Published:Updated:

தரம் இல்லாத பணி, 15 வருடங்களாகத் தண்ணீர் இல்லை!- கரிகால சோழன் பயன்படுத்திய குளத்துக்கு நேர்ந்த அவலம்

குளம்
குளம்

கரிகாலன் பயன்படுத்திய கோயில் குளமே 15 வருடங்களாக வறண்டு கிடப்பது பெரும் வேதனை. இந்தக் குளத்தை தூர் வார தண்ணீரை நிரப்ப வேண்டும் எனப் பல முறை கோரிக்கை வைத்து வருகிறோம்.

மாமன்னன் கரிகாலன் சோழன் பயன்படுத்திய கோயில் குளம் தண்ணீர் இல்லாமல் பல ஆண்டுகளாக வறண்டு கிடக்கிறது. ஆற்றிலிருந்து அந்தக் குளத்துக்குத் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பி விட வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் குளத்தை தூர் வாருவது உட்பட பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். ஆனால், அரசு அதிகாரிகள் இதில் அக்கறை காட்டாமல் மெத்தனமாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

கோயில்
கோயில்

தஞ்சாவூர் நகரப் பகுதியான கரந்தையில் சுமார் 1,400 ஆண்டுகள் பழைமையான, கருணாசாமி என்ற கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் திருநாவுக்கரசர் பாடல் பெற்ற சிறப்பு மிக்க தலம். சோழ மன்னன் கரிகால சோழனுக்கு கருங்குஷ்டம் என்னும் தோல் நோய் இருந்து வந்தது. அவர் அந்த நோயிலிருந்து விடுபடவும், நோய் குணமாவதற்கும் பல்வேறு சிகிச்சை முறைகளைக் கையாண்டார். ஆனால், அவை எந்தப் பலனையும் தரவில்லை.

இந்த நிலையில் கருணாசாமி கோயில் குளத்தில் 48 நாள்கள் நீராடினால், தோல் நோய் நீங்கும் எனக் கரிகால சோழன் கனவில் அசரீரி வர அதன்படியே நீராடினார். இதையடுத்து கரிகாலனுக்கு தோல் நோய் நீங்கியது என்பது ஐதிகம். இதேபோல் தோல் நோய் உடையவர்கள் தினமும் 48 நாள்கள் இங்கு வந்து வசிஷ்டேஸ்வரரை வழிபட்டு குளத்தில் நீராடினால் தோல் நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

குளம்
குளம்

இத்தகைய சிறப்பு மிக்க இக்குளத்தில் காவிரியின் கிளையாறான வடவாற்றில் இருந்து வாய்க்கால் வழியாகத் தண்ணீர் வந்து நிரம்பும். அரை கி.மீ தொலைவுடைய அந்த வாய்க்கால் நாளடைவில் ஆக்கிரமிக்கப்பட்டதால் குளத்துக்குத் தண்ணீர் வருவது தடைபட்டது.

வரலாற்று சிறப்புமிக்க இந்தக் குளத்தை துார்வாரி, தண்ணீர் நிரம்பினால் கோயிலும் புனிதமாகும். அப்பகுதி நீர் மட்டம் உயரும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து 2014-ம் ஆண்டு 6.6 லட்சம் மதிப்பில், வடவாற்றிலிருந்து குளம் வரை சுமார் 185 மீட்டர் அளவுக்குப் பள்ளம் எடுத்து புதிதாகக் குழாய் அமைக்கப்பட்டது. ஆனால், டெண்டர் எடுத்தவர்கள் தரம் இல்லாமல் பணி செய்ததால் தற்போது வரை குளத்துக்குத் தண்ணீர் வரவில்லை.

தூர்வாரப்படும் குளம்
தூர்வாரப்படும் குளம்

இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து தாங்களாகவே நிதி திரட்டி ஜே.சி.பி எந்திரம் மூலம், குளத்தில் மண்டிக் கிடக்கும் புதர்கள் மற்றும் கருவேல மரங்கள் ஆகிவற்றை அகற்றும் பணியைச் செய்தனர்.

இது குறித்து சிலரிடம் பேசினோம், ``மாமன்னன் கரிகால சோழனால் கட்டப்பட்டது கல்லணை. அத்துடன் அவரது ஆட்சியில் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியதற்கான ஆதாரங்கள் உள்ளன. எந்தத் தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் மேட்டூரில் இருந்து வரும் நீரைத் தேக்கி எந்தப் பகுதிக்கு எவ்வளவு நீர் தேவை என்பதை அறிந்து அதற்கேற்றாற்போல் திறந்து விடுவதற்காகக் கல்லணை கட்டப்பட்டுள்ளது.

தூர்வாரப்படும் குளம்
தூர்வாரப்படும் குளம்

கல்லணையை நம்பியே டெல்டா மாவடத்தின் கடைமடை பகுதி வரை உள்ளது. இதுதான் இப்பகுதியில் விவசாயம் செழிக்கவும் காரணமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் கரிகாலன் பயன்படுத்திய கோயில் குளமே 15 வருடங்களாக வறண்டு கிடப்பது பெரும் வேதனை. இந்தக் குளத்தை தூர்வாரி தண்ணீரை நிரப்ப வேண்டும் எனப், பல முறை கோரிக்கை வைத்ததையடுத்து அ.தி.மு.க அரசு நிதி ஒதுக்கி பணியைச் செய்தது. ஆனால், இதில் கூட டெண்டர் எடுத்தவர்களும் ஆட்சியாளர்களும் கமிஷன் பெற்றுக் கொண்டு பணியை சரியாகச் செய்யவில்லை.

குறிப்பாக, ஆற்றுப் பகுதியிலிருந்து நிலத்துக்குள் குழாய் பதிக்கும் பணியில் தரம் இல்லாத குழாயைப் பயன்படுத்தியதால் மண்ணைக் கொண்டு மூடும்போதே அந்தக் குழாய் உடைந்து விட்டது. இதனால் இந்தப் பணி நடைபெற்று 5 வருடத்துக்கு மேல் ஆகியும் தண்னீர் இல்லாமல் குளம் வறண்டுதான் கிடக்கிறது. கடந்த மாதத்தில் கல்லணையில் அதிக அளவில் தண்ணீர் வந்தது. ஆனால், இது போன்ற காரணத்தால் பல குளங்கள் நிரம்பவில்லை.

குளம்
குளம்

கரிகாலன் பயன்படுத்திய இந்தக் குளமும் நிரம்பாமல் வீணாக தண்ணீர் கடலில் கலந்தது. இப்போது நாங்கள் நிதி திரட்டி இந்தக் குளத்தை தூர் வாரி வருகிறோம். இதைப் பலரும் பாராட்டி வருகிறார்கள். ஆனால், அரசு நினைத்தால்தான் கரிகாலன் குளத்துக்குத் தண்ணீர் வரும் என்பதால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மீண்டும் குழாய் பதித்து குளத்துக்குத் தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு