Published:Updated:

இரண்டு கால்களையும் இழந்து தவித்த செவிலியர்; இருண்ட வாழ்க்கையில் ஒளி பாய்ச்சிய விகடன் வாசகர்கள்!

செந்தாமரைச் செல்வி

``அக்கவுன்ட்ல ஆயிரம், ரெண்டாயிரம், பத்தாயிரம்னு கிரெடிட் ஆக ஆக, அந்த மெசேஜ் போன்ல வர, வர மனசுல சந்தோஷமும், சீக்கிரமா நடந்திடுவேன்ங்கிற நம்பிக்கையும் வந்துருச்சு.'' - செந்தாமரைச் செல்வி

இரண்டு கால்களையும் இழந்து தவித்த செவிலியர்; இருண்ட வாழ்க்கையில் ஒளி பாய்ச்சிய விகடன் வாசகர்கள்!

``அக்கவுன்ட்ல ஆயிரம், ரெண்டாயிரம், பத்தாயிரம்னு கிரெடிட் ஆக ஆக, அந்த மெசேஜ் போன்ல வர, வர மனசுல சந்தோஷமும், சீக்கிரமா நடந்திடுவேன்ங்கிற நம்பிக்கையும் வந்துருச்சு.'' - செந்தாமரைச் செல்வி

Published:Updated:
செந்தாமரைச் செல்வி

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள பொய்யாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தாமரைச் செல்வி (27). இலுப்பூர் அருகே பரம்பூர் கிராமத்தில் கிராம சுகாதாரச் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார். கொரோனா காலகட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வர முடியாத கர்ப்பிணிகளின் வீட்டுக்கே சென்று உடல் பரிசோதனை செய்வது, முதியவர்களுக்கு உடல் பரிசோதனை செய்வது, குழந்தைகளுக்கான தடுப்பூசிகளைப் போடுவது எனப் பரம்பூரைச் சுற்றிவந்து பணி செய்துகொண்டிருந்தவருக்கு, கடந்த 6 மாதங்களுக்கு முன் இரண்டு கால்களும் திடீரென ஒரு நாள் செயலிழந்து போயின. கால்களை அகற்றாவிட்டால், உயிருக்கே ஆபத்து என்ற நிலையில், வேறு வழியின்றி இரண்டு கால்களும் அகற்றப்பட்டன.

செந்தாமரைச் செல்வி
செந்தாமரைச் செல்வி

செவிலியர் வேலையின்றி வீட்டுக்குள்ளே முடங்கிப்போனார் செந்தாமரைச் செல்வி. வேலை இல்லை, சாப்பாட்டுக்கும் கஷ்டம் என வலிகளோடு வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்தவர் குறித்து, ``திரும்பவும் எல்லாருக்கும் சேவை செய்யணும்!- திடீரென இருண்ட வாழ்க்கை; மீளப் போராடும் செவிலியர்'' என்ற தலைப்பில் விகடன் இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

`செயற்கைக் கால் மட்டும் எனக்குக் கிடைத்துவிட்டால் போதும்... மீண்டு வந்துவிடுவேன்' என்று விகடன் கட்டுரையில் உருக்கமாகக் கூறியிருந்தார் செந்தாமரைச் செல்வி. அதைப் படித்த விகடன் வாசகர்கள் பலரும் அவருக்கு உதவ முன்வந்தனர். அவர் வங்கிக் கணக்கில் வாசகர்களின் பங்களிப்பாக மொத்தம் ரூ. 3,96,538 சேர்ந்தது. சிலர் அவரது வீட்டுக்கே சென்று பல மாதங்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்களை வாங்கிக்கொடுத்து நெகிழ வைத்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விகடன் வாசகர்களின் உதவியால் நெகிழ்ந்து போயிருந்த செந்தாமரைச் செல்வியிடம் பேசினோம்.

``கால் இல்லாம, என்னைச் சுத்தி இருக்கவங்களுக்கு ஏன் சிரமத்தைக் கொடுக்கணும், தற்கொலை செஞ்சிக்கிடலாமான்னு எல்லாம் தோணுச்சு. ஆனா, என்னோட வேலைபார்த்த தோழிங்கதான், `செற்கை கால் வெச்சு உன்னால வாழ முடியும்'னு நம்பிக்கை கொடுத்தாங்க.

செந்தாமரைச் செல்வி
செந்தாமரைச் செல்வி

எலும்பு மூட்டு டாக்டரை பார்த்தப்போ, தரமான செயற்கைக் கால் வைக்க ரூ.4 லட்சம் வரையிலும் செலவாகும்னு சொன்னாங்க.

அதுக்காக சக தோழிகள், வேலைபார்த்த இடத்தில் டாக்டர்கள், ஸ்டாஃப்ஸ் எல்லாரும் கொஞ்சம் பண உதவி செஞ்சாங்க. 85,000 ரூபாய் வரையிலும் கிடைச்சது. மீதப் பணத்துக்கு என்ன செய்யுறதுனு மருகி நின்னப்போதான், கடவுள் மாதிரி விகடன் வாசகர்கள் எனக்குப் பண உதவி செஞ்சாங்க.

என் அக்கவுன்டுல ஆயிரம், ரெண்டாயிரம், பத்தாயிரம்னு கிரெடிட் ஆன மெசேஜ் போன்ல வர, வர மனசுல சந்தோஷமும், சீக்கிரமா நடந்திடுவேன்ங்கிற நம்பிக்கையும் வந்திருச்சு. டாக்டரோட ஆலோசனைப் படி `ஓட்டோ பேக்' என்ற நிறுவனத்தோட தயாரிப்பான செயற்கைக் காலுக்கு அட்வான்ஸ் கொடுத்து இப்போ ஆர்டர் கொடுத்திருக்கோம். ஜெர்மனியிலிருந்து சீக்கிரமே மெட்டீரியல் வரும், இந்த மாச இறுதிக்குள்ள எப்படியும் காலைப் பொருத்திடலாம்னு சொல்லியிருக்காங்க.

விகடன் வாசகர்களோட இந்த உதவியை காலம் உள்ள வரைக்கும் எப்படி மறக்க முடியும்?! என்னைக்கும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்" - மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாகச் சொல்கிறார் செந்தாமரைச் செல்வி.