Published:Updated:

`மனுவைத் தொலைத்த அலட்சிய அதிகாரிகள்!’ - 7 வருடங்களாக பெண் குழந்தைகளுடன் போராடும் பெண்

எம்.கணேஷ்
வீ.சக்தி அருணகிரி

பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பெண் ஒருவரால் கொடுக்கப்பட்ட மனுவை அதிகாரிகள் தொலைத்த சம்பவம் தேனியில் நடந்துள்ளது.

Theni District collector
Theni District collector

பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் பலரும் பயனடைந்துகொண்டிருக்கும் சூழலில், அதிகாரிகளின் அலட்சியத்தால், தேனியைச் சேர்ந்த பெண் கடந்த 7 ஆண்டுகளாக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து அதிகாரிகளிடம் முறையிட்டுக்கொண்டிருக்கிறார்.

பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டம்
பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டம்

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதியான போடியில் உள்ள மேலச் சொக்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டனின் மகள் சாந்தி. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். கடந்த 2012-ம் ஆண்டு பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கிறார். சில மாதங்களில், இவர்களுடன் பதிவு செய்த அனைவருக்கும் பணம் கிடைத்திருக்கிறது. தனக்குப் பணம் வராததால், சந்தேகமடைந்த சாந்தி, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூகநலத்துறை அதிகாரிகளைச் சந்தித்து முறையிட்டிருக்கிறார்.

அப்போது, `மனு தொலைந்துவிட்டது.. புதிய மனு எழுதிக் கொண்டுவாருங்கள்.!’ என கூறியிருக்கிறார்கள். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சாந்தி, `தனது இரண்டாவது மகளுக்கு தற்போது 3 வயது கடந்துவிட்டது. புதிதாக மனு எழுதிக் கொடுத்தால் தகுதி இல்லை என மனு தள்ளுபடி ஆகிவிடும். நான் எழுதிக் கொடுத்த பழைய மனு எங்கே?’ என கேட்டிருக்கிறார். அதற்கு உரிய பதில் கிடைக்காததால், கலெக்டரிடம் முறையிட்டிருக்கிறார். அதற்கும் பலன் இல்லாமல் போகிறது! ஒரு கட்டத்தில், சாந்தி, மனு கொடுக்கவில்லை என அதிகாரிகள் வாதிட்டிருக்கிறார்கள்.

Theni District collector
Theni District collector

இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த சாந்தி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2012-ம் ஆண்டு மனு கொடுத்தவர்களின் விவரத்தைப் பெற்று, அதில் தன்னுடைய பெயர் இருப்பதை உறுதி செய்துள்ளார். மேலும், தன்னுடன் பதிவு செய்த அனைவருக்கும் பணம் கிடைத்திருப்பதையும் உறுதி செய்த சாந்தி, கடந்த 7 ஆண்டுகளாக நியாயம் கேட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு தன் இரண்டு பெண் குழந்தைகளை அழைத்துக்கொண்டு நடந்துகொண்டிருக்கிறார்.

பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டம் என்றால் என்ன?
பெண் சிசுக் கொலையை தடுக்கும் நோக்கோடு கடந்த 1992-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் துவங்கப்பட்டது பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டம். வீட்டில், ஒரு பெண் குழந்தை மட்டும் இருப்பின் அக்குழந்தை பிறந்து 3 ஆண்டுகளுக்குள் மாவட்ட சமூக நலத்துறையில், பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தால், அக்குழந்தை பெயரில் 50,000 ரூபாய் வங்கியில் பணம் செலுத்தப்படும். வீட்டில், இரண்டு பெண் குழந்தைகள் இருப்பின் இரண்டாவது பெண் குழந்தை பிறந்து 3 ஆண்டுகளுக்குள் பதிவு செய்தால், இரண்டு பெண் குழந்தைகளின் பெயரில் தலா 20,000 ரூபாய் வங்கியில் பணம் செலுத்தப்படும்.
Mother of shanthi
Mother of shanthi

``7 வருடமா போராட்டிட்டேன். புதுசா மனு எழுதி கொடுனு சொல்றாங்க… அப்படி எழுதிக் கொடுத்தா, இதுதான் நல்ல வாய்ப்புனு சொல்லி என் மனுவை தள்ளுபடி செய்துவிடுவார்கள். அதிகாரி ஒருவர், மக்களால் கொடுக்கப்பட்ட ஒரு மனுவை தொலைத்துவிட்டால், உடனே, அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் தெரிவித்து, வழக்கு பதிவு செய்ய வேண்டும். அதுதான் விதி. ஆனால், எளிமையாக என்னுடைய மனுவை தொலைத்துவிட்டு, என்னை தவிர்ப்பதற்கான முயற்சியில் உள்ளனர் அதிகாரிகள்!” என ஆதங்கத்தோடு பேசினார் சாந்தி.

``நியாயம் கேட்டுப் போராடுறோம். அதிகாரிகள் எந்தப் பதிலும் சொல்லுவதில்லை. கலெக்டரிடம் சொன்னால், அவர், மீண்டும் அதே அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்கச் சொல்கிறார். இப்படியேதான் 7 வருடம் ஓடிவிட்டது. இதனால், குடும்பத்துக்குள் அடிக்கடி சண்டை வருகிறது” என வருத்தத்தோடு பேசினார் சாந்தியின் தாயார் ராமுத்தாய்.

Vikatan

இது தொடர்பாக சமூகநலத்துறை அதிகாரியிடம் பேசியபோது, ``நான் இப்போதுதான் புதிதாக இத்துறைக்கு வந்திருக்கிறேன். அந்தப் பெண்ணை அலுவலகம் வரச்சொல்லுங்கள். பழைய கோப்புகளைப் சரி பார்த்துவிட்டு, உரிய நடவடிக்கை எடுக்கிறேன்!” என்றார்.

ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட திட்டத்தில், தனது தொகுதியைச் சேர்ந்தவருக்கு நடந்திருக்கும் அநியாயத்துக்கு நடவடிக்கை எடுப்பாரா ஓ.பி.எஸ்?