Published:Updated:

`சாப்பாட்டுக்கே வழியில்லை; ஊருக்கு அனுப்புங்க!' -திருச்சியில் தொடரும் வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்

வடமாநில தொழிலாளர்கள்
வடமாநில தொழிலாளர்கள்

"கொரோனா ஊரடங்கு காரணமாக சாப்பாட்டுக்கே வழியில்லை. அதனால், எங்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள்" என வடமாநில தொழிலாளர்கள் நடத்தும் போராட்டங்களால் திருச்சியில் பரபரப்பு நிலவுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக நாடுமுழுவதும் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும், தினக்கூலியை நம்பிவாழும் கூலித் தொழிலாளர்கள் படும்பாடுகளைச் சொல்ல வார்த்தைகளில்லை.

அந்தவகையில் தமிழகத்தில் வேலைக்காக வந்த வடமாநில தொழிலாளர்கள் சென்னை, கோவை, பெரம்பலூரைத் தொடர்ந்து, திருச்சியிலும் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி அடுத்தடுத்து போராட்டங்களில் குதித்து வருகின்றனர்.

நடந்தே போகிறோம்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் இயங்கிவந்த தனியார் கம்பெனியில் பணியாற்றிய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 6 இளைஞர்கள், உணவுக்கே வழியில்லாத நிலையில் சொந்த ஊருக்கு நடந்தே செல்ல முடிவு செய்தனர்.

வடமாநில தொழிலாளர்கள்
வடமாநில தொழிலாளர்கள்

திருச்சி கொள்ளிடம் பாலம் அருகே வந்துகொண்டிருந்தபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் சாப்பிட்டு 2 நாள்கள் ஆனதாகவும், வருமானம் இல்லாததால், சாப்பாட்டுக்கே மிகவும் சிரமப்படுகிறோம் எனக் கலங்கினர். அதையடுத்து, கம்பெனி நிர்வாகத்தை அழைத்து போலீஸார் ஊரடங்கு முடியும்வரை அந்த இளைஞர்களின் உணவுக்குத் தொழிற்சாலை நிர்வாகமே பொறுப்பேற்க வைத்தனர்.

நல்ல சம்பளம்... திரும்பி வருவோம்!

இந்நிலையில், தங்களை சொந்த ஊர் அழைத்துச் செல்ல கோரிக்கை வைத்து திருச்சியில் பல்வேறு இடங்களில் பணியாற்றி வந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் , முதற்கட்டமாக கடந்த 10-ம் தேதி சொந்த ஊர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதில், திருச்சி பொன்னகரம் பகுதியில் தங்கி பிரமாண்ட திருமணங்கள் மற்றும் மாநாடுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்யும் 15 வடமாநில தொழிலாளர் குடும்பங்கள் அடக்கம்.

ஊரடங்கு காரணமாகப் பிரமாண்ட திருமணங்கள் மற்றும் மாநாடுகள் நடக்க வாய்ப்பில்லை. ஊரடங்கு முடிந்து சில மாதங்கள் ஆனாலும், வேலை இருக்காது என்பதால் இவர்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடமாநில தொழிலாளர்கள்
வடமாநில தொழிலாளர்கள்

நம்மிடம் பேசிய வடமாநில தொழிலாளர்கள், ``எங்கள் மாநிலங்களில் நல்ல வேலை கை நிறைய சம்பளம் கிடைப்பதில்லை. அதனால் தமிழகம் வந்தோம். இங்கு நல்ல வருமானம் கிடைத்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி மிகவும் கஷ்டப்படுகிறோம். அதனால்தான் சொந்த ஊர் சொல்லும் சூழல். நிலைமை சரியான பிறகு நிச்சயம் திரும்பி வருவோம். எங்களின் கஷ்டங்களைப் புரிந்துகொண்டு சொந்த ஊர் செல்ல உதவிய திருச்சி மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸாருக்கு நன்றி” என்றார்கள்.

அடுத்தடுத்த போராட்டங்கள்!

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வடமாநில தொழிலாளர்கள் சுமார் 50 பேர் பணியாற்றி வருகின்றனர். அந்த கம்பெனி நிர்வாகம் அவர்களைச் சொந்த ஊருக்கு அனுப்ப மறுத்து வருவதுடன், உணவுக்கு வழி செய்யவில்லை எனக் குற்றஞ்சாட்டிய தொழிலாளர்கள் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வடமாநில தொழிலாளர்கள்
வடமாநில தொழிலாளர்கள்

தகவலறிந்த போலீஸார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த சில தினங்களாகச் சாப்பாடு இல்லாமல் மிகுந்த சிரமப்படுகிறோம் எனத் தொழிலாளர்கள் கதறினர். அதைக்கேட்டுப் பதறிய போலீஸார் உணவுக்கு வழிசெய்கிறோம் என உறுதி அளித்ததுடன், விரைவில் அவர்களைச் சொந்த ஊர் அனுப்ப வழிசெய்வதாக உத்தரவாதம் அளித்ததையடுத்து, அவர்கள் அனைவரும் திரும்பிச் சென்றார்கள்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் வரதராஜு
திருச்சி மாநகர காவல் ஆணையர் வரதராஜு

திருச்சி விமான நிலையத்தில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள், நடந்தே திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார்கள். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், திருச்சி சுப்பிரமணியபுரம் அருகே அவர்களை மடக்கினர். தொடர்ந்து, அவர்களில் மூன்று பேரை மட்டும் போலீஸாரே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள், இங்கு வேலையும் இல்லை. சரியான உணவும் இல்லை. அதனால் எங்களைச் சொந்த ஊர் அனுப்பி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த திருச்சி மாநகர காவல் ஆணையர் வரதராஜு ஓப்பன் மைக்கில், `திருச்சி மாவட்டத்தில் உளவுப்பிரிவு போலீஸ் எதற்கு இருக்கிறது. இவ்வளவு பேர் சாலையில் நடந்து செல்கிறார்கள். ஒருவருக்கும் தகவல் தெரியவில்லை. இப்படி வேலை பார்த்தால் எப்படி?' எனக் கடுமையாக வெளுத்து வாங்கினார்.

உயிரைப் பணயம் வைத்து உதவும் உள்ளங்கள்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஊரடங்கில் நடைபெற்ற மோதல்களைத் தடுக்க தவறியதற்காக உளவுப்பிரிவு போலீஸார், காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு