Published:Updated:

டாக்டர் வரவில்லை; 3 மணி நேரம் உயிருக்குப் போராடினார்!- கடையம் அருகே மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்

`சிகிச்சை அளிக்க டாக்டர்களும் இல்லை; மருந்தும் இல்லை' என்பதால் தான் மூதாட்டி உயிரிழக்க நேர்ந்தது எனக் கூறி, ஊர் மக்கள் போராட்டம் நடத்தினர்.

மூதாட்டி தாமரைவள்ளி
மூதாட்டி தாமரைவள்ளி

நெல்லை மாவட்டம், கடையம் அருகே உள்ளது கோவிலூற்று கிராமம். இந்தக் கிராமத்தின் மத்தியில், 100 ஆண்டுகளுக்கு மேலான கல் தூண்களைக்கொண்ட மண்டபம் ஒன்று இருக்கிறது. ஓடுகளால் ஆன இந்த மண்டபத்தில்தான் பல ஆண்டுகளாகப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன. இதுமட்டுமில்லாமல், இந்த மண்டபத்தில் அமர்ந்து பகல் நேரத்தில் பெண்கள் பீடி சுற்றும் தொழில் செய்துவருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்படி நேற்று மதியம், நான்கு பெண்கள் பீடி சுற்றிக்கொண்டிருக்கும்போதுதான் அந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மண்டபம்
மண்டபம்

நேற்று மதியம், இந்தக் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பா என்பவரின் மனைவி தாமரைவள்ளி (67), ரத்தின சபாபதியின் மனைவி சீதாலட்சுமி (42), வேல்சாமியின் மனைவி குத்தாலவடிவு (75), ஜெயபிரகாஷின் மனைவி மகேஸ்வரி (42), அவரது மகள் மனிஷா (11) ஆகியோர் அமர்ந்திருந்துள்ளனர். அப்போது, மதுரையிலிருந்து உரம் ஏற்றி வந்த லாரி, கோவிலூற்று கிராமம் அருகே உள்ள வள்ளியம்மாள்புரத்தில் உரத்தை இறக்கிவிட்டு, மீண்டும் கோவிலூற்று வழியாக வந்துள்ளது. மதுரையைச் சேர்ந்த முருகன் என்பவர் லாரியை ஓட்டி வந்துள்ளார். கோவிலூற்று மண்டபம் அருகே வரும்போது, ஒரு வளைவில் லாரி திருப்ப முடியாததால், டிரைவர் பின்னோக்கி இயக்கியுள்ளார். அதனால் லாரி, மண்டபத்தின் கல் தூணில் மோத, மொத்த மண்டபமும் இடிந்து தரைமட்டமானது. இதில், உள்ளே இருந்த பெண்கள் அனைவரும் சிக்கினர்.

இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், ஓடிவந்து இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு உள்ளூரில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், தாமரைவள்ளி என்கிற மூதாட்டி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோல், பலத்த காயமடைந்த சீதாலட்சுமி, மகேஸ்வரி , மனிஷா ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையிலும், குத்தாலவடிவுக்கு பாளையங்கோட்டை ஹைகிரவுண்டு அரசு மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தாமரைவள்ளி பாட்டி உயிரிழந்த சிறிதுநேரத்தில், ஊர் பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். `சிகிச்சை அளிக்க டாக்டர்களும் இல்லை. மருந்தும் இல்லை' என்பதால் தான் மூதாட்டி உயிரிழக்க நேர்ந்தது எனக் கூறி ஊர் மக்கள் போராட்டம் நடத்தினர்.

மண்டபம்
மண்டபம்

இதுதொடர்பாக, அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் பேசினோம். ``சவுக்கை என்கிற அந்த ராமன்-சீதை திருமண மண்டபம், நூற்றாண்டுகளைக் கடந்து எங்கள் ஊரின் அடையாளமாக இருந்துவருகிறது. இந்த சவுக்கை மண்டபத்தைத் தெரியாத நபர்கள் சுற்று வட்டாரத்தில் யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்குப் பெயர்பெற்ற அந்த சவுக்கை, ஊர் பொது நிகழ்ச்சிகள் நடத்துகிற இடமாகவும், ஊர் பஞ்சாயத்து பேசுகிற இடமாகவும், கோயில் வரி விதிக்கும் இடமாகவும் செயல்பட்டது. மேலும், கல் மண்டபமான இந்த சவுக்கை தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப மாறிவிடுவதால், அதில் ஊர் பொதுமக்களும், வெளியூரைச் சேர்ந்தவர்களும் ஓய்வு எடுத்துச் செல்வர். மேலும், பெண்கள் ஒன்றாக அந்த சவுக்கையில் அமர்ந்து பீடி சுற்றுவதும், பேசுவதும் உண்டு.

2000 பேரில் சந்தேகம் 150 பேர், கைதானது 2 பேர்!- வீரத்தம்பதி வழக்கில் கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

நேற்றும் அப்படிதான் குத்தாலவடிவு பாட்டி குடும்பத்தினர் இந்த மண்டபத்தில் அமர்ந்து பீடி சுற்றிவந்தனர். அப்போது, அவர்களுக்கு பேச்சுத் துணையாக அமர்ந்திருந்தார், தாமரைவள்ளி பாட்டி. ஆனால், லாரி மோதியதில் அந்த மண்டபம் நிலைகுலைய, உள்ளே இருந்தவர்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தோம். எங்கள் ஊர் அரசு மருத்துவமனையில் சேர்க்கும்போது, தாமரைவள்ளி பாட்டிக்கு உயிர் இருந்தது. ஆனால், மருத்துவர்கள் இல்லாததால் அவரை பரிசோதிக்க ஆள் இல்லை. இருந்த செவிலியர்களும் பாட்டிக்கு என்ன செய்கிறது என்பதைக் கண்டுபிடிக்காமல், தங்களுக்குத் தெரிந்ததைச் செய்துகொண்டிருந்தனர். இதனால், முறையான முதலுதவிகூட அவருக்குக் கிடைக்கவில்லை. பல மணி நேரம் காத்திருந்தும் மருத்துவர் வரவில்லை. இதனால், தாமரைவள்ளி பாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

மூதாட்டி தாமரைவள்ளி
மூதாட்டி தாமரைவள்ளி
நாங்களும் பலமுறை புகார் சொல்லிவிட்டோம். இருந்தும் அரசு நடவடிக்கை எடுத்தபாடில்லை. அதன் விளைவு, இப்போது ஒரு உயிர் போய்விட்டது.

பாட்டி இறந்து மூன்றுமணி நேரம் கடந்தும் டாக்டர்கள் யாரும் மருத்துவமனைக்கு வரவில்லை. இது முதல்முறையல்ல. தினமும் இப்படித்தான் நடக்கிறது. எங்கள் ஊரில் மருத்துவமனை பெயரளவில்தான் இருக்கிறது. ஆனால், மருத்துவர்கள் யாரும் எட்டிப்பார்ப்பதில்லை. நாங்களும் பலமுறை புகார் சொல்லிவிட்டோம். இருந்தும் அரசு நடவடிக்கை எடுத்தபாடில்லை. அதன் விளைவு இப்போது ஒரு உயிர் போய்விட்டது. அதனால்தான் அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்தினோம்" என்றார். போராட்டம் குறித்த தகவல் அறிந்ததும் அம்பை காவல் துணை கண்காணிப்பாளர் சுபாஷினி தலைமையில் போலீஸார் மற்றும் ஆலங்குளம் தாசில்தார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், தாமரைவள்ளி பாட்டியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடையம் காட்டுக்குள் கொல்லப்பட்ட சிறுத்தை! - விஷம் வைத்த வேட்டைக்காரர்கள்?