Published:Updated:

`பொங்குறது பானை மட்டுமல்ல; மனசும்தான்!' - குக்கர் பொங்கல் கொண்டாடுபவர்களுக்கு ஒரு கிராமத்து ரீவைண்ட்

பொங்கல்
News
பொங்கல்

பந்தலோட ஓரங்கள்ல கரும்பை கட்டிவிடுவோம். மஞ்சள், இஞ்சி கொத்துகளை கழுத்துல கட்டிக்கிட்டு அலங்காரத்தோட இருக்குற பொங்கல் பானைகளை, வாசல்ல இருக்குற அடுப்புல நல்ல நேரம் பார்த்து வைப்போம். முதல் நாள் இரவு தயார் செஞ்சு வச்ச விறகுகளை அடுப்புல வச்சு ஏறிய விடுவோம்.

நகரங்கள்ல குக்கர் பொங்கல் கொண்டாடுறவங்களுக்கு எல்லாம், சின்ன வயசுல சொந்த கிராமத்துல மண்பானை பொங்கல் கொண்டாடின நினைவுகள் மனசுல இருக்கும்தானே..? அதைக் கிளறிவிட, ஒரு ரீவைண்ட் இங்கே!

ஜனவரி மாசம் தொடங்கினதுல இருந்தே பொங்கலுக்கான வேலைகளை ஆரம்பிச்சிடுவோம். அந்த நாள்கள்ல தெருவுல யார் யார் வீட்டுல என்னென்ன பண்ட பாத்திரம், துணிமணி இருக்குனு எல்லாரும் பார்த்துடலாம். எல்லாத்தையும் துவைச்சு, வெளக்கி வீட்டு வாசல்லதான் வரிசையா காய வெச்சிருப்போம்.

பொங்கல்
பொங்கல்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பொங்கலுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி, பொண்ணுங்களுக்கு பிறந்த வீட்டுல இருந்து பொங்கல் வரிசை எடுத்துட்டு வருவாங்க. அன்னைக்கி அசைவப் பிரியர்கள் வீட்டுல மீன், கறி விருந்துன்னு களைகட்டும். பொங்கலுக்குத் தேவையான அரிசி, வெல்லம், பானை, மஞ்சள் கொத்துனு எல்லா சாமான்களையும் வாங்கிட்டாலும், ஒரு கரும்புக் கட்டை வாங்கிட்டு வந்து வீட்டு சுவர்ல சாய்ச்சு வச்ச பிறகுதான் பொங்கல் ஃபீல் முழுமையாகும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பொங்கலுக்கு முதல் நாள் செங்கலை சிமென்ட் வச்சு பூசி, கல் அடுப்பு ரெடி பண்ணுவோம். பொங்கல் அன்னைக்கி காலையில பூசணிப் பூவை பறிச்சு வாசல் கோலத்துக்கு நடுவுல வச்சு, கையோட ஆத்துக்கு தண்ணியெடுக்கக் கெளம்பிடுவோம். வீட்டுல இருந்து வயல்வெளிகளைத் தாண்டி நடந்து போனா... காவிரி ஆறு படுத்துக் கிடக்கும். கரையில சின்னதா ஒரு பூஜை நடக்கும். அதை முடிச்சிட்டு, கொண்டுபோன பானையில காவிரி தண்ணியை எடுத்துட்டு வருவோம். பொங்கல் வைக்கும்போது கொஞ்சம் காவிரி தண்ணியை பானையில் விடுறது எங்க ஊரு வழக்கம். அதே மாதிரி ஒவ்வோர் ஊருலயும், அவங்கவங்க ஊரு குளம், ஆத்துத் தண்ணிய விட்டுக்குவாங்க.

பொங்கல்
பொங்கல்

அடுத்ததா, வீட்டு வாசல்ல பொங்கல் வைக்கிற இடத்தை சுத்தி மூங்கில் கழி, சாக்கு, போர்வைகளைக் கட்டி பந்தல் போடுற வேலை நடக்கும். பந்தலோட ஓரங்கள்ல கரும்பை கட்டிவிடுவோம். மஞ்சள், இஞ்சி கொத்துகளை கழுத்துல கட்டிக்கிட்டு அலங்காரத்தோட இருக்குற பொங்கல் பானைகளை, வாசல்ல இருக்குற அடுப்புல நல்ல நேரம் பார்த்து வைப்போம். முதல் நாள் இரவு தயார் செஞ்சு வச்ச விறகுகளை அடுப்புல வச்சு ஏறிய விடுவோம். ஒரு பக்கம் வெண் பொங்கல், இன்னொரு பக்கம் சர்க்கரைப் பொங்கல் வெந்துட்டு இருக்கும். ரெண்டுல எது மொதல்ல பொங்கப் போகுதுன்னு ஒரே போட்டியா இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொங்கல் வேகுற நேரத்துல, இன்னொரு பக்கம் வெஞ்சனத்துக்கான வேலையும் நடக்கும். எல்லா வகையான காய்கறி, கிழங்குகளை மசாலா போட்டுக் கிண்டி ஒரு கூட்டு வைப்போம். அருகம்புல், தும்மைப் பூ'னு அலங்காரத்தோட இருக்குற, பிடிச்சு வெச்ச மஞ்சள் பிள்ளையார் முன்னாடி, `பொங்கலோ... பொங்கல்' குலைவையோட பொங்கப் பானையை இறக்கி வைப்போம். பிள்ளையாருக்கு முன்னால அஞ்சு இலை போட்டு வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், வெஞ்சனம், தேங்காய், வெல்லம், வாழைப்பழம் எல்லாம் வச்சு, சூரியனுக்கு சூடம் காட்டி படைப்போம். வாசல்ல படைச்ச பிறகு, வீட்டுல உள்ள பூஜை அறையிலும் ஒரு படையல் நடக்கும். முடிச்சிட்டு காக்கைக்கு சாப்பாடு வச்சிட்டு நாமளும் சாப்பிவோம். `போன வருஷத்தைவிட இந்த வருஷம் சீக்கிரமே பொங்கிப் படைச்சிட்டோம்ல'னு முந்தின வருஷ பொங்கல் கதைகளை அசை போட்டுக்கிட்டே சாப்பிட்டு முடிப்போம்.

மாட்டுப்பொங்கல்
மாட்டுப்பொங்கல்

மறுநாள்... மாட்டுப்பொங்கல். மாடு இருக்குறவங்க வீட்டுல காலையிலேயே மாட்டைக் குளிப்பாட்டி, அலங்கரிச்சு, முதல் நாள் மாதிரியே பொங்கல் பொங்கிப் படைப்போம். அந்த சாப்பாட்டை மொதல்ல மாட்டுக்குத்தான் கொடுப்போம். அன்னைக்கு அடிதூள் கறிவிருந்து நடக்கும். அடுத்த நாள் காணும் பொங்கல். சொந்தக்காரங்க வீட்டுக்குப் போயிட்டு பெரியவங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்குவோம். காணும் பொங்கலுக்கு 'கன்னி பொங்கல்'னு ஒரு பெயரும் இருக்கு. அன்னைக்கி சாயங்காலம் ஆறு மணிக்கு மேல, ஊருல உள்ள கன்னிப் பெண்களும், திருமணமான பெண்களும் சேர்ந்து கோயில் வாசல்ல பொங்கல் வச்சு படைப்போம், கும்மிப் பாட்டுப் பாடி கும்மியடிப்போம். கடைசியா, கோயிலுக்குப் பக்கத்துல ஒரு மேடையில நடக்குற கலை நிகழ்ச்சிகளைப் பார்த்த களைப்போட வீடு வந்து சேரும்போது... நள்ளிரவு ரெண்டு மணியாகிடும். மனசுபோல பொங்கல் கொண்டாடின திருப்தியில உடம்பு படுக்கையில விழும்.

இன்னைக்கு டவுன்ல இருக்குறவங்க எல்லாம் குக்கர் பொங்கல் வெச்சாலும், பொங்கல் நாளன்னிக்கு மனசெல்லாம் நமக்கு ஊர்ப் பொங்கலைத்தானே அசைபோடும்!