Published:Updated:

`தஞ்சையில் 10-ம் நூற்றாண்டை சேர்ந்த சமணர், விஷ்ணு சிலைகள் கண்டெடுப்பு!’ -விளக்கும் தமிழ்ப் பண்டிதர்

விஷ்ணு சிலை
விஷ்ணு சிலை ( ம.அரவிந்த் )

சிவன், விஷ்ணு மற்றும் சமணர் ஆலயங்கள் இருந்தது என்பதை உணர்த்துகிறது. மேலும், இப்பகுதியில் சோழர் காலத்தில் மிகப்பெரும் குடியிருப்பு இருந்ததற்கான சான்றுகளையும் காண முடிகின்றது.

தஞ்சாவூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில் 9, 10-ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த பழைமையான சமணர் மற்றும் விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஏராளமான சோழர் காலத்தைச் சேர்ந்த கறுப்பு, சிவப்பு நிறத்திலான பானை ஓடுகள் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளன.

சமணர் சிலை
சமணர் சிலை

இது குறித்து வரலாற்று மற்றும் சுவடியியல் ஆய்வாளரும், சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதருமான முனைவர் மணி.மாறன், ``தஞ்சாவூர் அருகே உள்ள பூதலூர் நாலு ரோடு பகுதிக்கு ஒரு கி.மீ. முன்னதாக உள்ள சாலையின் இடது புறத்தில் கன்னிமார் தோப்பு என்ற மேடான பகுதி உள்ளன. பூதலூரைச் சேர்ந்த புத்தர் என்பவர் இப்பகுதியில் பழைமையான சிலைகள் இருப்பதாக தகவல் அளித்தார். இதையடுத்து, என் தலைமையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் காணப்படுவது போன்ற மிகப்பெரிய கிணறு (பட்டறைக் கிணறு) இருப்பதைக் கண்டோம்.

இந்த அமைப்பு கொண்ட கிணற்றை தஞ்சை மாவட்டத்தில் காண முடியாது. புதுக்கோட்டை, சிவகங்கைப் பகுதியிலிருந்து புலம் பெயர்ந்து வந்த மக்களால் இந்தக் கிணறு வெட்டப் பட்டிருக்கலாம் என அதன் அமைப்பு உணர்த்துகிறது. அத்துடன் கிணற்றின் கரையில் ஒரே கல்லிலேயே மிகச்சிறிய அளவில் சப்தமாதர் புடைப்புச் சிற்பம் அழகாக வடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பத்தின் அடிப்பகுதி மண்ணில் புதைந்த நிலையிலும் மேல் பகுதியான மார்பிலிருந்து தலை வரை வெளியே தெரியும் வகையில் இருந்தது.

சப்தமாதர் சிற்பம்
சப்தமாதர் சிற்பம்

அத்துடன் கி.பி. பத்தாம் நூற்றாண்டு சோழர் காலத்தைச் சேர்ந்தவையாக இந்தச் சிற்பம் இருக்கும் என அறிய முடிகின்றது. இப்பகுதியில் ஒரு சிவன் கோயில் இருந்து அக்கோயில் முற்றிலுமாக சிதைந்து போயிருக்கலாம் என்பதையும் இந்தச் சிற்பம் உணர்த்துகிறது. அத்துடன் இக்கிணற்றின் மேற்குத் திசையில் 150 அடி தொலைவில் மிக அழகிய 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஷ்ணுவின் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விஷ்ணு சிற்பம் இடுப்பிற்குக் கீழ் பகுதி மண்ணில் புதையுண்ட நிலையிலும், இடுப்பில் இருந்து தலை பகுதி வரை மேல் பகுதியில் காண முடிகின்றது. இதன் அமைப்பு மேலிரு கைகளில் சங்கு சக்கரம் ஏந்தியும், வலது கரத்தில் அபயம் காட்டும் வகையிலும் இடது கை இடுப்பில் ஊன்றியவாறு காணப்படும் இந்தச் சிலையில் விஷ்ணு காது, கழுத்து, கை, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் அணிகலன்கள் அணிந்திருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

` உருவத்திலும் அளவிலும் மாறுபட்ட எலும்புகள்..!' - தொல்லியல் ஆய்வாளர்களை உற்சாகப்படுத்திய கீழடி

இந்தச் சிற்பம் அமைந்திருக்கும் இடத்திலிருந்து வடமேற்குத் திசையில் 200 அடி தூரத்தில் உள்ள ஒரு கால்வாயின் மதகின் அருகே சமணத்தீர்த்தங்கரரின் சிற்பம் ஒன்று அமைந்துள்ளது. அந்தச் சிலை பீடம் வரை புதையுண்ட நிலையில் உள்ளது. முக்குடையின் கீழ் இருபுறமும் சாமரதாரிகள் சாமரம் வீச அமர்ந்த கோலத்தில் சமணர் சிற்பம் கிடைக்கப் பெற்றதன் மூலம் இங்கே சமணம் பரவியிருந்ததை அறிய முடிகிறது.

இவையெல்லாம் இப்பகுதியில் சிவன், விஷ்ணு மற்றும் சமணர் ஆலயங்கள் இருந்தது என்பதை உணர்த்துகிறது. மேலும், இப்பகுதியில் சோழர் காலத்தில் மிகப்பெரும் குடியிருப்பு இருந்ததற்கான சான்றுகளையும் காண முடிகின்றது. அத்துடன் உடைந்த ஏராளமான சோழர்கால கறுப்பு, சிவப்பு வண்ண பானை ஓடுகள் இருக்கின்றன. 1,200 ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய புதுக்கோட்டை மாவட்டமான கந்தர்வகோட்டை பகுதியான சோத்துப்பாழை என்ற ஊரிலிருந்து புலம் பெயர்ந்த மக்கள் இப்பகுதிக்கு வந்து குடியேறியதாக செவிவழி செய்திகள் உண்டு.

கிணறு
கிணறு

வளவம்பட்டி அரசுப் பள்ளி வளாகத்தில் சமண தீர்த்தங்கரரின் சிற்பம் தற்போதும் இருப்பது குறிப்பிடத்தக்கது. சோத்துப்பாழையிலிருந்து வில்வராயன்பட்டி பகுதிக்கு வந்து குடியேறிய இம்மக்கள் பின்னர் ஏழு கிளைகளாகப் பிரிந்து சித்திரக்குடி, ராயந்தூர், கல்விராயன்பேட்டை, சித்தாயல், குணமங்கலம், வைரபெருமாள்பட்டி, கோவில்பத்து உள்ளிட்ட பகுதிகளில் குடியேறி இப்போதும் வாழ்ந்து வருகின்றனர். பல்வேறு சமூகங்களைச் சார்ந்த இம்மக்களுக்கான குலதெய்வம் சந்திவீரையன் மற்றும் பிள்ளைத்தாய்ச்சி அம்மன் என கூறப்படுகிறது.

`ஊரடங்கு... கடும் மழை!' - சிக்கல்களைத் தாண்டி மீண்டும் தொடங்கிய கீழடி அகழாய்வு

பிள்ளைத்தாய்ச்சி அம்மன் கோயில் சோத்துப்பாழை கிராமத்தில் இருக்கிறது. பூதலூரை ஒட்டிய பகுதிகளில் வாழும் மக்கள் சோத்துப்பாழைக்குச் சென்று பிள்ளைதாய்ச்சி அம்மனை தங்கள் குலதெய்வமாக வழிபடுகின்றனர். அத்துடன் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவிழா நடத்தியும் வருகின்றனர். தமிம் மக்கள் தாங்கள் இருக்கும் பகுதியிலிருந்து வேறு எந்தப் பகுதிக்குச் சென்றாலும் பூர்வீக பிறப்பிடத்தில் அமைந்த குலதெய்வத்தை வழிபட்டு வருவது தமிழர்களின் மரபாகும்” என்றார் விரிவாக.

அடுத்த கட்டுரைக்கு