Published:Updated:

அக்டோபர் 1-ல் 'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டம் அமல்! -அமைச்சர் காமராஜ்

ரேஷன்
ரேஷன்

'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டத்துக்கு மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில்தான், பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. காரணம், இந்தியாவிலேயே மிகச்சிறந்த பொது விநியோகக் கட்டமைப்பைக் கொண்டது தமிழ்நாடு.

தமிழகம் முழுவதும் அக்டோபர் 1-ம் தேதி முதல், 'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டம் அமல்படுத்தப்படும் என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடைகளைக் கணினிமயமாக்கும் பொருட்டு, மத்திய நுகர்வோர் நலன் மற்றும் பொதுவிநியோக அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்டதுதான், 'ஒருங்கிணைந்த மேலாண்மை பொதுவிநியோகத் திட்டம்.' இதன்மூலம், நாடு முழுவதுமுள்ள ரேஷன் கடைகள் அனைத்தும், ஒரே கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்படும்; ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடையிலும் பொருள்கள் வாங்கமுடியும். இந்தத் திட்டம்தான் 'ஒரே நாடு ஒரே ரேஷன்' என்று அழைக்கப்படுகிறது.

Ration shop
Ration shop

2020-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் அனைத்து மாநிலங்களிலும் இது செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் மத்திய அரசால் முதலில் அறிவுறுத்தப்பட்டது. தமிழகத்தில் இந்தத் திட்டத்துக்கு பலத்த எதிர்ப்புக் கிளம்ப, "தமிழகத்தில் ஏற்கெனவே செயல்பட்டுவரும் பொது விநியோகத் திட்டத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்" என அறிவித்தார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ்.

ஒரே நாடு, ஒரே ரேஷன்...தொழிலாளர்களின் ஊதியத்தில் மட்டும் பாகுபாடு!

தொடர்ந்து, இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு இருந்துவந்த நிலையிலும், கடந்த ஜனவரி மாதம் முதல், சோதனை முயற்சியாக, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து, ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் என அறிவித்தார் அமைச்சர் காமராஜ். பின்னர் கொரோனா பாதிப்பு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தமிழகம் முழுவதும், ஒரே நாடு, ஒரே ரேஷன் எனும் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று தெரிவித்துள்ளார்.

Minister Kamaraj
Minister Kamaraj

இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட, தமிழகத்தில்தான் இந்தத் திட்டத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. காரணம், இந்தியாவிலேயே மிகச்சிறந்த பொது விநியோகக் கட்டமைப்பைக் கொண்டது தமிழ்நாடு. இந்தத் திட்டம் தமிழகத்துக்கு வரமா, சாபமா என்கிற தலைப்பில் விகடனில் ஏற்கெனவே கட்டுரை வெளியிட்டிருக்கிறோம். அதை, இந்த லிங்க்கை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.

அடுத்த கட்டுரைக்கு