Published:Updated:

`தாயைவிட எங்களுக்குத்தான் அதிகமாக வலிக்கும்!' - செவிலியர் தினத்தில் ஒரு வேதனைப் பகிர்வு

செவிலியர் ரேமா தமிழ்வாணி
News
செவிலியர் ரேமா தமிழ்வாணி

`நாங்க பணி முடிந்து வீட்டுக்குச் சென்ற பிறகும் அந்த அழுகைச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அதுபோன்ற நேரங்களில் பல நாள்கள் சாப்பிடாமல் கூட இருந்திருக்கிறோம்.’

``உலக செவிலியர்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் கொரோனாவுக்குப் பிறகு எங்கள் மீதான பார்வை மாறியுள்ளது. இதற்கு முன்பும் நாங்கள் உயிரைக் கொடுத்து பணி செய்து வந்திருந்தாலும், இப்போது இதை வேலை என்றே சொல்லக் கூடாது சேவை என்றே சொல்ல வேண்டும் என மக்கள் பேசத் தொடங்கியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்கின்றனர் செவிலியர்கள்.

செவிலியர் புஷ்பராணி
செவிலியர் புஷ்பராணி

``உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டை செவிலியர்களுக்கான ஆண்டாக அறிவித்துள்ளது. மருத்துவத்துறையில் 2030-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் மேம்படுத்தப்பட்ட சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் இலக்காக உள்ளது. அதற்கு செவிலியர்களின் பங்கு முக்கியமானதாகக் கருதப்படுவதால் செவிலியர்களை சிறப்பு செய்யும் வகையில் இந்த ஆண்டை செவிலியர்களுக்கான ஆண்டாக அறிவித்து எங்களைப் போன்ற செவிலியர்களை பெருமைப்படுத்தியுள்ளது" என்கிறார் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் புஷ்பராணி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அவரிடம் பேசினோம், ``மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு, பச்சிளம் குழந்தைகள், விபத்து மற்றும் அவசர சிகிச்சை, நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சையளித்தல் உள்ளிட்ட பல பிரிவுகளில் மருத்துவமனைகளில் செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

எப்போதுமே எங்கள் பணியை உணர்ந்து உயிரைப் பற்றியும், குடும்பத்தைப் பற்றியும் கவனத்தில் கொள்ளாமல் உடல்நலக் குறைவால் வருபவர்களுக்கு டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி சிகிச்சையளித்து அவர்களை குணமாக்கி வீட்டுக்கு அனுப்பி வைப்போம். பொதுவாக ஒரு வார்டில் நோயாளிகளுடன் டாக்டர்களைவிட அதிக நேரம் இருப்பது செவிலியர்கள்தான். தொடர்ச்சியாக 12 மணி நேரம் வரை பணி செய்து வருகிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த சமயத்தில், ஏன்டா இந்த வேலைக்கு வந்தோம் என நினைக்கத் தோணும். ஆனால், தீவிர சிகிச்சைக்கு வரும் பலர் குணமாகி வீட்டுக்குச் செல்லும்போது அந்தக் குடும்பமே அவருடன் சேர்ந்து கண்களில் வரும் ஆனந்தக் கண்ணீருடன் ``இது எனக்கு மறு பொறப்பு.. உடம்புல உசுரு இருக்கிற வரை உங்களை மறக்க மாட்டோம். ரொம்ப நன்றிங்க'' என பாராட்டிவிட்டு செல்வார்கள் அவர்களுடைய மகிழ்ச்சிக்காக எவ்வளவு சங்கடங்கள், சோதனைகள் வந்தாலும் தாங்கிக் கொள்ளலாம் எனத் தோன்றும்.

புஷ்பராணி
புஷ்பராணி

ஒருமுறை 75 வயது பெரியவர் ஒருவர் மாதாந்திர மாத்திரை வாங்க வரும்போது மயங்கி விழுந்துவிட்டார். இதைக் கவனித்த நான் உடனே வார்டில் அட்மிஷன் போட்டு சிகிச்சை அளிக்கத் தொடங்கினேன். அவருடைய உறவினர்களுக்கு இரண்டு மணி நேரமாக போன் செய்தும் போனை எடுக்கவில்லை. அப்போது அவருக்கு எல்லாவற்றையும் நான்தான் செய்தேன். அதன்பிறகு அவருக்கு வேண்டியவர்கள் வந்து கவனித்துக்கொண்டனர். நான்கு நாள் சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு செல்லும்போது `பெத்த புள்ளையாட்டம் என்னை கவனிச்சிக்கிட்டம்மா' என கையெடுத்துக் கும்பிட்டார். இதுபோன்ற அனுபவங்கள் நிறைய இருக்கு" என்றார்.

குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் ரேமா தமிழ்வாணி என்பவரிடம் பேசினோம், ``பெரியவர்களுக்கு உடம்பில் பிரச்னை என்றால் சொல்லி விடுவார்கள். பிறந்து பத்து நிமிடங்கள் மற்றும் சில தினங்கள் ஆன குழந்தைகள் பல்வேறு பிரச்னைகளால் சிகிச்சையில் இருக்கும். அந்தக் குழந்தைகள் அடிக்கடி அழுதுகொண்டிருக்கும். பசியில் அழுகிறதா அல்லது வேறு எதற்கும் அழுகிறதா என்றே தெரியாது. அது போன்ற நேரங்களில் நாங்களும் குழந்தையாக மாறி அந்தக் குழந்தையைத் தொடர்ந்து கண்காணித்து அதன் உடலில் உள்ள பிரச்னையை அறிந்து சிகிச்சை கொடுப்போம்.

செவிலியர் ரேமா தமிழ்வாணி
செவிலியர் ரேமா தமிழ்வாணி

பச்சிளம் குழந்தைகளுக்கு ஊசி உள்ளிட்ட மருந்துகள் செலுத்துவதற்கு நரம்பு கண்டுபிடிப்பதே பெரும் கஷ்டமாக இருக்கும். அதுபோன்ற நேரங்களில் அந்தக் குழந்தையின் தாயைவிட எங்களுக்கு அதிகமாக வலிக்கும். தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தைத் தவிர அந்தக் குழந்தைகளுக்கு பணியில் இருக்கும் என்னைப் போன்ற செவிலியர்கள்தான் அம்மா. பிறந்த உடனேயே அவசர சிகிச்சை வார்டுக்கு வந்து விடுவதால் குழந்தையின் தாத்தா, பாட்டி எனப் பலரும் குழந்தையின் முகத்தைப் பார்க்க முடியாது. எங்களை அறிந்துகொண்டு `குழந்தை எப்படிம்மா இருக்கு.. நல்லா பார்த்துக்கம்மா' என உறவினரிடம் சொல்வது போல் சொல்வார்கள்.

மூன்று மாதத்துக்கு மேல் சிகிச்சையளிக்கப்பட்ட குழந்தை இறக்க நேரிடும். அந்தக் குழந்தையின் முகத்தை அவர் அப்பாகூட பார்த்திருக்க மாட்டார். குழந்தை இறந்துவிட்டது எனச் சொல்வதற்கும், அந்தக் குழந்தையின் உடலை அவர்களிடம் ஒப்படைப்பதற்கும் எங்களுக்குத் தைரியம் இருக்காது. உள்ளுக்குள் பலமுறை அழுதுகொண்டே இதுபோன்ற சமயங்களை கடந்து செல்வோம். குழந்தையின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கும்போது பெரும் குரலெடுத்து அழுவார்கள். நாங்க பணி முடிந்து வீட்டுக்குச் சென்ற பிறகும் அந்த அழுகைச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அதுபோன்ற நேரங்களில் பல நாள்கள் சாப்பிடாமல் கூட இருந்திருக்கிறோம்.

அரசு மருத்துவமனையில்
அரசு மருத்துவமனையில்

கடும் சிரமப்பட்டு குழந்தையை குணமாக்கி அந்தக் குழந்தையின் தாய் மற்றும் உறவினர்களிடம் கொடுக்கும்போது அந்தக் குடும்பமே அடைகிற மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அதற்காக என்ன கஷ்டங்கள் வேண்டுமானாலும் அனுபவிக்கலாம் எனத் தோன்றும். பல வலிகளைக் கடந்தே எங்கள் பணியும் வாழ்க்கையும் பயணித்துக் கொண்டிருந்தாலும் கொரோனாவுக்குப் பிறகே எங்கள் மீதுள்ள பார்வை மாறியிருக்கு. எங்களைத் தாயாக, தங்கையாக குடும்பத்தில் ஒருத்தியாக நினைத்து நேசிக்கத் தொடங்கியிருக்காங்க.

மலர் தூவியும் கைதட்டியும் பாராட்டுறாங்க. பக்கத்து வீட்டில் இருப்பவர்களே இப்பதான் எங்களை மரியாதையுடன் பார்க்கத் தொடங்கியுள்ளனர். பலர் சல்யூட் அடித்து நெகிழ்ச்சிப்படுத்துகின்றனர். சமூகத்தில் எங்களுக்கான மரியாதை கூடியிருக்கு. இது தன்னலமில்லாத எங்கள் பணிக்குக் கிடைத்த பரிசாகக் கருதுகிறோம்" என்றார் நெகிழ்ச்சியான குரலில்.