Published:Updated:

`வேளாண் மண்டலமாக அறிவித்தும் புதிய கிணறு அமைக்க திட்டம்?’- திருவாரூரைச் சுற்றும் ஓ.என்.ஜி.சி சர்ச்சை

ஓ.என்.ஜி.சி கிணறு
ஓ.என்.ஜி.சி கிணறு

இப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். புதிய கிணறு அமைக்க பேச்சுவார்த்தை நடத்துவது, தமிழக அரசின் அறிவிப்புக்கு முரணானது.

தமிழக அரசு, காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, சட்டம் இயற்றியுள்ளது. இதற்கு முரணாக, ஓ.என்.ஜி.சி நிறுவனம் தங்களது ஊரில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கிணறு அமைக்க முயற்சி செய்வதாகக் கொந்தளிக்கிறார்கள் திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூர் கிராம மக்கள்.

காவிரி டெல்டா
காவிரி டெல்டா

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ஓ.என்.ஜி.சி நிறுவனம், 150-க்கும் மேற்பட்ட ராட்சதக் கிணறுகள் அமைத்து, கச்சா எண்ணெய்-எரிவாயு எடுத்து வருகிறது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டதோடு, கச்சா எண்ணெய் கசிவினால் விளைநிலங்களும் மலடாகிப்போவதாக வேதனை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையின்தான் டெல்டா மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தும் விதமாக, நிலக்கரிப் படுகை மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் திட்டம் என அடுத்தடுத்த ஆபத்துகள் பயமுறுத்திக்கொண்டே இருந்தன.

இதுபோன்ற அபாயகரமான திட்டங்களை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்த, காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்ற நிலையில்தான், தற்போது தமிழக அரசு இதற்கென தனிச்சட்டம் இயற்றியுள்ளது. தமிழக அரசின் இந்தச் சட்டபூர்வ நடவடிக்கைக்குப் பிறகும் கூட, ஓ.என்.ஜி.சி நிறுவனம் தங்களது ஊரில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

இந்நிலையில்தான் இதுதொடர்பான முத்தரப்புக் கூட்டம் மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை அதிகாரிகள், ஓ.என்.ஜி.சி நிறுவன அதிகாரிகள், சோழங்கநல்லூர் பொதுமக்களில் சிலரும் கலந்து கொண்டார்கள். இத்தகவல் அறிந்து, தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவகம் வந்தார். ``இப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகத் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். புதிய கிணறு அமைக்கப் பேச்சுவார்த்தை நடத்துவது, தமிழக அரசின் அறிவிப்புக்கு முரணானது. இந்தக் கூட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்”என வாக்குவாதம் செய்தார்.

ஓ.என்.ஜி.சி கிணறு
ஓ.என்.ஜி.சி கிணறு
Representational image

இதனால் ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் இங்கிருந்து வெளியேறினார்கள். முத்தரப்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து விளக்கமளித்த ஓ.என்.ஜி.சி அதிகாரிகள், ``வழக்கமான கச்சா எண்ணெய்- எரிவாயு எடுப்பதற்காகத்தான் புதிய கிணறு தோண்டும் பணியில் நாங்கள் ஈடுபட்டோம். ஆனால், இது ஹைட்ரோ கார்பன் ஆய்வுப்பணி எனப் பொதுமக்கள் தவறாகப் புரிந்துகொண்டு எதிப்பு தெரிவிக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்கள். ஆனால், சோழங்கநல்லூர் மக்களோ, இது ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுதான் எனக் குற்றம் சாட்டுகிறார்கள். ஒருவேளை இது வழக்கமான கச்சா எண்ணெய்க் கிணறுதான் என்றாலுமே கூட அனுமதிக்க முடியாது. நிலத்தடி நீர், நீர்நிலைகள், விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு