Published:Updated:

'வலிகளோடு போகிறோம்... திரும்ப வருவோம்!' -திருச்சியில் உருகிய வடமாநிலத் தொழிலாளர்கள்

வெளிமாநிலத் தொழிலாளர்கள்
வெளிமாநிலத் தொழிலாளர்கள்

"எங்களின் சொந்த ஊரைவிட, தமிழகம் மிகவும் பிடித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையில்லாத காரணத்தாலேயே சொந்த ஊருக்குச் செல்லும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டோம். நிலைமை சரியானதும் மீண்டும் வருவோம்" என்று உருகியபடி திருச்சியிலிருந்து கிளம்பினார்கள்  வடமாநிலத் தொழிலாளர்கள்.

தொடர்ந்து போராட்டங்கள்...

வேலைக்காக தமிழகத்திற்கு வந்த வடமாநிலத் தொழிலாளர்கள், தங்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கக் கோரி சென்னை, கோவை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டதுடன், மாவட்ட நிர்வாகங்களிடம் மனு கொடுத்தனர்.

வெளிமாநிலத் தொழிலாளர்கள்
வெளிமாநிலத் தொழிலாளர்கள்

அந்த வகையில், திருச்சி சிறுகனூர் பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலை, திருச்சி விமான நிலையத்தில் பணியாற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள், வேலை இல்லாததால் சாப்பிடக்கூட வழியில்லாமல் சிரமப்படுகிறோம், அதனால் எங்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க வேண்டும் எனக் கூறி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இரண்டாம் கட்டமாகக் கிளம்பிய தொழிலாளர்கள்

வெளிமாநிலத் தொழிலாளர்கள், அவரவர் சொந்த ஊருக்குச் செல்லும் வகையில், மத்திய -மாநில அரசுகளின் ஏற்பாட்டில், இரண்டாம் கட்டமாக சிறப்பு ரயில்மூலம் அவர்களின் சொந்த ஊருக்கு திருச்சியிலிருந்து நேற்று இரவு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 திருச்சியில் இருந்து நேற்று இரவு கிளம்பிய வடமாநிலத் தொழிலாளர்கள் சென்ற சிறப்பு ரயில்
திருச்சியில் இருந்து நேற்று இரவு கிளம்பிய வடமாநிலத் தொழிலாளர்கள் சென்ற சிறப்பு ரயில்

சொந்த ஊருக்கு அனுப்ப கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலம், திருச்சிக்கு அழைத்துவரப்பட்டனர். அதில், திருச்சி மாவட்டத்தில் தங்கியிருந்த 984 பேருடன், அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தங்கியிருந்த மொத்தம் 1,425 தொழிலாளர்கள் நேற்று நள்ளிரவு 11மணியளவில் சொந்த ஊர் அனுப்பிவைக்கப்பட்டனர்.

`சாப்பாட்டுக்கே வழியில்லை; ஊருக்கு அனுப்புங்க!' -திருச்சியில் தொடரும் வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்
வெளிமாநிலத் தொழிலாளர்கள்
வெளிமாநிலத் தொழிலாளர்கள்

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருச்சி ரயில்வே எஸ்பி செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் வழியனுப்பிவைத்தனர். அப்போது தொழிலாளர்கள், தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த அரசுக்கும், மாவட்ட நிர்வாகங்களுக்கும் நன்றிகள் என கையெடுத்துக் கும்பிட்டனர்.

நம்மிடம் பேசிய தொழிலாளர்கள், ``எங்கள் மாநிலங்களில் அதிக வேலை இருக்காது. ஆனால், இங்கு நல்ல வேலை... கை நிறைய சம்பளம் தருகிறார்கள். அதனால்தான் எங்களின் சொந்த ஊரைவிட தமிழகம் மிகவும் பிடித்துள்ளது.

வெளிமாநிலத் தொழிலாளர்கள்
வெளிமாநிலத் தொழிலாளர்கள்

கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாத காரணத்தாலேயே சொந்த ஊருக்குச் செல்லும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டோம். வலிகளோடு போகிறோம்... நிலைமை சரியானதும் மீண்டும் வருவோம். எங்களின் கஷ்டங்களைப் புரிந்துகொண்டு சொந்த ஊர் செல்ல உதவிய அனைவருக்கும் நன்றி” என்றார்கள்.

டெல்லியில் சிக்கிக்கொண்ட தமிழர்கள்!

கொரோனா ஊரடங்கு காரணமாக டெல்லியில் பணியாற்றிய தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள், டெல்லியில் சிக்கிக் கொண்டனர். அவர்களை தமிழகம் கொண்டுவரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில், டெல்லி மாநாட்டுக்குச் சென்ற 292 பேர், மற்றவர்கள் 266 பேர் என மொத்தம் 558 நபர்கள் டெல்லியிலிருந்து சிறப்பு ரயில் மூலம் நேற்று இரவு திருச்சி வந்து சேர்ந்தனர்.

டெல்லி மாநாட்டிற்குச் சென்றவர்கள்
டெல்லி மாநாட்டிற்குச் சென்றவர்கள்

இதில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 64 பேர் சிறப்பு பேருந்துகள் மூலம் திருச்சி மணிகண்டத்தை அடுத்த சேதுராப்பட்டி பொறியியல் கல்லூரிக்கு அழைத்துச்சென்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்குச் செய்வது என் கடமை சார்.. தள்ளுவண்டிக் கடைக்காரரின் மனிதாபிமானம்!

மேலும், டெல்லி மாநாட்டுக்குச் சென்றவர்கள், திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள அரபிக் கல்லூரியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள். இதுமட்டுமல்லாமல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட 22 மாவட்டத்தைச் சேர்ந்த 202 பேர், அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு அரசு போக்குவரத்துமூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவார்கள்.

டெல்லியில் இருந்து வந்த தமிழர்கள், திருச்சியில் இருந்து சொந்த ஊர் கிளம்பிய வடமாநிலத் தொழிலாளர்களின் முகத்தில் சந்தோஷம் தெரிந்தது.

அடுத்த கட்டுரைக்கு