Published:Updated:

`2 நாளில் புரட்சி!’ - எம்.ஜி.ஆரை சுடுவதற்கு முன்பு எம்.ஆர் ராதா சொன்னது

எம்.ஜி.ஆரை சுட்ட வழக்கில் எம்.ஆர்.ராதாவிற்குத் தண்டனை வழங்கப்பட்ட தினம் இன்று. எம்.ஜி.ஆரை சுடுவதற்கு முன்பு நடிகர் அசோகனிடம் ``2 நாளில் புரட்சி நடக்கப் போகிறது'' எனச் சொல்லியிருக்கிறார் ராதா.

எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும்
எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும்

எம்.ஜி.ஆரை சுட்ட வழக்கில் எம்.ஆர்.ராதாவிற்குத் தண்டனை வழங்கப்பட்ட தினம் இன்று.

1967 ஜனவரி 12-ம் தேதி ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி. ஆரின் வீட்டுக்குள் நுழைகிறார்கள் நடிகர் எம்.ஆர்.ராதாவும், திரைப்படத் தயாரிப்பாளர் வாசுவும். மாலை 5 மணி அளவில் எம்.ஜி.ஆருடன் பேசிக்கொண்டிருந்தார் எம்.ஆர்.ராதா. அப்போது எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டு, தன்னுடைய நெற்றிப் பொட்டிலும் சுட்டுக் கொண்டார் எம்.ஆர்.ராதா.

திரைப்படத்தில் எம்.ஆர்.ராதா
திரைப்படத்தில் எம்.ஆர்.ராதா

எம்.ஜி.ஆரின் இடதுகாதையொட்டி துப்பாக்கிக் குண்டு துளைத்துக்கொண்டு போனது. பிறகு அதே துப்பாக்கியால் தனது நெற்றிப் பொட்டிலும், தோளிலும் இரண்டு குண்டுகள் பாய, ரத்த வெள்ளத்தில் மிதந்தார் எம்.ஆர்.ராதா. மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். `எம்.ஜி.ஆரை கொல்ல முயன்றார்.... தன்னைத்தானே சுட்டு தற்கொலைக்கு முயன்றார்’ என எம்.ஆர்.ராதா மீது வழக்குப் பாய்ந்தது.

எம்.ஜி.ஆர் சுடப்பட்ட நேரம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த காலம். 1967 சட்டசபைத் தேர்தலை தி.மு.க எதிர்கொண்டிருந்தது. தி.மு.க-வில் இருந்த எம்.ஜி.ஆர் பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிடுவதற்காகத் தயாராக இருந்தார். அந்த நேரத்தில்தான் எம்.ஜி.ஆர் சுடப்பட்டார்.

பெற்றால்தான் பிள்ளையா...
பெற்றால்தான் பிள்ளையா...

எம்.ஜி.ஆர் நடித்த `பெற்றால்தான் பிள்ளையா' படத்தைத் தயாரிப்பதற்காகப் படத்தின் தயாரிப்பாளர் வாசுவுக்கு ஒரு லட்சம் ரூபாய்க் கடன் கொடுத்திருந்தார் எம்.ஆர்.ராதா. பணத்தைக் கேட்டபோது படம் வெளியானதும் பணத்தை வழங்குவதாக எம்.ஜி.ஆர் வாக்குறுதி கொடுத்திருந்தார். படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. பணத்தை வாங்குவதற்காக வாசுவை அழைத்துக்கொண்டு ராமாவரம் தோட்டத்துக்குப் போனார் எம்.ஆர்.ராதா. அப்போது, எம்.ஆர்.ராதாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் வாக்குவாதம் முற்றி அது துப்பாகிச் சூட்டில் முடிந்ததாகச் செய்தி வெளியானது.

எம்.ஆர்.ராதாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே சினிமா தொழிலில் போட்டி ஏற்பட்டதாகவும், அதனால் எம்.ஆர்.ராதாவுக்குப் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதாகவும், அதனால்தான் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதாகவும் இன்னொரு தகவல் வெளியானது. 1967 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க-வுக்கும் காங்கிரஸுக்கும் இடையேதான் போட்டி நிலவியது. திராவிட கழகத்திலிருந்து பிரிந்து தி.மு.க உருவாகித் தேர்தலைச் சந்தித்தது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெறும் எம்.ஜி.ஆர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெறும் எம்.ஜி.ஆர்.

காங்கிரஸ் கட்சிக்குக் காமராஜர் தலைவராக இருந்தார். அவருக்குத் திராவிடர் கழகம் ஆதரவு அளித்தது. அந்தத் தேர்தலில் காமராஜர் தோற்றுவிடுவார் என்கிற செய்திகள் வெளியாகின. திராவிடர் கழகத்தில் இருந்த எம்.ஆர்.ராதா, காமராஜருக்குப் பிரசாரம் செய்தார். காமராஜர் தோற்றுவிடுவார் என்கிற ஆதங்கத்தில் எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்டதாகவும் செய்திகள் கிளம்பின.

வழக்கின் முக்கிய சாட்சியாக நடிகர் அசோகன் சேர்க்கப்பட்டிருந்தார். ``1967 ஜனவரி 10-ம் தேதி படப்பிடிப்பில் இருந்த போது மேக் அப் அறையில் எம்.ஆர்.ராதாவைச் சந்தித்தேன். சாய்வு நாற்காலி சிகரெட் பிடித்தபடியே யோசனையில் இருந்தார் எம்.ஆர்.ராதா. என்னைப் பார்த்ததும் ``அசோகா இரண்டு நாளில் புரட்சி நடக்கப் போகிறது. நாளைக்குள் நடிக்க வேண்டியதை முடித்துவிட்டுச் செல்லப் போகிறேன்'' எனச் சாட்சியமளித்தார்.

அசோகன்
அசோகன்

சைதாப்பேட்டை முதல் வகுப்பு நீதிபதி எஸ்.குப்புசாமிதான் முதலில் வழக்கை விசாரித்தவர். `எம்.ஆர்.ராதா குற்றவாளி' என அவர் தீர்ப்பளித்தார். அதன் பின் செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமணன் வழக்கை விசாரித்தார். எம்.ஆர்.ராதாவுக்காக என்.டி.வானமாமலை வாதாடினர். அரசு தரப்பில் பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் ஆஜரானார். 9 மாதங்கள் விசாரணை நடைபெற்றது. 1967 நவம்பர் 4-ம் தேதி தீர்ப்பு எழுதினார் நீதிபதி லட்சுமணன். 262 பக்கங்களில் எழுதப்பட்ட தீர்ப்பில் வாசுவின் சாட்சியத்தின்படி எம்.ஆர்.ராதாவிற்கு எம்.ஜி.ஆர் மீது தொழில்முறை எதிர்ப்பு நிலை இருந்தது. அதனால், எம்.ஆர்.ராதா குற்றவாளி எனச் சொல்லப்பட்டது.

``எம்.ஜி.ஆர் மீது சொந்த விரோதம், அரசியல் விரோதம் எம்.ஆர்.ராதாவுக்கு இருந்திருக்கிறது'' எனச் சொன்னார் நீதிபதி. இந்தியத் தண்டனைச் சட்டம் 307, 309-ம் பிரிவுகளின் கீழும், 1959-ம் ஆண்டு ஆயுதச் சட்டம் 25(1), 27 பிரிவுகளின் கீழும் எம்.ஆர்.ராதாவுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது எம்.ஆர்.ராதாவுக்கு வயது 57. ``அவரின் வயதைக் கருதி கடுமையான தண்டனை வழங்கவில்லை'' என நீதிபதி சொன்னார்.

திரைப்படத்தில் எம்.ஆர்.ராவுடன் எம்.ஜி.ஆர்.
திரைப்படத்தில் எம்.ஆர்.ராவுடன் எம்.ஜி.ஆர்.

1968 ஏப்ரல் 24-ம் தேதி எம்.ஆர்.ராதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். உச்ச நீதிமன்றத்தில் எம்.ஆர்.ராதா மேல்முறையீடு செய்ய அவரது தண்டனைக் காலம் மூன்றரை ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. மூன்றரை வருடங்கள் கழித்து சிறையிலிருந்து வெளிவந்தார் எம்.ஆர்.ராதா. பெரியார் மறைந்த நேரத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்த வந்தபோதுதான் எம்.ஆர்.ராதாவும் எம்.ஜி.ஆரும் சந்தித்துக்கொண்டார்கள்.

சாதிச் சிமிழுக்குள் அடைபடுபவரா எம்.ஆர்.ராதா?