Published:Updated:

`தாலுகா வாரியாகப் பொறியாளர்கள்!' -ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்துக்குத் தயாராகும் நெல்லை, தூத்துக்குடி

பேட்டியளிக்கும் சஜ்ஜன்சிங் சவான், ஷில்பா பிரபாகர்சதீஷ்
பேட்டியளிக்கும் சஜ்ஜன்சிங் சவான், ஷில்பா பிரபாகர்சதீஷ்

நெல்லை மாவட்டத்தில் மாஞ்சோலை மலைப்பகுதியில் உள்ள 6 கடைகளைத் தவிர, எஞ்சியுள்ள அனைத்துக் கடைகளிலும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் `ஒரே நாடு... ஒரே ரேஷன்’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு எந்த நியாய விலைக் கடைகளிலும் பொருள்கள் பெற்றுக்கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது, 

ஒரே நாடு ஒரே ரேஷன்... முதல்கட்டமாக நெல்லை, தூத்துக்குடியில் அமல்!- அரசாணை வெளியீடு #NowAtVikatan

இதுதொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்கான கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழக உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் ஆணையர் சஜ்ஜன் சிங் சவான் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பின்னர், உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் ஆணையர் சஜ்ஜன் சிங் சவான் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அனைத்துக் கடைகளிலும் சோதனை முயற்சியாக அமல்படுத்தப்படுகிறது. 

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சஜ்ஜன்சிங் சவான், ஷில்பா பிரபாகர்சதீஷ்
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சஜ்ஜன்சிங் சவான், ஷில்பா பிரபாகர்சதீஷ்

நெல்லை மாவட்டத்தில் 4,78,206 ரேஷன் கார்டுகளும், 789 கடைகளும் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் 4,93,842 கார்டுகளும், 957 கடைகளும் உள்ளன. ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் 35,233 ரேஷன் கடைகள் இருக்கின்றன.

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் இரு மாவட்டங்களிலும் உள்ள கடைகளில் வழக்கத்தைவிடவும் கூடுதலாக 5 சதவிகிதம் பொருள்கள் கொடுக்கப்படும். இந்தத் திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவிகிதம் கடைகளிலும் அறிமுகப்படுத்தப்படும். 

ஒரே நாடு, ஒரே ரேஷன்...தொழிலாளர்களின் ஊதியத்தில் மட்டும் பாகுபாடு!

நெல்லை மாவட்டத்தில் மாஞ்சோலை மலைப்பகுதியில் உள்ள கடைகளைத் தொடர்புகொள்வதில் சிரமங்கள் உள்ளன. அதனால் அங்குள்ள ஆறு கடைகளைத் தவிர, மாவட்டத்தின் பிற கடைகள் அனைத்திலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஒரே வருவாய் கிராமத்தில் உள்ள ரேஷன் கார்டைப் பயன்படுத்தி அதே கிராமத்தில் உள்ள மற்றக் கடைகளில் பொருள்களை வாங்க முடியாது. தற்போது சோதனை முயற்சியாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கடைகளில் மட்டுமே பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். இத்திட்டம் முழுமையாக அமல்படுத்திய பின், மாநிலத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் பொருள்களை வாங்க முடியும்.

பேட்டியளிக்கும் அதிகாரிகள்
பேட்டியளிக்கும் அதிகாரிகள்

ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் தவிர்த்து அனைத்து பொருள்களும் தேவையான அளவு இருப்பு இருக்கிறதா என்பதைத் தினமும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் உறுதி செய்வார்கள். ஆன்லைன் முறையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதால் நெட்வொர்க் உள்ளிட்ட கணினி பிரச்னைகளைச் சரிசெய்ய தாலுகா வாரியாகப் பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’’ என்றனர் விரிவாக.

அடுத்த கட்டுரைக்கு