Published:Updated:

`வீட்டிலேயே முடங்கிக் கிடந்தா சோறு கிடைக்காது..!' -சாத்தூர் பைபாஸில் கவனம் ஈர்த்த முதியவர்

முகக் கவசம் விற்பனையில் ஆண்டிச்சாமி
முகக் கவசம் விற்பனையில் ஆண்டிச்சாமி

``ஊரடங்கு உத்தரவு போட்டுட்டாங்கன்னு வீட்டுக்குள்ளயே முடங்கிக் கிடந்தா சாப்பாட்டுக்கு என்ன செய்யுறது? வயித்துப்பாட்டுக்கு என்ன செய்யுறது?” என்கிறார் சாத்தூர் முதியவர் ஆண்டிச்சாமி.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உலகமே அதிர்ந்து போயுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், வீட்டில் இருக்கும்போதும், அத்தியாவசியத் தேவைகளுக்காக கடைகளுக்குச் செல்லும்போதும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

சாத்தூர் பைபாஸ் சாலை
சாத்தூர் பைபாஸ் சாலை

அதன்படி, காய்கறிகள், பால், மளிகைப் பொருள்கள், மருந்துப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைக்காக முகக்கவசம் அணியாமல், வீட்டைவிட்டு வெளியே வருவோரை போலீஸார் வீட்டுக்கே திருப்பி அனுப்பும் நிகழ்வும் நடந்து வருகிறது. இந்தச் சூழலில் மக்களின் தேவையைப் பயன்படுத்தி முகக்கசவம், கிருமிநாசினி உள்ளிட்டவற்றை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்களும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கட்டில்கட்டுத் தெருவைச் சேர்ந்த ஆண்டிச்சாமி என்ற முதியவர் பைபாஸ் சாலையோரத்தில் முகக்கவசங்களை விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் வீட்டுக்குத் தேவையான காய்கறி, மளிகைப் பொருள்களை வாங்கிச் செல்கிறார். பைபாஸ் சாலையின் ஓரத்திலுள்ள வேப்பமர நிழலில் கயிற்றில் கொடி கட்டி மஞ்சள் நிற முகக்கவசங்களை விற்பனை செய்து கொண்டிருந்தவரிடம் பேசினோம். ``சாத்தூர்னாலே தீப்பெட்டி, பட்டாசு உற்பத்தித் தொழில்தான் நியாபகத்துக்கு வரும்.

ஆண்டிச்சாமி
ஆண்டிச்சாமி

பத்து வீடுகளை எடுத்துக்கிட்டா அதுல குறைஞ்சது மூணு வீடுகளிலாவது இந்தக் கம்பெனிகளுக்கு வேலைக்குப் போவாங்க. ஆனா, கொரோனா பாதிப்புனால ஊரே வெறிச்சோடிக் கிடக்கு. நானும் ஆரம்பத்துல பட்டாசு, தீப்பெட்டி உற்பத்தி வேலைகளெல்லாம் பார்த்தேன். வயசாகிட்டதுனால என்னால முடிஞ்ச சின்ன சின்ன வேலைகளைப் பார்த்துட்டு இருக்கேன். எனக்கு மூணு பெண் பிள்ளைகள். மூணு பேருக்கும் கல்யாணம் செஞ்சுக் கொடுத்துட்டேன். வீட்டுல நானும் மனைவியும் மட்டும்தான் இருக்கோம். தினமும் ஏதாவது வேலை செஞ்சு 200 ரூபாய் வரை பார்த்திடுவேன். இப்போ ஊரடங்கு உத்தரவுனால எந்த வேலையும் செய்ய முடியலை.

வீட்டை விட்டு வெளியே போறவங்க முகத்துல முகக்கவசம் போட்டுட்டுத்தான் போணும்னு போலீஸ்காரங்க சொல்லிட்டாங்க. தினமும் காலையில 6 மணியில இருந்து மத்தியானம் ஒரு மணி வரைக்கும் காய்கறி, மளிகைப் பொருள்கள் வாங்க ஆளுக இந்த பைபாஸ் ரோட்டுலதான் நடந்தும், பைக்குலயும் போவாங்க. ஊரடங்கு அறிவிச்ச ரெண்டு, மூணு நாள் முகத்துல கைக்குட்டையைக் கட்டிக்கிட்டுப் போனவங்க எண்ணிக்கைதான் அதிகம்.

இந்தச் சூழ்நிலையில நம்ம எந்த வேலைக்கும் போக முடியாது. முகக்கவசம் விற்பனை செஞ்சா ஏதாவது வருமானம் கிடைக்குமேன்னு யோசனை வந்துச்சு. என் வீட்டுப்பக்கத்துல தையல் தைக்குற பெண்கள் மஞ்சள் காட்டன் துணியில முகக்கவசம் தைத்து 10 ரூபாய்க்கு விற்பனை செய்தாங்க. ஆனா, எனக்கு ஒரு மாஸ்க்கை 8 ரூபாய்க்கு கொடுத்தாங்க. அதுல 2 ரூபாய் லாபம் வைத்து 10 ரூபாய்க்கு விற்பனை செய்யுறேன்.

மரத்தடியில் ஆண்டிச்சாமி
மரத்தடியில் ஆண்டிச்சாமி

தினமும் காலையில 6.30 மணிக்கெல்லாம் சைக்கிள்ல இந்த மரத்துக்கு அடியில வந்து கயிறு கட்டி, மற்றவர்களின் பார்வைக்காக பத்து மாஸ்க்குகளை தொங்க விட்டுட்டு நிற்பேன். அந்தப் பக்கமாக வந்து, போவோர்கள் வாங்கிட்டுப் போவாங்க. ஒரு மணிக்கெல்லாம் வீட்டுக்குக் கிளம்பிடுவேன். தினமும் 100 மாஸ்க்குகள் விற்பனையாகுது. கிடைக்குற 200 ரூபாய் லாபத்துல வீட்டுக்கு காய்கறிகள், மளிகைப் பொருள்கள் வாங்கிட்டுப் போவேன். ஊரடங்கு உத்தரவு போட்டுட்டாங்கன்னு வீட்டுக்குள்ளயே முடங்கிக் கிடந்தா சாப்பாட்டுக்கு என்ன செய்யுறது?” என்கிறார் ஆதங்கத்துடன்.

அடுத்த கட்டுரைக்கு