Published:Updated:

`அவங்க முகத்த ஒருமுறை பார்த்தா போதும்!’ - கைவிட்டுச் சென்ற பிள்ளைகளைத் தேடி உருகும் பெற்றோர்

நாங்க செத்துப்போறதுக்கு முன்னாடி எங்க பிள்ளைங்க முகத்த ஒருமுறை பார்த்தாமட்டும் போதும். வேற எந்த ஆசையும் இல்லீங்க.

பிள்ளைகளைத் தேடும் பெற்றோர்
பிள்ளைகளைத் தேடும் பெற்றோர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்தனர் கணேசன் (70), அவர் மனைவி சரசு (65). முன்பு பட்டா நிலத்தில் வீடு கட்டி வாழ்ந்தவர்கள்தாம் கணேசனின் பெற்றோர். ஆனால், ரயில் பாதை அமைக்கும்போது நிலம் கையகப்படுத்தப்பட்டதால் வீட்டை இழந்து ரோட்டோரங்களில் வாழ்க்கையைக் கழிக்கிறார்கள்.

மேம்பாலத்தின் கீழ் கணேசன் - சரசு
மேம்பாலத்தின் கீழ் கணேசன் - சரசு

சரசுவை திருமணம் செய்த பிறகு இருவரும் புறம்போக்கு இடங்களில் வசித்துவந்தனர். இவர்களுக்கு லெட்சுமி என்ற மகளும் சத்யராஜ் என்ற மகனும் பிறந்தனர். குடை ரிப்பேர் செய்யும் வேலை பார்த்தும், செருப்பு தைத்தும் கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினார் கணேசன். சிறகு முளைத்த கிளி பறந்து சென்றதுபோல லெட்சுமியும் சத்யராஜும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்துகொண்டு ஆளுக்கு ஒரு திசைக்குச் சென்றுவிட்டனர்.

பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினால் முதுமையில் தங்களைத் தாங்கிப்பிடிப்பார்கள் என எண்ணிய கணேசனும் சரசுவும் இப்போது சிறகொடிந்த பறவையாகிவிட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரள பகுதிகளில் கால்நடையாகச் சென்று, தெருத்தெருவாக குடை ரிப்பேர் செய்வது, செருப்பு தைப்பது, பாத்திரங்களுக்கு ஈயம் பூசுவது போன்ற பணிகளைச் செய்திருக்கிறார்கள். அந்தப் பணியுடன் சேர்த்து தங்கள் பிள்ளைகளைத் தேடுவதையும் முக்கியப் பணியாகச் செய்திருக்கிறார்கள். மகன், மகள் குறித்து எந்தத் தகவலும் இல்லை. அவர்களும் பெற்றோரைத் தேடி வரவில்லை.

முதிய தம்பதியர்
முதிய தம்பதியர்

உடலில் தெம்பு இழந்துவிட்டதால் இப்போது மார்த்தாண்டம் மேம்பாலத்தின் அடியில் தஞ்சம் புகுந்துள்ளனர் இந்த வயோதிக தம்பதியர். மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் அவர்களை மார்த்தாண்டம் மேம்பாலம்தான் காக்கிறது. ஆனால், பசியிலிருந்து காக்கத்தான் யாருமே இல்லை.

இவர்களின் நிலையைப் பார்த்து யாராவது உணவு கொடுத்தால் வாங்கிச் சாப்பிடுகிறார்கள். இல்லையென்றால் பசியோடு ஜீவனை பிடித்துக்கொண்டு படுத்திருக்கிறார்கள்.

தாயைக் கண்டுபிடித்தார் டேவிட் சாந்தகுமார்! - முடிவுக்கு வந்தது 39 வருடப் போராட்டம்

"கல்யாணம் ஆகி கேரளத்துக்குப் போன பிள்ளைங்க எங்களைத் தேடி வருவாங்கன்னு நாங்க வருஷக்கணக்கில காத்திருந்தோம். அவங்க எங்களைத் தேடி வராததுனால ஏழு வருஷத்துக்கும் மேல நாங்க பிள்ளைகளைத் தேடினோம். இப்ப தேடி அலைய ஒடம்புல தெம்பு இல்ல, நோயும் பாடாய்படுத்துது. நாங்க செத்துப்போறதுக்கு முன்னாடி எங்க பிள்ளைங்க முகத்த ஒருமுறை பார்த்தாமட்டும் போதும். வேற எந்த ஆசையும் இல்லீங்க" என்று நெஞ்சம் நிறைந்தொழுகும் பாசத்துடன் படபடக்கின்றனர் வயதான பெற்றோர்.