Published:Updated:

`வைரஸ் நோய்க்கு அம்மன் கொடுத்த மருந்து ஃபார்முலா' - ஆட்சியருக்கு அதிர்ச்சி கொடுத்த முதியவர்

மருந்துகளுடன் வந்த மாணிக்கம்
மருந்துகளுடன் வந்த மாணிக்கம்

சீனாவின் வுகான் மாகாணத்தில் பரவிய இந்த வைரஸ் உலகின் பல பகுதிகளிலும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இதைக் குணப்படுத்த தேவையான மருந்துகளைக் கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகளே திணறி வருகின்றன.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்க்கு ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் மருந்து கண்டுபிடித்துவிட்டதாகக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மருந்துடன் வந்த மாணிக்கம்
மருந்துடன் வந்த மாணிக்கம்

சீனாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் எனும் கொடூர நோய்க்கு அந்நாட்டில் மட்டும் இதுவரை 1,700-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் வுகான் மாகாணத்தில் பரவிய இந்த வைரஸ் உலகின் பல பகுதிகளிலும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இதைக் குணப்படுத்த தேவையான மருந்துகளைக் கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

இதனால் பல நாடுகள் தங்கள் நாட்டினரை சீனாவுக்குச் செல்லவோ, அங்கிருந்து நாடு திரும்பவோ அனுமதி மறுத்து வருகின்றனர். சில நாடுகள் மட்டும் தங்கள் நாட்டவரை அழைத்து வந்து தனி முகாம்களில் தங்கவைத்து கண்காணித்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பெண்பயணி ஒருவர் தங்கியிருப்பதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து வட்டாட்சியர் அப்துல்ஜபார், டி.எஸ்.பி மகேஷ் ஆகியோர் மருத்துவக் குழுவுடன் அந்த விடுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

சீனப் பெண்ணுக்கு பரிசோதனை
சீனப் பெண்ணுக்கு பரிசோதனை

விசாரணையில், சீனாவின் குரைத்சி மாகாணத்தைச் சேர்ந்த பான் ஜியாங் சூன் (48) என்பவர் கடந்த 21-ம் தேதி சீனாவில் இருந்து கொல்கத்தா வந்ததாகவும் இந்தியாவில் பல்வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டு ராமேஸ்வரம் வந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு கொரானோ பாதிப்பு இல்லை எனத் தெரிவித்தனர். ஆனாலும், கூடுதல் ஆய்வுக்காக அப்பெண் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனிடையே, மண்டபத்தை அடுத்துள்ள வேதாளை கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்ற முதியவர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் வீரராகவ ராவிடம் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், எனது கனவில் தோன்றிய மாசாணி அம்மன், `கொரோனா நோய்க்கு மூலிகை மூலம் தயாரிக்கப்படும் மருந்தை கொடுத்தால் சரியாகிவிடும் எனக் கூறினார். அதன்படி மூலிகை மருந்தை தயார் செய்துள்ளேன். இந்த மருந்தை இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகத்துக்கு அனுப்பி ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்க வேண்டும். இந்த மருந்தை வியாபாரரீதியில் பயன்படுத்தக் கூடாது' எனவும் குறிப்பிட்டிருந்தர். மேலும், `மாசாணி அம்மன் அருளால் கிடைத்த இந்த மருந்தை இலவசமாக வழங்க வேண்டும்' எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மருந்தை இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகத்துக்கு அனுப்பி ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்க வேண்டும். இந்த மருந்தை வியாபாரரீதியில் பயன்படுத்தக் கூடாது.
முதியவர் மாணிக்கம்

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், முதியவர் மாணிக்கம் தனது மனுவுடன் கொண்டுவந்திருந்த சில மருந்து பொட்டலங்களை மருத்துவ அதிகாரிகளிடம் கொடுக்கும்படி கூறி அந்த முதியவரை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.

கனவில் வந்த மாசாணி அம்மன் மருந்து தயாரிக்க வழிகாட்டியதாகக் கூறி மருந்து பொட்டலத்துடன் வந்த முதியவரைக் கண்டு ஆட்சியர் மட்டுமல்ல அதிகாரிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

அடுத்த கட்டுரைக்கு