Published:Updated:

`அரசுப் பேருந்துகளில் காணாமல் போன தனிமனித இடைவெளி!’ - மறைமுக உத்தரவு காரணமா?

அதிகப் பயணிகளுடன் பேருந்து
அதிகப் பயணிகளுடன் பேருந்து

போக்குவரத்துக்கழக ஊழியர்கள், கொரோனா விஷயத்துல ரொம்பவே கவனமாக இருக்கணும். இவங்களோட வாழ்க்கையும், தான் அடங்கியிருக்கு. பயணிகளும் கூட, தங்களது நலன் கருதியாவது, விழிப்புணர்வோடும் நடந்துக்கணும்.”

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பினால், பேருந்துகளில் மிகவும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தமிழக அரசு அறிவித்தது. சமூக இடைவெளி முறையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனப் போக்குவரத்துக்கழகங்களுக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், டெல்டா மாவட்டங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் அதிக எண்ணிக்கையில் பயணிகள் அனுமதிக்கப்படுவதாகவும், இதனால் இப்பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலுக்கான வாய்ப்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். அதிகாரிகளின் மறைமுக உத்தரவினால்தான், அதிகளவில் பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தாங்கள் தள்ளப்படுவதாகப் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

பேருந்துகள்
பேருந்துகள்

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சமூக இடைவெளியைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டிய நேரமிது. இதனால்தான் பேருந்துகளில் 60 சதவிகிதத்துக்கும் குறைவான பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனத் தமிழக அரசு அறிவித்தது. ஆனால், போக்குவரத்துக் கழக அதிகாரிகள் இந்த உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, கொஞ்சமும் சமூகப் பொறுப்பு இல்லாமல் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய திருவாரூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெற்றி, ``சமூக இடைவெளியைப் பத்திப் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் கொஞ்சம் கூட கண்டுக்குறதே இல்லை. திருவாரூர்- திருத்துறைப்பூண்டி பேருந்துகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியுது. திருவாரூர்-கும்பகோணம், திருவாரூர்-மயிலாடுதுறை, திருவாரூர்-நாகப்பட்டினம் பேருந்துகளிலும் கூட 60-70 பயணிகளை அழைச்சிக்கிட்டுப் போறாங்க. பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் கிளம்புபோது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குற மாதிரி கண் துடைப்பு செய்றதுக்காக, 20-30 பயணிகளை அனுமதிக்குறாங்க. ஆனால் போற வழியெல்லாம், எவ்வளவு பயணிகள் நின்னுக்கிட்டு இருந்தாலும் எல்லாரையுமே கணக்கு வழக்கு இல்லாம ஏத்திக்கிட்டுப் போறாங்க.

இந்தப் பேருந்துகளில் மட்டுமல்ல... தஞ்சாவூர்ல இருந்து புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட ஊர்களுக்குச் சென்றுவரக்கூடிய பேருந்துகளிலும் கூட மக்கள் கூட்டம் அலைமோதுது. போக்குவரத்துக்கழக ஊழியர்கள், கொரோனா விஷயத்துல ரொம்பவே கவனமாகவும், மனசாட்சிப்படியும் நடந்துக்கணும். இதுல இவங்களோட வாழ்க்கையும், குடும்பத்தினரோட எதிர்காலமும்தான் அடங்கியிருக்கு. பயணிகளும் கூட, தங்களது நலன் கருதியாவது, விழிப்புணர்வோடும், கட்டுப்பாடோடும் நடந்துக்கணும்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து போக்குவரத்துக்கழக ஓட்டுநர்களிடம் நாம் பேசியபோது, ‘’எங்களுக்கும் இதுல உடன்பாடு இல்லைதான். நாங்களும் கொரோனா பயத்தோடுதான் வேலைபார்த்துக்கிட்டு இருக்கோம். எங்களுக்கும் குடும்பம் இருக்கு. ஆனால் என்ன செய்றது... எங்களோட உயரதிகாரிகள் எங்களை நிர்பந்திக்கிறாங்க. எவ்வளவு பயணிகள் வந்தாலும் ஏத்துங்க... கலெக்‌ஷன் குறையக்கூடாதுனு சொல்றாங்க. சமூக இடைவெளியைப் பத்தியெல்லாம் கண்டுக்காதீங்கணு சொல்லிட்டாங்க. இது அவங்களோட மறைமுக உத்தரவு. இதை நாங்க எப்படி மீற முடியும்.’’என ஆற்றாமையோடு தெரிவித்தார்கள்.

 `ஒரு மாத சம்பளம்; பயணிகளுக்கு இலவச மாஸ்க்!’ - அசத்தும் தேனி அரசுப் பேருந்து நடத்துநர்

போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தரப்பில்பேசியபோது, ``சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கணும்தான் நாங்கள் விரும்புறோம். ஆனால் என்ன செய்றது? ஏற்கெனவே போக்குவரத்துக்கழகங்கள் கடுமையான நஷ்டத்துல இருக்கு. கொரோனா பிரச்னைக்கு முன்னாடி, பேருந்துகள் இயல்பாக ஓடிக்கிட்டு இருந்தப்பவே, ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் வரை நஷ்டத்துல இயங்கிக்கிட்டு இருந்துச்சு. ஊழியர்களுக்குச் சம்பளம் போடவும், உதிரிபாகங்கள் வாங்கவே திணறிக்கிட்டு இருந்தோம்.

பேருந்து நிறுத்தத்தில் கண்டெடுக்கப்பட்ட கொரோனா நோயாளி சடலம்! - அதிர்ச்சியில் குடும்பத்தினர்

இந்த நெருக்கடிகளை எல்லாம், ஊழியர்களின் பி.எஃப், இன்சூரன்ஸ் பணம் ரூ.7,500 கோடியை வச்சி சமாளிச்சதுனாலதான் சமீபத்துல பெரிய பிரச்னையே உருவாச்சு. ஆனால், தமிழக அரசு இதையெல்லாம் கண்டுக்குறதே இல்லை. எதுவாக இருந்தாலும் போக்குவரத்துக்கழகமே சமாளிச்சாகணும். கொரோனா ஊரடங்குக்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமாயிடுச்சு. இப்ப 50 சதவிகிதப் பேருந்துகள்தான் ஓடிக்கிட்டு இருக்கு. இதுலயும் கூட குறைவான எண்ணிக்கையில்தான் பயணிகளை ஏத்தணும்னு சொன்னால், நிலைமை ரொம்ப மோசமாயிடும். போக்குவரத்துக்கழகங்களோட எதிர்காலமே கேள்விக்குறியாயிடும்" எனத் தெரிவித்தார்கள்.

அடுத்த கட்டுரைக்கு