Published:Updated:

`கூடங்குளம் நிர்வாகம் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது!’ - ஆட்சியரை சந்தித்த மக்கள் இயக்கத்தினர்

முதல் இரண்டு நிலைகளிலும் பெரும் பிரச்னைகள் இருப்பதை கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. எனவே, முதல் இரண்டு உலைகளையும் மூட வேண்டும்.

அணு உலைக்கு எதிராக மனு அளித்த சுப உதயகுமார்
அணு உலைக்கு எதிராக மனு அளித்த சுப உதயகுமார்

கூடங்குளம் அணு உலைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் சுப உதயகுமார் தலைமையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். பின்னர் சுப உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``கூடங்குளம் அணு உலைகளின் கட்டுமான குளறுபடிகள், தரமற்ற உபகரணங்கள் மின்னுற்பத்தி கோளாறுகள் என பல்வேறு பிரச்னைகள் இருப்பதை தங்களது அமைப்பு தொடர்ந்து ஆதாரங்களுடன் முன்வைத்து வருகிறது. ஆனால், கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகத்தினர் அணுசக்தித் துறையின் அனைத்து விஷயங்களிலும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை மட்டுமே சொல்லி வருகின்றனர்.

சுப உதயகுமார் தலைமையில் மனு அளித்தவர்கள்
சுப உதயகுமார் தலைமையில் மனு அளித்தவர்கள்

இந்த நிலையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் ஒரு கம்ப்யூட்டர் வழியாக சைபர் தாக்குதல் நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது. அங்கு அனைத்துமே அற்புதமாக இருக்கின்றன என்று அக்டோபர் 21-ம் தேதியன்று உண்மைக்குப் புறம்பான தகவல்களோடு அறிக்கை வெளியிட்டுள்ளது கூடங்குளம் அணு உலை நிர்வாகம். ஆனால், அடுத்தநாளே மும்பையில் உள்ள இந்திய அணுமின் கழக அதிகாரி ஒருவர் அதை மறுத்து அறிக்கையை வெளியிட்டுள்ளார். இரண்டு அணு உலைகளின் செயல்பாட்டில் அவ்வப்போது தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதை கவனத்தில்கொண்டு மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகள் அமைப்பதில் அனுபவமுள்ள விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதன்மூலம் முதல் இரண்டு நிலைகளிலும் பெரும் பிரச்னைகள் இருப்பதை கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. அதில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்பதும், அனுபவமற்ற விஞ்ஞானிகளும், பொறியாளர்களும், பணியாளர்களும்தான் அந்தக் கட்டுமானத்தில் ஈடுபட்டார்கள் என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே, முதல் இரண்டு உலைகளையும் மூட வேண்டும். அதுகுறித்து விசாரணை நடத்தி வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும்.

அணு உலைக்கு எதிராக மனு அளித்த சுப உதயகுமார்
அணு உலைக்கு எதிராக மனு அளித்த சுப உதயகுமார்

அந்த அணு உலைகளால் ஆபத்து இருப்பதால் குமரி மாவட்டம் முழுவதும் பேரிடர் மேலாண்மை பயிற்சிகள் வழங்க வேண்டும். குமரி மாவட்டத்தின் அகஸ்தீஸ்வரம், தோவாளை தாலுகாக்கள் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி ஆகியவை அணுமின் நிலையத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் வசிக்கிறார்கள். அணு உலையில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் குமரி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்படும். எனவே, அணு உலை விரிவாக்கப் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும்" என்றார்.