Published:Updated:

`ரூ.60,000-த்துக்கு ஏலம்... ஆனால்!' - கன்னியாகுமரி சீசன்கடை ஏல முறைகேட்டுக்கு செக்வைத்த அதிகாரிகள்

கன்னியாகுமரியில் 515 சபரிமலை சீசன் கடைகளைக் குறிப்பிட்ட 5 பேர் மட்டுமே ஏலம் எடுத்துவந்தனர். பின்னர் கடைகளை வேறு வியாபாரிகளுக்கு வாடகைக்கு விட்டு கோடிகளைக் குவித்தனர்.

கன்னியாகுமரி
கன்னியாகுமரி

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி தை மாதம் மகர ஜோதி வரை மண்டல, மகரவிளக்கு பூஜைகள் நடக்கும். இந்தக் காலகட்டத்தில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பின்னர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் சென்று தரிசனம் செய்வது வழக்கம். முக்கடல் சங்கமம், கடலின் நடுவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பக்தர்கள் செல்வார்கள். தினமும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் வருவதால் கன்னியாகுமரியில் சீசன் களைகட்டும்.

கடற்கரை சலையில் அதிகாரிகள் ஆய்வு
கடற்கரை சலையில் அதிகாரிகள் ஆய்வு

இந்தச் சமயத்தில் கன்னியாகுமரி கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் 515 தற்காலிகக் கடைகள் அமைப்பது வழக்கம். இந்த தற்காலிகக் கடைகளை அரசியல் புள்ளிகள் 5 பேர் மொத்தமாகக் குறைந்த கட்டணத்தில் ஏலம் எடுப்பதும், பின்னர் அந்தக் கடைகளை வேறு வியாபாரிகளுக்கு அதிகத் தொகைக்கு வாடகைக்கு விடுவதும் வாடிக்கை. மேலும், குறுகிய இடங்களில் அதிக அளவு கடைகளை அமைப்பதும், நடைபாதைகளை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதும் அரங்கேறும். இதுகுறித்து சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி கடற்கரை சாலையில் 250 கடைகள் மட்டுமே அமைக்க வேண்டும். கடல் அழகை மறைக்கும் விதமாக கடைகள் கட்டக் கூடாது எனவும் கோர்ட் உத்தரவிட்டது. கோர்ட் உத்தரவுப்படி கன்னியாகுமரி பேரூராட்சி சார்பில் 250 தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. வழக்கம்போல 5 பேர் மட்டுமே ஏலம் எடுப்பதற்காகச் சென்றனர். வேறு வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி பேரூராட்சி கடைகளை ஏலம் விடும் பணிக்காக நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. மயில், பஞ்சாயத்துகளின் இயக்குநர் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்புக் குழுவை கலெக்டர் நியமித்தார்.

சபரிமலை சீசன் கடைகள் ஏலம்
சபரிமலை சீசன் கடைகள் ஏலம்

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் அதிகாரிகள் இன்று கன்னியாகுமரி தற்காலிகக் கடைகளை ஆய்வு செய்ததுடன் அங்கு வந்திருந்த வியாபாரிகளிடம் பேரூராட்சி அலுவலகத்தில் நேரடியாக வந்து ஏலத்தில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்தனர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரூராட்சி அலுவலகத்தில் கடைகளுக்கான ஏலம் நடைபெற்றது.

இதுகுறித்து விவரம் தெரிந்த சிலர் கூறுகையில்,``கன்னியாகுமரி சீசன் சமயத்தில் இரு கடையை சுமார் ரூ.60,000 அளவில் ஏலம் எடுத்துவிட்டு, ரூ.1.20 லட்ச ரூபாய்க்கு உள்வாடகைக்கு விட்டு 5 முக்கிய புள்ளிகள் சம்பாதித்து வந்தனர். பேரூராட்சிக்கு சேரவேண்டிய பணத்தை இடைத்தரகர்கள் சிலர் சுருட்டுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஒருவருக்கு ஒரு கடைதான் வழங்குவோம் என்றும், கடை எடுக்க வருபவர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கொண்டுவர வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதனால் உஷாரான அரசியல் புள்ளிகள் தங்கள் பகுதியில் உள்ள சுய உதவிக்குழு பெண்களுக்கு தலா 600 ரூபாய் கொடுத்து ஏலத்தில் கலந்துகொள்ள அழைத்துவந்தனர். ஆனால், அதிகாரிகள் கடற்கரை சாலையில் நடந்துசென்று கடற்கரையில் வந்திருந்த வியாபாரிகளை பஞ்சாயத்து அலுவலகத்துக்கு அழைத்துவந்து ஏலத்தை நடத்தினர். இதனால் ஒரு சிலர் கைக்கு கடை செல்வது தடுக்கப்பட்டுவிட்டது. மேலும், கடந்த ஆண்டு 60,000 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட கடைகள் ஒன்றரை லட்ச ரூபாய் வரை ஏலம் எடுக்கப்பட்டது. இதனால் பஞ்சாயத்துக்கு வருவாய் பல மடங்கு அதிகரித்துள்ளது” என்றனர்.

போலீஸ் குவிப்பு
போலீஸ் குவிப்பு

இதுகுறித்து நாகர்கோவில் ஆர்.டி.ஓ. மயில் கூறுகையில், ``கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் கடைகளை குறிப்பிட்ட 5 பேர் மட்டுமே ஏலம் எடுத்துவந்தனர். அவர்கள் கடற்கரையின் அழகை மறைக்கும் விதமாக கடைகளை அமைப்பதாகவும் சிலர் வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில் இப்போது 250 தற்காலிக கடைகள் அமைத்து வெளிப்படைத் தன்மையாக ஏலம் நடத்தப்படுகிறது" என்றார்.