தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் 'கல்லூரிக் கனவு' எனும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது மாணவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார் சிவன். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சந்திராயன்- 2 திட்டத்தில் உள்ள குறைகள் கண்டறியப்பட்டு, அவைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் சந்திராயன் விண்கலத்தின் புதிய வடிவம் உருவாக்கப்பட்டு, சோதனைகள் மற்றும் இதர பணிகள் நடைபெற்று வருகின்றன.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இச்சோதனைகள் முடிவடைந்த பிறகு இந்த விண்கலம் விண்ணில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்படும் ஏவுதளமானது, சிறிய வகை ராக்கெட்டுகளை ஏவுவதற்காக அமைக்கப்படும் ஏவுதளமாகும். இஸ்ரோ, சிறிய சாட்டிலைட்டுகளை விண்ணில் செலுத்துவதற்கான புதிய ராக்கெட்டுகளைத் தயாரித்து வருகிறது.
தற்போது, சர்வதேச அளவில் சிறிய ரக ராக்கெட்டுகளுக்கு அதிக தேவையும் நல்ல வாய்ப்பும் உள்ளது. இந்திய தொழில் முனைவோர்கள் அதிக அளவில் சிறிய வகை சாட்டிலைட்டுகளை தயாரிக்கின்றனர். இந்த சிறிய ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த உகந்த இடமாக குலசேகரன்பட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி மாநில அரசு சார்பில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 2,200 ஏக்கர் நிலம் தேவை.

அதில், 80 சதவிகித நிலம் கையகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. முழு நிலமும் இஸ்ரோவின் கைக்கு வந்ததும், இஸ்ரோ விஞ்ஞானிகள் மூலம் எந்த இடத்தில் ராக்கெட் ஏவுதளத்தை அமைப்பது என்பது குறித்து மண் பரிசோதனை செய்யப்படும். அதன் பிறகு உரிய நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கும்” என்றார்.