Published:Updated:

நீலகிரி: நடுக்காட்டில் 22 அறைகள்; ஆற்றுக்குள் நீச்சல் குளம்! அத்துமீறிய குரும்பா ரிசார்ட்

குரும்பா ரிசார்ட்
குரும்பா ரிசார்ட்

குரும்பர் பழங்குடிகள் வாழ்ந்துவரும் குரும்பாடி கிராமத்தின் அருகில், பழங்குடிகளின் பெயரைக்கொண்டு தனியார் சொகுசு விடுதி திறக்கப்பட்டதற்கு அப்போதே செயல்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டம், காட்டேரி முதல் கல்லாறு வரை மலைச்சரிவு முழுக்க அடர்ந்த வனப்பகுதியாக இருக்கிறது. இந்த வனத்தில் இருவாச்சி உள்ளிட்ட பல்வேறு வகையான பறவையினங்கள் வாழ ஏற்ற சூழல் நிலவுகிறது. மேலும், அரியவகை பெருமரங்கள் நிறைந்த பகுதியாகவும் இது இருக்கிறது. இந்த வனத்தின் ஊடாகவே மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப்பாதையும், மலை ரயில் போக்குவரத்துக்கான தண்டவாளமும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

குரும்பா ரிசார்ட்
குரும்பா ரிசார்ட்

பழங்குடிகளும் யானைகளும் சுதந்திரமாக உலவிக்கொண்டிருந்த இந்தக் காட்டில் சில ஆண்டுகளுக்கு முன்னர் `குரும்பா ரிசார்ட்' என்ற‌ பெயரில் தனியார் தங்கும் விடுதி ஒன்று தொடங்கப்பட்டது. குரும்பர் பழங்குடிகள் வாழ்ந்துவரும் குரும்பாடி கிராமத்தின் அருகில், பழங்குடிகளின் பெயரைக்கொண்டு தனியார் சொகுசு விடுதி திறக்கப்பட்டதற்கு அப்போதே சமூகச் செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது மட்டுமல்லாமல், இந்தத் தங்கும் விடுதி, யானைகளின் வலசைப் பாதையில் அமைக்கப்பட்டிருப்பதாகவும், ஆற்றுக்குள் சட்டவிரோத நீச்சல் குளம், ஊற்றுநீரைப் பயன்படுத்துதல், மின்வேலி அமைத்தல் போன்ற பல விதிமீறல்கள் நடந்திருப்பதாகவும் உள்ளூர் மக்கள் ‌புகார் தெரிவித்துவந்தனர்.

குரும்பா ரிசார்ட்
குரும்பா ரிசார்ட்

மசினகுடியில் செயல்பட்டுவந்த சட்டவிரோத தங்கும் விடுதி வளாகத்தில் யானைக்குத் தீவைக்கப்பட்ட கொடூரத்தைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த 50-க்கும் அதிகமான தங்கும் விடுதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது. அதேபோல், மாவட்டம்‌ முழுவதிலுமுள்ள தனியார் தங்கும் விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.

இந்தநிலையில்தான்,`குரும்பா ரிசார்ட்'என்ற‌ பெயரில் இயங்கிவந்த தங்கும் விடுதி எந்த அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்ததைக் கண்டறிந்து, தற்போது சீல் வைத்திருக்கிறார்கள்.

நீலகிரி: உணவு தேடி வந்த யானை மீது தீ வைத்த கொடூரம்! - நெஞ்சைப் பதறவைத்த சம்பவம்

இது குறித்து நம்மிடம் பேசிய வருவாய்த்துறை அலுவலர் ஒருவர்,``குன்னுார் - மேட்டுப்பாளையம் ரோடு, குரும்பாடி வனப்பகுதியிலுள்ள ஒரு பிரைவேட் பட்டா லேண்டில் ஒரு தனியார் ரிசார்ட் உரிய அனுமதி பெறாமல் இயங்கிவந்தது. முறையாக நோட்டீஸ் வழங்கி சீல் வைத்திருக்கிறோம். 15 கட்டடங்களில் 22 அறைகள் இயங்கிவந்தன. இவை அனைத்தும்‌ செயல்படத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது" என்றார்.

குரும்பா ரிசார்ட்
குரும்பா ரிசார்ட்

உள்ளூர் மக்கள் கூறுகையில்,``பல ஆண்டுகளாக இந்த விடுதி செயல்பட்டுவருகிறது. அரசியல்வாதிகள் முதல் அரசு அதிகாரிகள் வரை இங்கு வந்து தங்கிச் செல்கின்றனர். ஆற்றுக்குள் நீச்சல் குளம் அமைத்திருக்கிறார்கள். பல விதிமீறல்களும் அரசின் உடந்தையோடே நடந்துவந்தன. இப்போதுதான் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்’’ என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு