Published:Updated:

இ-பாஸ் இல்லாமல் வந்த 30 ஊழியர்கள்! -பிரபல நகைக்கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்

ஆட்சியர் ஆய்வு
ஆட்சியர் ஆய்வு

சென்னையில் இருந்து இ-பாஸ் இல்லாமல், ஊழியர்களை கோவை கிளைக்கு அழைத்து வந்த பிரபல நகைக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பல ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறி வேறு ஊர்களுக்குப் படையெடுத்துள்ளனர். உயிர்ப் பயம் காரணமாக, இ-பாஸ் இல்லாமல்கூட பலரும் வெளியூர்களுக்குச் சென்றுள்ளனர்.

கொரோனா
கொரோனா
`இறைவனுக்குத்தான் தெரியும்!’ -கொரோனா முடிவுக்கு வருவது குறித்து முதல்வர் பழனிசாமி

இதனிடையே, “சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்துப்படுவார்கள். அதை மீறினால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” என்று மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்து வருகின்றன.

ஆனால், தனிமைப்படுத்துதல் உத்தரவை பெரும்பாலான மக்கள் கடைபிடிப்பதில்லை என்ற புகார் பரவலாக உள்ளது. கோவை, காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள பிரபல நகைக்கடை நிர்வாகம் சென்னையில் இருந்து 30-க்கும் மேற்பட்ட ஊழியர்களை அழைத்து வந்து, தனிமைப்படுத்திக் கொள்ளாமல் பணியமர்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இதையடுத்து வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் அங்கு ஆய்வு செய்தனர். அதில், குற்றச்சாட்டு உறுதியானதால் அந்த நகைக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

கோவை: 3 நாள்களில் 21 பேருக்கு கொரோனா.. ஹாட்ஸ்பாட்டாகும் சின்னியம்பாளையம், ஆர்.ஜி.புதூர்?

இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் ஷரன் தனது ட்விட்டர் பக்கத்தில், `நகைக்கடை நிர்வாகம், சென்னை உஸ்மான் சாலையில் உள்ள கிளையில் இருந்து, கோவை கிராஸ்கட் சாலை கிளைக்கு சுமார் 30 ஊழியர்களை இ-பாஸ் பெறாமல் அழைத்து வந்துள்ளனர். மேலும், அவர்களை தனிமையும்படுத்தாமல், பொதுமக்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு கொரோனா பரவும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர். அதனால், அந்தக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது' என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, சென்னையில் இருந்து வந்த 30 பேருடன், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று மொத்தம் அங்கு 193 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல கடை மீது வருவாய்துறை புகாரளித்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆட்சியர் ஆய்வு
ஆட்சியர் ஆய்வு

இதனைத் தொடர்ந்து, அதிக அளவிலான பயணிகளை ஏற்றிக் கொண்டு திருப்பூரில் இருந்து கோவை நோக்கி வந்த தனியார் பேருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைப் பகுதியான தெக்கலூர் பகுதியில் வாகன சோதனைகளை மேற்கொண்ட கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி இந்த நடவடிக்கையை எடுத்தார். உரிய அனுமதியின்றி கோவை மாவட்டத்துக்குள் வரும் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு