மருத்துவத் துறையும், அதன் நவீன சிகிச்சைகளும் இணைந்து போராடி உயிர்களைக் காப்பாற்றும் தருணங்கள் ஒவ்வொன்றும் மெய்சிலிர்க்க வைப்பவை. அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று சில தினங்களுக்கு முன்பும் நிகழ்ந்தது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்குச் கடந்த மாதம் 10-ம் தேதி, அம்மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அதன்பிறகு அவருக்கு ரத்தப்போக்கு நிற்காமல் இருந்ததால், உடனடியாக அவரை மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு, பிரசவத்தின்போது ஏற்பட்ட ரத்தப்போக்கை நிறுத்திய மருத்துவர்களால், அந்த இளம்பெண்ணின் சிறுகுடலில் கசிந்துகொண்டிருந்த ரத்தப்போக்கை நிறுத்த முடியவில்லை. இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த அவரை சென்னை, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். அங்கு இன்டர்வென்ஷனல் ரேடியாலஜிஸ்ட் டாக்டர் பெரிய கருப்பன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நவீன சிகிச்சையின் மூலம் அந்தப் பெண்ணைக் காப்பாற்றிவிட்டார்கள். அந்த இளம்பெண்ணுக்கு நிகழ்ந்தது என்ன பிரச்னை; என்ன சிகிச்சையளித்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக இன்டர்வென்ஷனல் ரேடியாலஜிஸ்ட் டாக்டர் பெரிய கருப்பனைத் தொடர்புகொண்டோம்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``அவருக்கு 32 வாரங்களிலேயே குழந்தை பிறந்துவிட்டது. அது குறைப்பிரசவம். பொதுவாக பிரசவம் முடிந்தவுடனே பிறப்புறுப்பின் வழியே ரத்தம் வரும். பிறகு அது தானாகவே நின்றுவிடும். ஆனால், அவருக்கு ரத்தப்போக்கு நிற்கவேயில்லை. இதுவோர் அசாதாரணமான சூழ்நிலை. கிட்டத்தட்ட 20 யூனிட்டுக்கும் மேல் ரத்தம் ஏற்றியிருக்கிறார்கள், அந்தப் பெண்ணுக்கு. அதன்பிறகு, வஜைனல் ரத்தப்போக்கு நின்றுவிட்டது. ஆனால், அவருடைய மலத்தில் ரத்தம் வர ஆரம்பித்திருக்கிறது. பிரசவ நேரத்தில் ஆசன வாயில் காயம்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்தில் அந்தப் பகுதியில் பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்கள்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஆனால், அந்த இடத்தில் எந்தக் காயமும் இல்லை. வயிற்றுக்குள்ளிருந்துதான் ரத்தம் கசிகிறது என்பதைக் கண்டறிந்து, வாய் வழியாக மெல்லிய குழாயைச் செலுத்தி பரிசோதனை செய்ததில் சிறுகுடலின் ஆரம்பத்தில் குழாயை லேசாகத் திறந்துவிட்டதுபோல தொடர்ந்து ரத்தம் வந்துகொண்டே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இப்படி நிகழ்வது மிக மிக அபூர்வம் என்பதால் உடனடியாக ஒரு பயிற்சி மருத்துவர் துணையுடன் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

இங்கு (ஓமந்தூரார் மருத்துவமனை) வந்தபோது அந்தப் பெண்ணின் ஹீமோகுளோபின் வெறும் மூன்றுதான். உடலெல்லாம் வெளுத்துப்போய் இருந்தார். ரத்த அழுத்தமும் குறைந்திருந்தது. வயிற்றுக்குள்ளிருந்த ரத்தக்கசிவை அடைக்க முடியவில்லையென்றால் உயிருக்கே ஆபத்தாகி விடுகிற நிலைமை. அதனால், உடனடியாக உயிருக்கு பாதகம் ஏற்படுத்தாத ஒரு சிகிச்சையின் மூலம் அவரை காப்பாற்ற வேண்டுமென முடிவெடுத்தோம்.
ரத்தம் கசிந்துகொண்டிருந்த இடத்தை காயின் போன்ற அமைப்பால் மறைத்து, ஒட்டும் தன்மையுள்ள மருந்தால் அடைத்துவிட்டோம். கூடவே 3 யூனிட் ரத்தமும் ஏற்றினோம். சிறுகுடலில் ரத்தம் கசிவது நின்றுவிட்டது. பிரசவமாகி கிட்டத்தட்ட ஒரு மாதமாக பெற்ற குழந்தையைப் பார்க்க முடியாமலும், பாலூட்டாமலும் இருந்த அந்தப் பெண் இப்போது டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். அவர் டிஸ்சார்ஜ் ஆனபோது ஹீமோகுளோபின் அளவு 10.5-க்கு வந்துவிட்டது. அவருக்குக் கொடுத்த வந்த மற்ற மாத்திரைகளையும் நிறுத்திவிட்டோம். நான்கு நாள்களுக்கு முன்னால் அவர் எழுந்து, நடந்து, குடும்பத்துடன் சொந்த ஊருக்குக் கிளம்பிவிட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் வருபவர்களைக் காப்பாற்றும்போது கிடைக்கிற மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது. ஓமந்தூரார் மருத்துவமனையின் மருத்துவர்கள் மனநிலை தற்போது அப்படித்தான் இருக்கிறது'' என்பவருடைய குரலில் மனநிறைவு தெரிகிறது.