங்கள் குறைகளைக் கேட்டறிந்து உதவி செய்வார்கள். ஆனால் இப்போது அப்படியொரு ஏற்பாட்டைச் செய்வதே இல்லை'' என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.

Vikatan

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தியாகிகளைக் கண்காணிக்கும் க்யூ பிரிவு துணை ஆட்சியர் வெங்கட்ராமனிடம் பேசினோம். ``மாவட்ட கருவூலத்திலிருந்து தியாகி ஓய்வூதியம் பெறுபவர்களின் முகவரியைப் பெற்று அழைப்பிதழ் அனுப்பினோம்" என்றவரிடம், பார்வதியம்மாளின் குற்றச்சாட்டுகள் பற்றி தெரிவித்தோம். `` இதுகுறித்து விசாரிக்கிறேன்" என்றதோடு முடித்துக் கொண்டார்.