Published:Updated:

சீர்காழி: கவனிக்காத வாரிசுகள்; பீரோவில் பணம்’ - கலங்கவைத்த மூத்த தம்பதியின் தற்கொலை

விசாரணை
விசாரணை

கொரோனா சூழல் மற்றும் தனிமை, முதியவர்களை இறுதி முடிவை நோக்கித்தான் தள்ளுகிறது. வயதான பெற்றோர்களை யாரும் புறக்கணித்து விடாதீர்கள், அவர்கள் சென்ற பிறகு ஏற்படும் வெற்றிடத்தை வைத்து மாலை, மரியாதை செய்வதில் பலனில்லை.

சீர்காழி அருகே கொரோனா தனிமையாலும், வாரிசுகள் கவனிக்காத விரக்தியாலும் விஷமருந்தி உயிரை மாய்த்துக்கொண்ட வயதான தம்பதியினர், தங்களுடைய இறுதிச் சடங்கு செலவிற்குகூட பணத்தை வைத்துச் சென்றுள்ளனர். இச் சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதியோர்கள்
முதியோர்கள்

நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா, பெருந்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த அருள்சாமி வயது 70. அவர் மனைவி பாக்கியவதி வயது 65, இவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மகன்கள் திருமணமாகி சென்னையில் செட்டிலாகிவிட்டனர். மகள் திருமணமாகி அருகில் உள்ள நெய்தவாசல் என்னும் கிராமத்தில் வசித்து வருகிறார்.

அருள்சாமி தம்பதியினர் இருவரும் மேற்படி கிராமத்தில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்த வயதிலும் அருள்சாமி இருசக்கர மோட்டார் வாகனத்தில் அதிகாலை எழுந்து, மீன்பிடி இடத்திற்குச் சென்று, மீன்கள் வாங்கி, பல கிராமங்களுக்குச் சென்று மீன்களை விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வந்திருக்கிறார். இச்சூழ்நிலையில்தான் அருள்சாமி - பாக்கியவதி இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்துள்ளனர்.

மோசமான உடல்நிலை:

இதுபற்றி திருவெண்காடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சதீஸ்குமாரிடம் பேசினோம். ``ஊர்க்காரர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தோம். அருள்சாமியின் மனைவிக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கண்பார்வை குறைபாடு போன்றவை காரணமாக அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவரிடம் சென்று காண்பித்து வந்துள்ளார்.

தற்போதைய கொரோனா சூழ்நிலையில் மகன்கள், மகள் யாரும் இவர்களை வந்து பார்க்க முடியாத சூழல். இந்நிலையில் அந்த பெரியவரின் மனைவிக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போவதாலும், தனிமையினால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவும், தன் மனைவியிடம் "நீ உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டால் என்னால் தனியாக வாழ இயலாது அதனால் நாம இருவருமே சேர்ந்தே இறந்து விடுவோம்" எனப் பேசி, பின் வியபாரத்திற்குச் சென்று திரும்பி வரும்போதே பூச்சிக்கொல்லி மருந்து டப்பா ஒன்றையும் வாங்கி வந்துள்ளார்.

தற்கொலை
தற்கொலை
Representational Image

மகளிடன் கூட சொல்லவில்லை:

பின்னர், மாலை 6 மணிக்கு மேல் ஒரே டம்பளரில் இருவரும் பூச்சி மருந்தை உட்கொண்டுவிட்டு, பின் அருள்சாமி வாங்கி வந்த அசைவ உணவை இருவரும் சாப்பிட்டுள்ளனர். கடைசியாக இறக்கப் போகும் தருவாயில் அருகில் வசிக்கும் மகளிடம் கூட சொல்லாமல், தொலைவிலுள்ள மைத்துனர் மகன் ஸ்டாலினிடம், "இனி நாங்கள் வாழ விரும்பவில்லை. நாங்கள் விஷம் குடித்துவிட்டோம். பீரோவில் பணம் வைத்துள்ளேன். நீ வந்து எங்களை நல்லடக்கம் செய்து விடு" என்று கூறியுள்ளார். அவர் பதறிக்கொண்டு வந்து பார்த்தபோது இருவரும் வாயில் நுரைதள்ளி மயங்கிக் கிடந்துள்ளனர். ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றபோது ஏற்கெனவே இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விசாரணை
விசாரணை

தகவறிந்து சென்னையிலிருந்து வந்த மகன்களை மாவட்ட எல்லையில் அனுமதிக்கவில்லை. அதன்பின் நான் சென்று பேசி அழைத்து வந்து ஆஸ்பத்திரியில் பெற்றோர்க்கு அஞ்சலி செலுத்த வைத்தேன். அதன்பின் அவர்களைக் கொரோனா தனிமைப்படுத்தபடும் முகாமிற்கு அனுப்பி வைத்தேன். இறந்தவர்கள் உடல்களை மருமகன் சசிகுமார்தான் அடக்கம் செய்தார். பெற்றோர் விரும்பியதுபோலவே மகன்களுக்கு அந்தப் பாக்கியமும் கிடைக்கவில்லை. இந்த வயதிலும் அருள்சாமி அவர் மனைவி மீது வைத்திருந்த காதலும். அந்த அம்மா இறக்கும் தருவாயிலும் கணவரின் வாந்தியை கையில் ஏந்த முயற்சி செய்து, பின் கட்டியணைத்த நிலையில் இருந்த அன்பை, ஊர்மக்கள் விவரித்தபோது எங்கள் விழிகளில் கண்ணீர் வழிந்தது.

பெரும்பாலான முதியோர்கள், அன்பால் புறக்கணிப் பட்டவர்களாகவே இருக்கின்றனர். அதுவும் இந்தக் கொரோனா சூழல் மற்றும் தனிமை, அவர்களை வாழ்வின் இறுதி முடிவை நோக்கித்தான் தள்ளுகிறது. வயதான பெற்றோர்களை யாரும் புறக்கணித்துவிடாதீர்கள், அவர்கள் சென்ற பிறகு ஏற்படும் வெற்றிடத்தை வைத்து மாலை, மரியாதை செய்வதில் பலனில்லை" என்றார் வருத்தமாக..!

அடுத்த கட்டுரைக்கு