Published:Updated:

`இயற்கை விவசாயம்; 20% குறைவான விலை!’- சின்ன வெங்காய சாகுபடியில் அசத்திய திருச்சி சிறைவாசிகள்

இயற்கை முறையில் சின்ன வெங்காயச் சாகுபடி
இயற்கை முறையில் சின்ன வெங்காயச் சாகுபடி

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இயற்கை முறையில் விளைந்த சின்ன வெங்காயம் அறுவடை செய்யும் பணி தொடங்கியுள்ளது.

திருச்சி மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் உள்ளிட்ட சுமார் 1,500 -க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். அவர்களில், பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு தண்டனைக் கைதிகளாக இருப்பவர்கள் 600 பேர். அதில் நடத்தையின் பேரில் சில கைதிகளை அட்டை தயாரிக்கும் தொழில், புக் பைண்டிங், ஆடு மாடு வளர்த்தல், இனிப்பு தயாரித்தல், உணவு தயாரித்தல், ஆடை தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மேலும் நன்னடத்தைக் கைதிகளைக்கொண்டு திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் ஃப்ரீடம் உணவகம் செயல்பட்டு வருகிறது.

இயற்கை முறையில் சின்ன வெங்காயச் சாகுபடி
இயற்கை முறையில் சின்ன வெங்காயச் சாகுபடி

மேலும், திருச்சி மத்திய சிறையில் காலியாக இருந்த சுமார் 25 ஏக்கர் நிலத்தில், நன்னடத்தைக் கைதிகள் மூலம் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. நன்னடத்தை தண்டனைக் கைதிகள் மூலம் சின்ன வெங்காயம், கத்தரி, வெண்டை, புடலை, மரவள்ளிக்கிழங்கு, அவரை, தக்காளி, செங்கரும்பு உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன.

`உங்க ஊருக்கும் வருகிறது திருச்சி சிறைச்சாலை செங்கரும்பு!’- அரசின் முடிவால் சிறைவாசிகள் உற்சாகம்

மேலும், அந்தவகையில், சுமார் 1¼ ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் விளைந்த செங்கரும்பு கடந்த பொங்கலுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு திட்டத்துக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், திருச்சி மத்திய சிறைச்சாலையில் நன்னடத்தைக் கைதிகளால் சாகுபடி செய்யப்படும், சின்ன வெங்காயம் வெளிச்சந்தையின் விலையை விடக் குறைவான விலையில் விற்பதற்குச் சிறைத்துறை முடிவுசெய்துள்ளது.

 கருங்கரும்பு
கருங்கரும்பு

இதுகுறித்து சிறைக் கண்காணிப்பாளர் சங்கர், ``சிறைச்சாலையில் நன்னடத்தை அடிப்படையில் சுமார் 20 கைதிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களை வேளாண் தொழிலில் ஈடுபடுத்தி வந்தோம். ஏற்கெனவே கரும்பு சாகுபடி செய்யப்பட்டு அவை பொங்கல் பண்டிகைக்கு அறுவடை செய்யப்பட்டது. மேலும், சிறைவளாகத்தில் சுமார் அரை ஏக்கரில் சின்னவெங்காயம் பயிரிடப்பட்டது. கடந்த 3 மாதமாகப் பராமரிக்கப்பட்ட வெங்காயப் பயிர்கள் சாகுபடிக்குத் தயாராக உள்ளது.

இது முழுக்க முழுக்க மண்புழு உரம் மற்றும் கால்நடைக் கழிவுகளை உரமாகப் பயன்படுத்தப்பட்ட இந்தச் சின்ன வெங்காயம் நல்ல முறையில் விளைந்துள்ளது. அரை ஏக்கரில் சுமார் அரை டன் அளவிற்கு மகசூல் எதிர்பார்க்கிறோம்.

இயற்கை முறையில் சின்ன வெங்காயச்  சாகுபடி
இயற்கை முறையில் சின்ன வெங்காயச் சாகுபடி

இன்றுமுதல் சிறைத்துறையின் அங்காடியில் ஒரு கிலோ வெங்காயம் 80 ரூபாய்க்கு விற்கப்படும். மார்க்கெட் விலையை விட 20 சதவிகிதம் குறைவான விலையில் விற்கும் இந்த வெங்காயத்தைப் பொதுமக்கள் வாங்கிப் பயன்பெறலாம். சின்ன வெங்காய விற்பனையில் கிடைக்கும் லாபத்திலிருந்து, அவற்றைப் பராமரித்த சிறைவாசிகளுக்கு ஊதியமும் பாதிக்கப்பட்ட சிறைவாசிகளுக்கு நலநிதியாகவும் வழங்கப்படவுள்ளது” என்றார்.

பின் செல்ல