கூடலூர்: அன்பு மறவாத `பறவைகள்’ குழு -பேரிடர் காலத்தில் ஆறுதலடையும் பழங்குடிகள்!

பறவைகளைப் போல பறந்து பறந்து பசித்திருப்போருக்கு உணவும், ஆறுதலாக நிவாரணத்தையும் இயன்றவரை வழங்கிக்கொண்டிருக்கிறது முன்னாள் மாணவர்களின் 'என்றும் அன்புடன் பறவைகள்' குழு.
நீலகிரியின் கடைக்கோடியில் உள்ளது, சேரம்பாடி அரசுப் பள்ளி. இந்தப் பள்ளியில் கல்வி பயின்று வெளியில் சென்ற மாணவர்கள் பலர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றிணைந்தனர். ஒருவர் ஆசிரியர், மற்றொருவர் அரசு ஊழியர், ஒரு வியாபாரி என பல்வேறு துறைகளில் சமூக நீரோட்டத்தில் கலந்திருந்த 100-க்கும் அதிகமான அந்த முன்னாள் மாணவர்கள், தங்களுக்குள் ஒரு தொகையை வசூலித்து, தாங்கள் பயின்ற பள்ளிக்கு ஓர் அழகான அரங்கை கட்டிக்கொடுத்தனர்.

'முன்னாள் மாணவர்களின் என்றும் அன்புடன் பறவைகள் சங்கம்' என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி, அதைப் பதிவு செய்துள்ளனர். பின்னர், அனைவரின் விருப்பத்தோடு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நிதியை சந்தாவாகப் பெற்று சேமித்து வந்தனர்.
இந்த நிலையில், நூறாண்டுகள் கண்டிராத பெருமழை கடந்த ஆண்டு நீலகிரியில் கொட்டித் தீர்த்தது. இதில், அப்பாவி மக்கள் பலரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். அதைக் கண்டு பதறிய இந்த குழு, வெள்ளத்தில் தவித்த பழங்குடிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் துயர் துடைக்கக் களமிறங்கியது. தங்களால் இயன்றதையும் மீறி அந்த மக்களுக்குத் தோள்கொடுத்தனர்.

தற்போது, கொரோனா பேரிடரிலும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பழங்குடி மக்களின் பக்கம் நின்று, ஆறுதலாக நிவாரணம் வழங்கிவருகின்றனர்.
இந்தச் சேவைகுறித்து நம்மிடம் பேசிய நிர்வாகி மணிகண்டன், "இந்தப் பகுதிகளில் விளிம்புநிலை மக்கள் அதிகம் வாழ்கின்றனர். தொடர் துயரங்கள் அவர்களை விரட்டுகின்றன. நாங்களும் பெரும் செல்வம் படைத்தவர்கள் அல்ல. இருப்பினும் இந்த அப்பாவி மக்கள் படும் வேதனைகளை சகித்துக்கொள்ள முடியவில்லை. சாமான்யர்களும் ஒன்றிணைந்து உதவ முடியும் என்பதை உணர்ந்தோம்.

நண்பர்கள் உதவியுடன் கொரோனா நிவாரணம் வழங்கக் களமிறங்கினோம். முதலில் மருத்துவ உதவிகள் மட்டுமே செய்து வந்தோம். அவர்களுக்கு அது போதுமானதாக இல்லை. தற்போதுவரை ரூபாய் 10 லட்சம் அளவிற்கு உதவிகள் செய்துள்ளோம். தொடர்ந்து அத்தியாவசிய உணவுப் பொருள்களை வழங்கிவருகிறோம். இதுபோன்ற பேரிடர் காலங்களில், இருப்போர் இல்லாதவர்களுக்கு இயன்றதைப் பகிர்ந்தளிப்போம்" என்றார்.