Published:Updated:

`ரூ.33 லட்சம் அபராதம்; ஒரு லட்சம் வழக்குகள்; 88,000 வாகனங்கள் பறிமுதல்’ - நீடிக்குமா லாக்டவுன்?

லாக்டவுன் உத்தரவை மீறியவர்களைக் கண்டிக்கும் போலீஸ்
லாக்டவுன் உத்தரவை மீறியவர்களைக் கண்டிக்கும் போலீஸ்

லாக்டவுன் உத்தரவை மீறியவர்களிடமிருந்து 33 லட்ச ரூபாய் அபராதமும் ஒரு லட்சம் வழக்குகளும் 88,000 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 690 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இந்தியாவில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீட்டைவிட்டு வெளியில் வருகின்றனர். தேவையில்லாமல் ஊரைச் சுற்றுபவர்களுக்கு தமிழக காவல்துறையினர் பல்வேறு நூதன தண்டனைகளைக் கொடுத்து வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு... 21 நாள்கள் ஊரடங்கு போதுமா?
டிஜிபி அலுவலகம்
டிஜிபி அலுவலகம்

லத்தியைச் சுழற்றாமல் புத்தியைக் கொண்டு கொடுக்கப்படும் தண்டனைகளுக்குப் பிறகும் போதிய விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் வெளியில் சுற்றி வருகின்றனர். இதையடுத்து 144 தடை உத்தரவை கடுமையாக்க தமிழக காவல்துறை முடிவு செய்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தக் கூட்டத்தில் டி.ஜி.பி திரிபாதி பங்கேற்று 144 தடை உத்தரவு தொடர்பாக ஆலோசித்தார். இதையடுத்து தமிழக காவல்துறையினர் கண்டிப்புடன் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினர். காவலர் பயிற்சி காலத்தின்போது கற்ற ஒவ்வொரு உடல் பயிற்சிகளையும் தேவையில்லாமல் வாகனங்களில் ஊரைச் சுற்றுபவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தனர்.

சென்னையைப் பொறுத்தவரை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் சோதனைச் சாவடிகளை அமைத்து போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள், 144 தடை உத்தரவுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. 7.4.2020 மாலை 6 மணி முதல் 8.4.2020 காலை 6 வரை சென்னை மாநகரத்தில் 144 தடை உத்தரவை மீறிய குற்றத்துக்காக 840 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 375 இருசக்கர வாகனங்கள் உட்பட 472 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்
போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்

தமிழகத்தைப் பொறுத்தவரை 144 தடை உத்தரவு காரணமாக 1,03,833 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1,13,117 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 87,577 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 32,83,844 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி அலுவலக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்திய சுகாதாரத்துறையினர், அந்த இடங்களுக்கு சீல் வைத்துள்ளனர். அதனால் அந்தப் பகுதிகளை போலீஸார், சுகாதாரத்துறையினர், மாநகராட்சி, நகராட்சி ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். சீல் வைக்கப்பட்ட இடங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் யாரும் செல்லாமலிருக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள சூழலில் மக்களுக்காகக் காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர்.

வாகன ஓட்டிகளிடம் கெஞ்சிய போலீஸ் எஸ்.எஸ்.ஐ ரஷீத்
வாகன ஓட்டிகளிடம் கெஞ்சிய போலீஸ் எஸ்.எஸ்.ஐ ரஷீத்

ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த முதல்நாளில் சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரஷீத் ஈடுபட்டார். அப்போது வழக்கம் போல அண்ணாசாலை ஸ்பென்ஸர் பிளாசா, சிக்னல் அருகே வாகனங்கள் வந்ததைப் பார்த்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரஷீத், கைகளைக் கூப்பியபடி தயவு செய்து வெளியில் வராதீங்க என்று கண்ணீர்மல்க கூறினார். அவரின் உருக்கமான பேச்சைக் கேட்டவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

ஏப்ரல் 14-ம் தேதியோடு 144 தடை உத்தரவு விலக்கப்படுமா என்ற கேள்வி ஒவ்வொருவரின் மனதிலும் உள்ளது. (சென்னையில் மட்டும் ஏப்ரல் 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது) அதுதொடர்பான ஆலோசனையில் மத்திய, மாநில அரசு ஈடுபட்டுவருகிறது. இதற்கிடையில் லாக் டவுனை நீட்டிக்க சில மாநில முதல்அமைச்சர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்தியாவில் கொரோனா, சமூக பரவலாகாமல் தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

டிஜிபி திரிபாதி
டிஜிபி திரிபாதி

இதுகுறித்து டி.ஜி.பி அலுவலக உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``144 தடை உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்றால் மாநில அரசுகளை கலந்து ஆலோசித்து, மத்திய அரசு முடிவு எடுக்கும். தற்போதுள்ள ஊரடங்கை நீட்டித்தால் அதற்குத் தனியாக அரசாணை பிறப்பிக்கப்படும். மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் கமிஷனர்கள், ஊரடங்கை நீட்டித்து உத்தரவிடுவார்கள். இதுவரை ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக எந்தவித உத்தரவும் அதிகாரபூர்வமாக பிறப்பிக்கப்படவில்லை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு