Published:Updated:

`கொரோனா காலத்தில் கூட்டம்; எல்ஃபின் நிறுவனத்துக்கு சீல்!’ - பதறிய பா.ஜ.க நிர்வாகி ராஜா

எல்ஃபின் நிதிநிறுவனம்
எல்ஃபின் நிதிநிறுவனம்

திருச்சி மன்னார்புரத்தில் உள்ள எல்ஃபின் நிறுவனத்தில் 150-க்கும் மேற்பட்டோர், தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து வந்து நேற்று கூட்டம் நடத்தியுள்ளனர்.

ஊரடங்கு நேரத்தில் அரசின் உத்தரவுகளைக் காற்றில் பறக்கவிட்டு 150-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை அழைத்து கூட்டம் நடத்தியதால், எல்ஃபின் நிறுவனத்தைப் பூட்டி சீல் வைத்துள்ளனர் திருச்சி அதிகாரிகள். அதன் உரிமையாளர் ராஜா, சமீபத்தில்தான் பா.ஜ.க-வில் இணைந்தார். ராஜாவின் நிறுவனத்துக்கு சீல் வைக்க என்ன காரணம் என்று விசாரித்தோம்.

அதிகாரிகள் எல்ஃபின் அலுவலகத்துக்கு சீல் வைப்பு
அதிகாரிகள் எல்ஃபின் அலுவலகத்துக்கு சீல் வைப்பு

கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. அதன் தாக்கத்தால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஐந்து பேருக்கு மேல் கூடினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

சீல் வைப்பு
சீல் வைப்பு

அதை மதிக்காமல் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள எல்ஃபின் நிறுவனத்தில் 150-க்கும் மேற்பட்டோர், தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து வந்து நேற்று கூட்டம் நடத்தியுள்ளனர். அதனை அந்நிறுவனத்தினர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிந்ததும், கன்டோன்மென்ட் காவல் உதவி ஆணையர், வட்டாட்சியர் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று கூட்டத்தினை கலைத்து வெளியேற்றினர். பின்பு, மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவின் பேரில் கிழக்கு வட்டாட்சியர் மோகன் மற்றும் போலீஸார் குவிக்கப்பட்டு ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக எல்ஃபின் நிறுவனத்திற்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது.

எல்ஃபின் உரிமையாளர் தம்பி ரமேஷ், அண்ணன் ராஜா
எல்ஃபின் உரிமையாளர் தம்பி ரமேஷ், அண்ணன் ராஜா

எல்ஃபின் நிறுவனம், ரூ.45 லட்சம் தந்தால் 90 லட்சமாகத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாகவும், டெபாசிட் பணத்தைத் திரும்பத் தருவதில்லை எனத் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து எல்ஃபின் நிறுவனத்தின் நிர்வாகிகள் ராஜா, ரமேஷ் ஆகியோர் மீது கண்டோன்மென்ட் போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எல்ஃபின் நிதி நிறுவனத்தில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக புகார் அளித்திருக்கும் சத்தியமூர்த்தியிடம் பேசினோம். ``எல்ஃபின் என்கிற நிறுவனம் திருச்சியை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த நிறுவனத்தை நடத்தி வருபவர் ராஜா. இந்நிறுவனம் எல்.எல்.எம் போன்று ஆட்களைப் பிடிப்பார்கள். அதைத் தொடர்ந்து, இவர்களின் பெயரில் பொருள்களை உருவாக்கி, அதை அவர்களே விற்கச் சொல்லி ஆட்களைப் பிடிப்பார்கள். அதை ஒவ்வொருவரும் தொடர்ந்து செய்யும்போது அதில் உள்ள நபர்களுக்கு கமிஷன் கொடுப்பார்கள்.

பாஜகவில் இணைந்த ராஜா
பாஜகவில் இணைந்த ராஜா

முதலில் மளிகைப் பொருள்களில் தொடங்கியவர்கள் நாளடைவில் வீடு கட்டிக் கொடுப்பது, காலி இடங்களை வாங்கி விற்பது போன்ற ரியல் எஸ்டேட் சம்பந்தமான தொழில்களையும் செய்து வந்தனர். ஆரம்பத்தில் நிறைய பேர் இவர்களை நம்பி சேர்ந்தனர். பிறகு அதிகமாகச் சேர்ந்ததும், `அறம் மக்கள் நலச் சங்கம்' என்று ஆரம்பித்தனர். அத்துடன், மக்களிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றத்தொடங்கினார்கள். அதன் விளைவுதான், தற்போது அடுத்தடுத்த புகார்கள் வெளிவரத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், அவர்களது மாவட்ட பொறுப்பாளர்கள் கிங்ஸ்லீ மற்றும் பிரசன்னா என இருவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

எல்ஃபின் புது ஸ்கீம்
எல்ஃபின் புது ஸ்கீம்

அதேபோல இவர்கள் மீது நிறைய புகார்கள் குவிய, திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், இவர்கள் மீதான வழக்கை விசாரித்து வருகிறது. மூன்றாவது வழக்காகப் புதுக்கோட்டையைச் சேர்ந்த நபர் தற்போது திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கும் போட்டு இருக்கிறார்கள். பிரச்னைகள் நாளுக்கு நாள் தொடர்ந்து நடந்து வருவதால் தங்களைக் காத்துக்கொள்ள பா.ஜ.க-வில் சேர்ந்துள்ளார். அவர் தம்பி ரமேஷ் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருக்கிறார்.

அறம் மக்கள் இயக்கம்
அறம் மக்கள் இயக்கம்

அதை வைத்துக்கொண்டு இவர்களை யாராவது கேள்வி கேட்டால் அடிதடி கட்டப் பஞ்சாயத்து என எல்லா வேலைகளிலும் ஈடுபடுகிறார்கள். இந்த நிலையில்தான் எல்ஃபின் நிர்வாகிகளை அழைத்து கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். ஊரடங்கை மீறி கூட்டம் கூட்டியதால் அவர்களது நிறுவனத்தைப் பூட்டி சீல் வைத்துள்ளனர்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு