Published:Updated:

`பாதுகாப்பு வசதிகள் குறைவா?'- புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் பார்வையாளர்களை துரத்தும் காயம்

புதுக்கோட்டை வடமலாப்பூர் ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை வடமலாப்பூர் ஜல்லிக்கட்டு ( ஆர்.வெங்கடேஷ் )

புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் மாடு குத்தியதில் பார்வையாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 18 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை அருகே வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் 3வது ஜல்லிக்கட்டு விழா ஆகும். ஜல்லிக்கட்டு விழாவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவங்கி வைத்தார். புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மொத்தம் 889 காளைகள் கலந்துகொண்டு சீறிப்பாய்ந்தன. 4 குழுவாக மொத்தம் 200 மாடு பிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டை வடமலாப்பூர் ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை வடமலாப்பூர் ஜல்லிக்கட்டு

முதலில் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. அதன்பின்பு அவிழ்த்துவிடப்பட்ட முதல் காளையே மாடுபிடி வீரரின் கையில் கொம்பால் பலமாக குத்திக் கிழித்தது. காயமடைந்த வீரர் உடனே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சில காளைகளை மாடுபிடிவீரர்கள் அடக்கி கெத்து காட்டினர். ஆனாலும், சில காளைகள் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது.

குறிப்பாக, ஒரு சில காளைகள் வீரர்களைத் தூக்கி பந்தாடியது. வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து, அடுத்தடுத்து காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டன. இதில், வீரர்கள் பார்வையாளர் உட்பட 18 பேர் காயமடைந்தனர்.

இதில், பார்வையாளர் பகுதியில் அமர்ந்து இருந்த திருக்கோகர்ணம் பகுதியைச் சேர்ந்த வடிவேல் (32) என்பவர் காளை சரமாரியாக குத்தியதில் படுகாயமடைந்தார். காயமடைந்தவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். வடமலாப்பூரில் கடந்த வருடம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை குத்தி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் தான், ஆலங்குடி அருகே வன்னியன்விடுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 51 பேர் வரையிலும் காயமடைந்தனர்.

தடுப்பு வேலிகள் குறைவாக அமைக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. விழா மேடையும் சரிவர அமைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்த நிலையில் தான், மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு போட்டிகளை கூடுதல் கவனத்துடன் அசம்பாவிதங்கள் நடைபெறாதவண்ணம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

புதுக்கோட்டை வடமலாப்பூர் ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை வடமலாப்பூர் ஜல்லிக்கட்டு

இதுபற்றி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி கூறும்போது, "உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் படியே ஜல்லிக்கட்டு போட்டிகள் மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் அதிகளவில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. குறிப்பாக, ஏற்பாடுகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, விழா நடத்துவதற்கு சாதகமாக இருந்தால் மட்டும் சான்றிதழ் கொடுக்கப்படுகிறது.

அலுவலர்கள், மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள் என அனைவரும் தயார் நிலையில் இருக்கின்றனர். அடுத்தடுத்து மாடுகள் விடப்படுகிறது.மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை பிடிகயிறு கொண்டு உடனே பிடிக்காமல், விடுகின்றனர். இதனால், வெளியே செல்லும் காளை நேரடியாக சுற்றி நிற்கும் பார்வையாளர்களைத் தாக்குகிறது. வரும் காலங்களில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்" என்றார்.

பின் செல்ல