Published:Updated:

`நானிருக்கேன்.. காலம் முழுவதும் பாத்துக்குவேன்’- காமாட்சிப் பாட்டியை நெகிழவைத்த யு.எஸ் பெண்

அமெரிக்கவாழ் தமிழ் பெண்ணிடம் பேசும் காமாட்சி பாட்டி
அமெரிக்கவாழ் தமிழ் பெண்ணிடம் பேசும் காமாட்சி பாட்டி

``உனக்கு யாரும் இல்லைனு ஏன் கலங்குற... நான் இருக்கேன்... உனக்கு மகள் மாதிரி. உன் கடைசிக் காலம் வரை பணம் அனுப்புறேன். மாசத்துக்கு ரெண்டு தடவை போனில் பேசுறேன்..." என்று அவர் சொல்ல, அழத் தொடங்கினார் காமாட்சி பாட்டி.

`பழம் விக்கிதோ இல்லையோ, பத்து தெரு சுத்தி வந்தாத்தான் நிம்மதி!’ - கலங்கவைக்கும் காமாட்சி பாட்டியின் கதை என்ற கட்டுரையை மே 7-ம் தேதி எழுதியிருந்தோம். அந்தக் கட்டுரையைப் படித்த அமெரிக்காவைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர், `காமாட்சிப் பாட்டியிடம் பேச வேண்டும்' என்றார்.

``உனக்கு யாரும் இல்லைனு ஏன் கலங்குற? நான் இருக்கேன்... உனக்கு மகள் மாதிரி. உன் கடைசி காலம் வரை உனக்கு மாதாமாதம் ரூ.1,000 பணம் அனுப்புறேன். மாசத்துக்கு ரெண்டு தடவை உன்னிடம் போனில் பேசுறேன்..." என்று அவர் சொல்ல, பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினார் காமாட்சி பாட்டி.

பழம் விற்கும் காமாட்சி பாட்டி
பழம் விற்கும் காமாட்சி பாட்டி

கரூர் மாவட்டம், புகளூர் ஒன்றியத்தில் உள்ள தோட்டக்குறிச்சிதான், காமாட்சி பாட்டியின் ஊர். அங்கு சிதிலமடைந்த ஓர் ஓலைக் குடிசையில் வசிக்கும் காமாட்சிப் பாட்டிக்கு, இரண்டு ஆண் பிள்ளைகள். மூன்று பெண்பிள்ளைகள். கணவர் மருதன், 25 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட, பிள்ளைகளும் கைவிட்டனர்.

`பழம் விக்கிதோ இல்லையோ, பத்து தெரு சுத்தி வந்தாத்தான் நிம்மதி!’ - கலங்கவைக்கும் காமாட்சி பாட்டியின் கதை

இந்தத் தள்ளாத வயதிலும், வாழைப்பழங்களை தாம்பாளத்தில் வைத்து, அதை ஊர் ஊராக நடந்தே எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார்.

காமாட்சி பாட்டி
காமாட்சி பாட்டி

கண்ணீர் வர வைக்கும், காமாட்சி பாட்டியின் வாழ்க்கையைப் பற்றி நாம் எழுதிய கட்டுரை, பல ஆயிரம் வாசகர்களை உருகவைத்தது. `பாட்டிக்கு உதவ காத்திருக்கிறோம்; வங்கிக் கணக்கை அனுப்புங்கள்' என்று நிறைய வாசகர்கள் கேட்டார்கள். காரைக்குடியை பூர்வீகமாக கொண்டு, அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றும் பெண் ஒருவர் நம்மைத் தொடர்புகொண்டு பாட்டி குறித்து விசாரித்தார்.

`பாட்டியின் கதை என்னை உலுக்கிருச்சு. அவரிடம் பேசணுமே' என்றார். உடனே, தோட்டக்குறிச்சி போய் காமாட்சி பாட்டியிடம் மொபைலைக் கொடுத்து பேசவைத்தோம். பாட்டிக்கு ஆறுதல் கூறி, உதவி செய்வதாக அந்தப்பெண் சொல்ல, ``பெத்தப் புள்ளைகளே பாரமா நினைச்சு என்னை ஒதுக்கி வச்சுட்டாங்க. எங்கோ இருக்கிற நீ எனக்கு உதவி பண்றேன்னு சொல்ற. நீ நல்லா இருக்கணும் தாயி..." என்று பாட்டி நெகிழ்ந்து போய் சொன்னார்.

பழம் விற்கும் காமாட்சி பாட்டி
பழம் விற்கும் காமாட்சி பாட்டி

``என்னை உன் மகளா நெனச்சுக்கம்மா. உன் கடைசிக் காலம் வரைக்கும் உனக்கு உதவுவேன். நீ இனிமே வாழைப்பழம் விக்கப் போறதைக் குறைச்சுக்க" என்று சொல்ல, பாட்டி கண்கலங்கினார்.

``நேத்துதான் வழுக்கி விழுந்து, கால்ல பலமா அடிப்பட்டுக் கிடக்கேன். நடக்க முடியலை. என்னென்னு கேட்க நாதியில்லாம இருந்தேன். கடவுளா பார்த்து உன்னை எனக்கு உறவா அனுப்பிச்சிருக்காரு. நீ சொல்ற ஆறுதலே போதும் தாயி. காசு பணமெல்லாம் வேண்டாம்" என்று சொல்லி தன்னை ஆசுவாசப்பட்டுக்கொண்டார். ஆனால், அந்தப் பெண் விடாமல் பேசி காமாட்சி பாட்டியின் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்றுக்கொண்டார்.

அதன்பிறகு, நம்மிடம் பேசிய அந்தப் பெண், ``என் பெயர் விவரங்களை எங்கும் வெளியிட்டு விடவேண்டாம். மாதாமாதம் காமாட்சி பாட்டிக்கு 1000 ரூபாய் அனுப்பி வைப்பேன். இந்த மாதத்துக்கான தொகையை இதோ இப்போதே அனுப்பிவிட்டேன். காலம் முழுவதும் அனுப்புவேன். பாட்டிக்கு இப்போது தேவை, ஆறுதல் கொடுக்கவும், அணுசரனையாக நான்கு வார்த்தை பேசவும் ஒருவர் வேண்டும். அந்த ஒருவராக இனி நான் இருப்பேன்.

 சிறுவனிடம் பழம் விற்கும் காமாட்சி பாட்டி
சிறுவனிடம் பழம் விற்கும் காமாட்சி பாட்டி

காமாட்சி பாட்டிக்கு நான்தான் மகள்; என் கணவர்தான் மகன், எங்கள் பிள்ளைகள், அவரின் பேரப்பிள்ளைகள். அவரை கண்கலங்க விடமாட்டேன்" என்று நெகிழ்ந்துபோய் சொன்னார்.

காமாட்சி பாட்டி வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒருவரின் மொபைல் எண்ணையும் அவர் வாங்கிக்கொண்டார்.

காமாட்சி பாட்டியின் கண்களில் கண்ணீரைத்தாண்டி நன்றியும் நம்பிக்கையும் ஒளிர்கிறது.

அடுத்த கட்டுரைக்கு