Published:Updated:

வேலூர்: ஈழத்தமிழர் குடியிருப்பு கட்டுமான பணி; கேள்வியெழுப்பிய நா.த.க நிர்வாகிகள் - விசாரித்த போலீஸ்!

ஈழத்தமிழர் குடியிருப்பு கட்டுமானப் பணி

வேலூரில், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளின் கட்டுமானப் பணியில் பெரிய அளவில் முறைகேடு, குளறுபடியும் நடப்பதாகக் குற்றஞ்சாட்டி கேள்வி எழுப்பிய, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.

வேலூர்: ஈழத்தமிழர் குடியிருப்பு கட்டுமான பணி; கேள்வியெழுப்பிய நா.த.க நிர்வாகிகள் - விசாரித்த போலீஸ்!

வேலூரில், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளின் கட்டுமானப் பணியில் பெரிய அளவில் முறைகேடு, குளறுபடியும் நடப்பதாகக் குற்றஞ்சாட்டி கேள்வி எழுப்பிய, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.

Published:Updated:
ஈழத்தமிழர் குடியிருப்பு கட்டுமானப் பணி

வேலூர் மேல்மொணவூர் பகுதியிலிருக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 220 ஈழத்தமிழர் குடும்பங்களைச் சேர்ந்த 3,150 பேர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்காக ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 55 தொகுப்புகளாக 220 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நேரில் வந்து இந்தப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிவிட்டுச் சென்றார். 3 கட்டுமான நிறுவனங்கள், வீடுகளைக் கட்டி வருகின்றன. இந்த நிலையில், கட்டுமானப் பணியில் முறைகேடுகள் நடப்பதாகவும், தூண்களே (பில்லர்) இல்லாமல் மிகவும் மட்டமான முறையில் ஒவ்வொரு வீடும் கட்டப்பட்டுவருவதாகவும் முகாம்வாழ் தமிழ் மக்களே குற்றஞ்சாட்டியிருகிறார்கள்.

பில்லர் இல்லாத கட்டுமானப் பணி
பில்லர் இல்லாத கட்டுமானப் பணி

இது குறித்து தகவலறிந்ததும், நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் சல்மான் தலைமையிலான அந்தக் கட்சி நிர்வாகிகள் சிலர், இன்று காலை தமிழர் மறுவாழ்வு முகாமுக்கு வந்து கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டனர். பின்னர், அங்கிருந்த ஒப்பந்ததாரர்களிடம், ‘‘கட்டுமானப் பணியை ஏன் இவ்வளவு மோசமாக செய்கிறீர்கள்? செங்கல்லின் தரம் சரியில்லை. சிமென்ட் கலவையில் அதிகம் எம் சாண்ட் கலக்கப்படுகிறது. பில்லர்களே இல்லாமல் சுவர்களை எழுப்பினால், அதன் உறுதித் தன்மை என்னவாகும். அஸ்திவாரமும் சரியில்லை. ஏடாகூடமாக அஸ்திவாரம் போடப்பட்டிருக்கிறது. வேலூரில் மணல் குவாரித் திறக்கப்பட்ட நிலையில் மணலைப் பயன்படுத்தாமல் எதற்காக எம் சாண்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?

இந்த வீடுகள் நான்கைந்து ஆண்டுகள்கூட தாங்காது. நம்பி எப்படி தங்க முடியும். இப்படி கட்டுற வீடு தலையிலதான் இடிஞ்சி விழும். இதற்குத் தகர ஷீட்டையே போட்டுக் கொடுத்திருக்கலாமே?’’ என்றெல்லாம் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். பதில் சொல்லாமல் நழுவிய ஒப்பந்ததாரர்கள், வேலூர் பி.டி.ஓ, தாசில்தார், போலீஸாருக்குத் தகவல் கொடுத்து வரவழைத்தனர். அங்கு வந்த அதிகாரிகளும் உரிய பதில் சொல்லவில்லை. அதைத் தொடர்ந்து, அங்கிருந்த போலீஸார் நாம் தமிழர் கட்சி பிரமுகர்களை கைதுசெய்வதாகக் கூறி காரில் ஏற்றி விரிஞ்சிபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

வீடு கட்டுமானப் பணி
வீடு கட்டுமானப் பணி

அப்போது, முகாம்வாழ் தமிழர் ஒருவர் காரை மறித்து நாம் தமிழர் கட்சியினரை இறக்கிவிடுமாறு கூறவே, அவரையும் விடாப்பிடியாக காரில் ஏற்றி விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றனர். இது குறித்து, வேலூர் டி.எஸ்.பி திருநாவுக்கரசுவிடம் கேட்டதற்கு, ‘‘தமிழர் மறுவாழ்வு முகாமுக்குள் நாம் தமிழர் கட்சியினர் எதற்காகச் சென்றார்கள் என்று விசாரிப்பதற்காகவே காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தோம். இது மாதிரியான விவகாரங்களை அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்திருக்க வேண்டும். யாரிடமும் தகவல் சொல்லாமல் அங்குச் சென்று பார்வையிட்டதன் நோக்கம் குறித்து விசாரித்துவிட்டு, அவர்களை விட்டுவிடுவோம். கைது நடவடிக்கை எடுக்க மாட்டோம்’’ என்றார். அதைத் தொடர்ந்து, மாலை 4 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், காவல்துறை அதிகாரிகளிடம் போனில் பேசினார். பின்னர், காவலில் வைக்கப்பட்டிருந்த சல்மான் உள்ளிட்ட நிர்வாகிகள் விடுவிக்கப்பட்டனர்.