Published:Updated:

`சுகாதாரமான முறையில் விழா நடத்தவில்லை!'- கோயில் திருவிழா குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆட்சியர்

Bokkapuram
Bokkapuram

டன் கணக்கில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை மறு சுழற்சிக்கு அனுப்பாமல் தீயிட்டு எரித்தனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல வனப்பகுதியான பொக்காபுரம் பகுதியில் புகழ்மிக்க மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா சிறப்பான முறையில் நடைபெறும். விழாவில் பங்கேற்க தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளிலிருந்து அதிகளவிலான பக்தர்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டு பொக்காபுரம் மாரியம்மன் கோயில் தேர் திருவிழா கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கி 3-ம் தேதி வரை நடைபெற்றது.

palastic waste
palastic waste

இதற்காக சோதனைச் சாவடிகள் திறக்கப்பட்டு 24 மணிநேரமும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. கடந்த 10 நாள்களுக்கும் மேலாக இந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்தது. வியாபாரிகள் தற்காலிக கடை அமைத்திருந்தனர். யானை உள்ளிட்ட வன விலங்குகள் கோயில் வளாகத்துக்குள் நுழையாமல் இருக்க தனிப்படை அமைத்து, விரட்டி வந்தனர். திருவிழா தேரோட்டத்துடன் கடந்த 3-ம் தேதி நிறைவடைந்தது.

திருவிழாவின்போது பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகள் என ஏராளமான மக்கள் எல்லா வகையான குப்பைகளையும் வீசிச் சென்றனர். இதனால் கோயில் வளாகத்தைச் சுற்றிலும் குப்பைக் குவியலாய் மாறியிருந்தது. இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளும் அதிகளவு கிடந்தன.

cow with plastic waste
cow with plastic waste

இதை தீயிட்டு எரித்துவந்தனர். இதை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், சுகாதாரமற்ற வகையில் திருவிழா நடத்திய கோயில் நிர்வாகத்துக்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார்.

இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் பேசுகையில், ``கோயில் வளாகத்தைச் சுற்றிலும் பல ஏக்கர் பரப்பளவில் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்துகிடந்தன. டன் கணக்கில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை மறு சுழற்சிக்கு அனுப்பாமல் தீயிட்டு எரித்தனர். கூடலூர் வந்திருந்த மாவட்ட ஆட்சியர் பொக்காபுரம் கோயிலுக்கும் வந்திருந்தார். இந்தச் செயலை நேரில் கண்டு அதிருப்தி அடைந்து, கோயில் செயல் அலுவலருக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டார்" என்றார்.

Bokkapuram
Bokkapuram

இந்தச் சம்பவம் குறித்து சோலூர் பேரூராட்சி அதிகாரிகள் ``திருவிழாவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை செய்த 55 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் குப்பைகளை முறையாக கையாளாத கோயில் நிர்வாகத்துக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை சோலூர் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு