Published:Updated:

`எங்களை கட்டணக் கொள்ளையர்கள்னு சொல்லாம இதைச் செய்யுங்க!' - ஆம்னி பஸ் உரிமையாளர்களின் குரல்

Omni Bus stand
News
Omni Bus stand ( Photo: Vikatan / P.Kalimuthu )

திருவிழா காலங்களில் மட்டும் ஆம்னி பேருந்து கட்டணங்களை அதிகப்படுத்துவதற்கு என்ன காரணம், இதற்கு தீர்வுதான் என்ன என்பதை அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.அன்பழகனிடம் கேட்டோம். விளக்கமான பதிலைத் தந்தார் அவர்.

சென்னை மாதிரியான மெட்ரோ நகரங்களில் கல்வி மற்றும் பணி நிமித்தமாக தங்கியுள்ள லட்சக்கணக்கான மக்கள், பண்டிகை காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில், சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். அந்நேரங்களில், ரயில்களில் டிக்கெட் கிடைக்காத காரணத்தாலும், அரசுப் பேருந்துகளின் பற்றாக்குறை காரணமாகவும் பயணிகள் ஆம்னி பேருந்துகளை நாடுகிறார்கள்.

வார இறுதி நாட்கள் மற்றும் தீபாவளி, பொங்கல் மாதிரியான பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட பேருந்துகளின் தேவை அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் டிமாண்டை பயன்படுத்திக் கொண்டு, ஆம்னி பேருந்துகள், வழக்கமாக வாங்கும் கட்டணத்தை விட, இருமடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது பயணிகளைப் பெரிதும் பாதிக்கிறது.

Omni Bus stand
Omni Bus stand
Photo: Vikatan / P.Kalimuthu

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது குறித்து அடிக்கடி புகார்கள் எழுவதும், அப்போதெல்லாம், `அதிக கட்டணம் வசூலிக்கும், ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்' என அரசு அறிவிப்பதும் வாடிக்கை. கடந்த தீபாவளி பண்டிகையின் போதுகூட, `ராமு டிராவல்ஸ்' என்ற தனியார் பேருந்து நிறுவனம் அதிகக் கட்டணம் வசூல் செய்வதாக விகடன் நிறுவனத்துக்கு ஆதாரத்துடன் வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 29.10.2021 அன்று விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டது.

அந்தச் செய்தியின் எதிரொலியாக அந்தப் பேருந்தை சோதனை செய்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பேருந்தில் அதிகக் கட்டணம் வசூலிப்பதை உறுதி செய்து அந்த பேருந்தைச் சிறைப்பிடித்தனர். இது ஒரு உதாரணம்தான். இது போன்று திருவிழா காலங்களில் பல ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இன்னும் சில தினங்களில் தமிழர்களின் மிக முக்கிய திருவிழாவான பொங்கல் திருவிழா வருகிறது. சொந்த ஊர்களுக்கு செல்ல ஆம்னி பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதும். கட்டண உயர்வு பிரச்னையில் மக்கள் இந்த முறை சிக்கிக் கொள்ளாமல் இருக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

வாடகை அடிப்படையில் இயங்குகின்றன!

ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணங்களை வசூலிப்பது குறித்து போகுவரத்து துறை அதிகாரிகளிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். ``ஆம்னி பேருந்துகளுக்கு என தமிழகத்தில், குறிப்பிட்ட வழித்தடத்திற்கான அனுமதி எதையும், அரசு வழங்கவில்லை. அவற்றிற்கு, வாடகை அடிப்படையில், குழுவாக உள்ளவர்களை ஒரு இடத்தில் இருந்து, மற்றொரு இடத்திற்கு, ஏற்றி இறக்கும் அனுமதியை மட்டுமே, அரசு வழங்கி உள்ளது. அதனால், அவற்றின் வாடகை விஷயத்தில், எந்த சட்ட திட்டமும் நம்மிடம் இல்லை.

என்றாலும், வழக்கமான நாட்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட, எவ்வளவு கூடுதலாக வசூலிக்கின்றனர் என்பது குறித்து பயணிகள் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் மட்டும்தான், நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், பெரும்பாலான பயணிகள் பயணம் முடிந்தபிறகுதான் புகார் அளிக்கின்றனர். காரணம், பயணம் தடைபட்டுவிடும் என்ற அச்சம்.

Omni Bus stand
Omni Bus stand

அதனால், எங்களால், உரிய நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. எல்லா பேருந்து நிறுவனங்களும், ஒரே மாதிரியான கட்டணத்தை வசூலிப்பதில்லை. அவற்றில் உள்ள இருக்கை, படுக்கை வசதிகளின் அடிப்படையிலும், புறப்படும் நேரம், சேரும் நேரத்தின் அடிப்படையிலும் கட்டணத்தை நிர்ணயிக்கின்றனர். கடந்த தீபாவளிக்கு, அரசு கூடுதல் பேருந்துகளை இயக்கிய போதும், பொதுமக்களில் பலர், ஆம்னி பேருந்துகளில் பயணித்ததை காண முடிந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கூடுதல் கட்டணங்களை வசூலிக்கும் ஆம்னி பேருந்து நிறுவனங்களைக் கண்டறிந்து அந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது. பயண டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே, கூடுதல் கட்டணம் என மக்கள் நினைத்தால் அதை போக்குவரத்து துறைக்கு உடனே தெரியப்படுத்தும்போது அரசு தரப்பில் இருந்து நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த முடியும்" என்றார்கள்.

கொள்ளையர்கள் போல் பாவிப்பது நியாயமில்லை!

திருவிழா காலங்களில் மட்டும் ஆம்னி பேருந்து கட்டணங்களை அதிகப்படுத்துவதற்கு என்ன காரணம், இதற்கு தீர்வுதான் என்ன என்பதை அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.அன்பழகனிடம் கேட்டோம். விளக்கமான பதிலைத் தந்தார் அவர்.

``பண்டிகை காலம் வந்துவிட்டால் ஆம்னி பேருந்துகள் கொள்ளை, அரசு கண்டு கொள்ளவில்லை என்ற செய்திகள் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால், மற்ற நாட்களில் அரசும், ஆம்னி பேருந்து உரிமையாளர்களுன் என்ன செய்கிறார்கள் என்பதை யாரும் கண்டுகொள்வதில்லை.

அ.அன்பழகன்
அ.அன்பழகன்

கட்டண உயர்வினால் மக்கள் கோபப்படுவது நியாயம்தான். ஆனால், அனைத்து தனியார் பேருந்து நிறுவனமும் கட்டணங்களை அதிகப்படுத்துவதில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தொழிலை நேசித்தும், மக்களின் வசதிக்காகவும் சமூக சிந்தனையோடு செய்து கொண்டிருக்கும் உரிமையாளர் எண்ணற்றவர்கள். எல்லா தொழில்களிலும் இருப்பதுபோல் எங்க தொழிலிலும் ஒரு சில கயவர்கள் இருக்கலாம் அதற்காக ஒரு நாளைக்கு 25,000 பயணிகள் சிறப்பாக பயணம் மேற்கொள்ள இரவு பகலாக பாடுபடும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களைக் கொள்ளையர்கள் போல் பாவிப்பது நியாயமில்லை.

பேருந்தை இயக்க ஆகும் செலவுகள்!

ஒரு சொகுசு பேருந்து வாங்குவதற்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1.50 கோடி வரை ஆகிறது. குறைந்தபட்சம் ஒரு ரூ.50 லட்சம் மதிப்புள்ள சொகுசு பேருந்து 500 கி,மீ இயக்கினால் நாள் ஒன்றுக்கு,

- டீசல் ரூ.12,750,

- தமிழ்நாடு உரிமம் பேருந்துக்கு சாலை வரி ரூ.2,500,

- வாகன காப்பீடு ரூ.250,

- பராமரிப்பு ரூ.1,500,

- ஓட்டுநர் மற்றும் உதவியாளர் சம்பளம் ரூ.2000,

- தேய்மானம் ரூ.2,100,

- வட்டி ரூ.1,750,

- சுங்க கட்டணம் ரூ.1,800,

- படுக்கை உறை விரிப்பு பராமரிப்பு ரூ.300,

- வாகன நிறுத்த கட்டணம் ரூ.200,

- பேருந்து நிலைய நுழைவு கட்டணம் ரூ.200,

ஒரு பேருந்திற்கு ஆபீஸ் செலவு ரூ.1,000 என மொத்தம் ஒரு ஆம்னி பேருந்துக்கு குறைந்த பட்ச செலவு ரூ.26,350 ஆகிறது. இது இன்றைய டீசல் விலையில் ஏற்படுகிறது. டீசல் விலை அதிகரித்தால், இந்த செலவுகளும் உயரும்.

ஆம்னி பஸ்
ஆம்னி பஸ்

ஆம்னி பேருந்துகளில் Non Ac Seater, Non Ac Sleeper, Ac Seater, Ac Sleeper, Premium Ac Sleeper, Single Axle Volvo Seater, Multi axle Volvo Seater, single axle Volvo Sleeper, Multi axle Volvo Sleeper என ஒன்பது விதமான வசதிகள் படைத்த பேருந்துகள் உள்ளன இதில் குறைந்த ஏசி ஸ்லீப்பர் பேருந்துக்கு இவ்வளவு செலவாகிறது.

ஒரு இருக்கையின் கட்டணம் ரூ.1,404!

Omni Bus stand
Omni Bus stand
Photo: Vikatan / P.Kalimuthu

இதில் ஒரு வருடத்துக்கு சராசரி 70% மட்டுமே பயணிகள் பயணம் செய்வார்கள். ஒரு பேருந்துக்கு 70% என்றால் 21 பயணிகளின் இருக்கைகள். அதன்படி கணக்கிட்டால், ரூ.1,254 (ரூ.26,350 / 21 பயணிகள்),

- ஏஜென்ட் கமிஷன் ரூ.150 சேர்த்து பேருந்து நிறுவனத்திற்கு ஆகும் அடக்கச் செலவு ஒரு பயணிக்கு ஒரு நாளைக்கு ரூபாய் ரூ.1,404.

- வருடம் முழுவதும் இந்த தொகை வசூலித்தால்தான் அடக்க தொகையை அடைய முடியும். எதிர்பாராத விபத்துக்கள் அபரிதமாக விதிக்கப்படும் அபராதங்கள், பதிவுச் சான்று புதுப்பிப்பு, அனுமதி சீட்டு புதுப்பிப்பு என்று கட்டுக்கடங்காத செலவுகள் என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

பேருந்து பராமரிப்பு மற்றும் வாகனப் பராமரிப்பு, எஃப்.சி வேலை பார்ப்பது என வருடத்தில் பல நாட்கள் பேருந்துகளும் இயக்க முடியாமல் போய்விடும். இந்தக் கொடிய நோய் காலத்திலும் எங்களுடைய பேருந்துகள் இயக்கப்படாமல் 500 நாட்களுக்கு மேல் நின்றுகொண்டிருக்கிறது. இந்த ஒவ்வொரு பேருந்திற்கு இந்த காலங்களில் வட்டி மட்டுமே சுமாராக ரூ.10 லட்சத்திற்கு மேல் நஷ்டமாக செலவாகிறது. 18 மாத காலங்களாக நிற்கும் பேருந்துகளை எடுத்து இயக்குவதற்கு குறைந்தபட்சம் ரூ.3 - 5 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது.

ஆம்னி பேருந்து நிலையம் - மதுரை
ஆம்னி பேருந்து நிலையம் - மதுரை

பேரிடியை இறக்கிய கொரோனா!

தமிழகத்தில் தமிழகம் மற்றும் பிற மாநில உரிமம் பெற்ற 4,000 ஆம்னி பேருந்துகள் உள்ளன. இந்தப் பேருந்துகள் தமிழகத்தில் உள்ள முக்கியமான நகரங்களுக்கும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன. கொரோனா ஊரடங்குக்கு பிறகு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவது வெகுவாக குறைந்துவிட்டது. இன்றைய நிலையில், சுமார் 1,200 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. ஒரு தொழிலை நஷ்டத்தை ஏற்றுக்கொண்டு யாராலும் நடத்த முடியாது.

Lockdown
Lockdown

இந்த தொழிலை சார்ந்த பேருந்து உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், பேருந்து உதவியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், மெக்கானிக்குகள் மற்றும் இந்த தொழிலின் மறைமுக பணியாளர்கள் மொத்தம் இரண்டு லட்சம் பேர் மற்றும் அவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

இந்தத் தொழிலில் 1,500 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு உள்ளது. இதில் 1,000 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிகளில் கடனாக பெற்று தொழில் செய்துவருகிறோம். கடந்த ஒரு வருடமாக பேருந்துகள் இயங்காத காரணத்தால் வங்கிகளுக்கு சரிவர கடன் தவணை கட்ட முடியவில்லை. இந்நிலையில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு தொழில் முற்றிலும் பாதிக்கப்படும்.

ஆம்னி பஸ் கட்டணங்களை நிர்ணயிப்பது யார்?

இத்தொழிலை காப்பாற்றுவதற்காக மத்திய மாநில அரசுகள் தொலைநோக்குடன் உதவிட வேண்டும். மாநில அரசுகள் ஆம்னி பேருந்துகள் இயக்குவதில் ஒரு வரையறையை உண்டாக்கி, அரசு பேருந்துகளுக்கு நியாயமான கட்டணங்களை ஏற்படுத்தியிருப்பது போல, ஆம்னி பேருந்துகளும் அதன் உரிமையாளர்களுக்கு கட்டுபடியாகும் வகையிலும், மக்களுக்கு நிதிப் பிரச்னைகள் வராத வகையிலும் கட்டண நிர்ணயத்தை கட்டுபபாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதை கோரிக்கையாக வைக்கிறோம். அரசுக்கு இந்த கோரிக்கையை பல முறை கொண்டு சென்றாகிவிட்டது. அரசு ஆம்னி பேருந்துகள் விஷயத்தில் கடமையை சரியாக செய்தால் எங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் கட்டணக் கொள்ளையர்கள் என்கிற அவச்சொல் நீங்கும்.

Tamilnadu Chief minister MK Stalin
Tamilnadu Chief minister MK Stalin

மேலும், சாலை வரியை 6 காலாண்டுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும். அடுத்த ஆறு மாதங்களுக்கு 50% சாலை வரியை மட்டும் வசூலிக்க வேண்டும். கடன் தவணைக்கான ஆறுமாத கால வட்டியை தள்ளுபடி செய்தும், ஆறு மாதம் கடன் தவணை கட்டுவதற்கு கால அவகாசம் கொடுத்தும் அதே பேருந்துகளுக்கு தொழில் செய்வதற்காக கூடுதல் கடன் தொகை கொடுத்து உதவ வேண்டும். ஆம்னி பேருந்துகள் இயங்காத காலங்களுக்கு இன்ஷூரன்ஸ் தள்ளுபடி செய்தும் தரவேண்டும்.

மேலும் ஒரு பேருந்துக்கு பர்மிட் வாங்குவதற்கு குறைந்தபட்சம் 20 நாட்கள் ஆகின்றன. ஆனால் மற்ற மாநிலங்களில் இரண்டே நாட்களில் செய்து கொடுக்கிறார்கள். ஏனெனில் அங்கு அனைத்தும் டிஜிட்டலைஸ்டாக இருக்கின்றன. இருந்த இடத்தில் இருந்தபடியே ஆன்லைனில் பர்மிட் வாங்கிவிட முடியும். ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்தும் மேனுவல் ஆக வைத்திருப்பதால் அரசு தரப்பில் இருக்கும் விஷயங்களை விரைந்து முடிக்க காலதாமதம் ஆகிறது. இதையும் தமிழக போகுவரரத்துத் துறை கருத்தில் எடுத்துக் கொண்டு. எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் எதிர் வரும் காலங்களில் எங்களால் தொழில் நடத்த முடியும்.

கட்டண நிர்ணயம்!

Omni Bus stand
Omni Bus stand
Photo: Vikatan / P.Kalimuthu

Non Ac sleeper, Non ac seater, Ac sleeper மற்றும் Ac seater ஆகிய பேருந்துகளைத்தான் மக்கள் பெரிதும் பயன்படுத்துகிறார்கள். இந்த வகை பேருந்துகளுக்கும் அரசு முறையான கட்டணங்களை வரையறை செய்து கொடுப்பது அவசியம். அதன்படி, Non Ac sleeper படுக்கைகளுக்கான கட்டணம் ரூ.850, Non Ac seater இருக்கைகளுக்கான கட்டணம் ரூ.650, Ac sleeper படுக்கைகளுக்கான கட்டணம் ரூ.950 மற்றும் AC seater இருக்கைகளுக்கான கட்டணம் ரூ.750 என அரசு ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணங்களை நிர்ணயம் செய்தால், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நஷ்டத்தை சந்திக்காமல் பேருந்தை இயக்கலாம்.

மேலே குறிப்பிட்ட கட்டணங்களை அரசு நிர்ணயிக்கும் பட்சத்தில், வார நாட்களில் ஒரு கட்டணம், வார இறுதி நாட்களில் ஒரு கட்டணம், விழாக் காலங்களில் ஒரு கட்டணம் என இல்லாமல் அனைத்து நாட்களிலும் ஒரே கட்டணத்தை பேருந்தை இயக்கும் போது எங்களுக்கும் நஷ்டம் ஏற்படாது, மக்களுக்கும் பிரச்னைகள் இருக்காது" என்றார்.

ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, இந்த பொங்கல் சமயத்திலாவது தனியார் பேருந்துகள் கட்டணம் என்ற பெயரில் கொள்ளை அடிப்பதை ஒரு முடிவுக்குக் கொண்டுவருமா அரசு?