Published:Updated:

`12 கிராமங்கள்; 4,700 ஏக்கர் நிலம்!' - காஞ்சிபுரத்தில் புதிய விமான நிலையம்?

புதிய விமான நிலையம் அமைப்பதற்காக காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாக்களில் 12 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இந்த கிராமங்களில் மொத்தம் 4,700 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Representational Image
Representational Image

காஞ்சிபுரம் அருகே புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை இந்திய விமான ஆணையம் தேர்வு செய்து ஆய்வு நடத்தி வருகிறது. இதற்காக சுமார் 4,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்த இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், உள்நாட்டு முனையம், பன்னாட்டு முனையம் என இரண்டு முனையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஒரு நாளில் மட்டும் சுமார் 250 விமானங்கள் வந்து செல்கின்றன. ஆண்டுக்குச் சுமார் இரண்டு கோடி பேர் பயன்படுத்தும் இந்த விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தநிலையில் சென்னைக்கு அருகிலேயே விமான நிலையம் அமைக்க பல வருடங்களாக இந்திய விமான ஆணையம் திட்டமிட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது காஞ்சிபுரம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு நடைபெற்று வருகிறது.

ஸ்ரீபெரும்புதூரில் கிரீன் பீல்டு விமான நிலையம் அமைக்கும் திட்டம் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது கொண்டுவரப்பட்டது. இதற்கு பத்துக் கோடி ரூபாய் நிதிஒதுக்கி எல்லைகள் வரையறுக்கப்பட்டு, வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு பணிகள் தொடங்கும் நிலையில் இருந்தன. விமான நிலையம் அமைவதற்கு அப்பகுதியினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்

ஆனால், அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியாமல் அப்படியே கைவிட்டது அடுத்து வந்த பா.ஜ.க அரசு. இந்த நிலையில் கடந்த வருடம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அச்சிறுப்பாக்கம் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்காக வருவாய்த் துறையினர் ஆய்வு செய்தனர். விமான நிலையம் அமைப்பதற்காக 2,000 ஏக்கர் நிலம் சர்வே செய்யப்பட்டது. ஆனால், எவ்வித அறிவிப்பும் வெளியாகாமல் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

Vikatan

இந்தநிலையில் காஞ்சிபுரம் அருகே விமான நிலையம் அமைப்பதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் தாலுகாவில் உள்ள வளத்தூர், பரந்தூர், நெல்வாய், தண்டலம், பொடவூர், மடப்புரம் ஆகிய கிராமங்களும், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் எடையார்பாக்கம், குணகரம்பாக்கம், மாகதேவிமங்கலம், அக்கமாபுரம், சிங்கல்பாடி, ஏகனாபுரம் ஆகிய 12 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த கிராமங்களில் மொத்தம் 4,700 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வருவாய் துறையினர் ஆய்வு செய்து அந்த ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பித்திருக்கிறார்கள்.

Representational Image
Representational Image

ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் புதிய கம்பெனிகள் அமைப்பதற்கு எங்கும் இடம் இல்லை. ஆய்வு செய்யப்பட்ட இடங்கள் முற்றிலும் விவசாயப்பகுதி. ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் எஞ்சி இருப்பது இந்த இடம் மட்டும்தான். இந்த இடத்தில் விமான நிலையம் அமைந்தால் இப்பகுதி முழுவதும் பாதிக்கப்படும் என்ற கருத்தும் நிலவிவருகிறது. சென்னையை யொட்டியே விமான நிலையத்தை அமைக்காமல் செங்கல்பட்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு இடைப்பட்ட பகுதிகளில் அமைக்கலாம் என்ற கருத்தும் நிலவிவருகிறது. இந்திய விமான நிலைய ஆணையம் இந்த இடத்தை ஏற்குமா என்பது போகப் போகத்தான் தெரியும்.