திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள பெரியவரிகம்-துத்திப்பட்டு சாலையில், தனியாருக்குச் சொந்தமான என்.எம்.ஹாஸிம் என்ற தோல் தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது. இந்த ஆலையிலுள்ள கழிவுநீர்த் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இன்று காலை அங்கு பணிபுரியும் பாலூரைச் சேர்ந்த ரமேஷ், ரத்தினம், மோதகப்பள்ளியைச் சேர்ந்த பிரசாத் ஆகிய மூன்று தொழிலாளர்களும் அதைச் சரிசெய்யும் பணியில் இறங்கினர்.

அடைப்பைச் சரிசெய்வதற்காக ரமேஷ் தொட்டிக்குள் இறங்கியிருக்கிறார். அப்போது, திடீரென விஷவாயு தாக்கியதில் அவர் தொட்டிக்குள்ளேயே மயங்கி விழுந்துள்ளார். அவரைக் காப்பாற்றும் முயற்சியில் தொட்டிக்குள் இறங்கிய ரத்தினமும் மயக்கமடைந்துள்ளார். மேலிருந்த பிரசாத் கத்திக் கூச்சலிட்டு அலறியிருக்கிறார். சக தொழிலாளர்கள் வருவதற்குள்ளாக பிரசாத்தும் தொட்டிக்குள் இறங்கி இருவரையும் மீட்க முயன்றிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ரத்தினத்தை மீட்டு தொட்டிக்கு மேல் கொண்டுவந்த பிரசாத்தும் மயக்கமடைந்துவிட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த சக தொழிலாளர்கள், தொட்டிக்குள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து உள்ளே மயங்கிய நிலையில் கிடந்த ரமேஷை மீட்டனர். மயக்கமடைந்த மூன்று பேரையும் உடனடியாக அருகிலுள்ள கே.எம்.என்.யூ சிறப்புப் பல்நோக்கு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று அனுமதித்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது, முதலில் மயக்கமடைந்த ரமேஷ் இறந்து நீண்ட நேரமாவது தெரியவந்தது.

ரத்தினம் மற்றும் பிரசாத் ஆகிய இருவரும் மயங்கிய நிலையிலேயே தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவருகிறார்கள். இவர்களில் ரத்தினத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. இது தொடர்பாக, எஸ்.பி சிபி சக்கரவர்த்தி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்யும்போது, மூன்று தொழிலாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு கவசங்கள் அளிக்கப்பட்டதா என்பது குறித்தும் தீவிரமாக விசாரிக்க உமராபாத் போலீஸாருக்கு எஸ்.பி உத்தரவிட்டிருக்கிறார்.