Published:Updated:

ஆன்லைன் ரம்மி: `₹38 லட்சத்தை அவர் இழந்தது சூதாட்டம் இல்லையா?’ - தற்கொலை செய்துகொண்ட விஜயகுமார் மனைவி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தற்கொலை செய்துகொண்ட விஜயகுமார்
தற்கொலை செய்துகொண்ட விஜயகுமார்

நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பளித்திருக்கும் நிலையில் விஜயகுமாரின் மனைவி நல்லம்மாளை சந்திக்கச் சென்றோம். பத்து மாதங்கள் கடந்த நிலையிலும் கணவர் உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் வீட்டினுள் முடங்கிக் கிடக்கிறார் நல்லம்மாள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க முடியாது!'

தமிழகம், புதுச்சேரியில் ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுக்கு அடிமையான பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வந்தன. அதனால் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தடை வேண்டும் என்று எழுந்த கோரிக்கைகளின் அடிப்டையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020-ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது தமிழக அரசு. அந்தச் சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. அந்த மனு தலைமை நீதிபதிகள் சஞ்சீவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

Representational Image
Representational Image
Photo by Jarosław Kwoczała on Unsplash

அப்போது, தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி தொடர்ச்சியாக தற்கொலைகள் நிகழ்ந்ததால் அந்த விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது என்று தமிழக அரசு வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்பட்டது. இன்னொரு பக்கம், ``ஒவ்வோர் ஆண்டும் சுமார் 20 உயிரிழப்புகளை ஏற்படுத்தும் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கும் நிலையிலும், மாநில அரசு அதற்கென சட்டம் இயற்றி தொடர்ந்து நடத்தி வருகின்றது. ஆனால் ஆன்லைன் விளையாட்டை மட்டும் தமிழக அரசு தடை செய்திருக்கிறது. இது சூதாட்டம் இல்லை" என்று ஆன்லைன் ரம்மி நிறுவனம் சார்பில் வாதாடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ``தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. இந்த விளையாட்டுகள் ஏன் தடை செய்யப்படுகின்றன என்பது குறித்து போதுமான காரணம் சட்டம் நிறைவேற்றும்போது கூறப்படவில்லை. உரிய விதிகள் இன்றி ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க முடியாது” என்று கூறி ஆன்லைன் விளையாட்டுக்கு அரசு விதித்த தடையை ரத்து செய்தது.

ஆன்லைன் ரம்மியால் தற்கொலை!

அதேசமயம், ``ஆன்லைன் விளையாட்டுகளுக்காக விதிகளை உருவாக்கி புதிய சட்டம் கொண்டு வருவதற்கு எந்தத் தடையும் இல்லை” என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது பொழுது போக்கிற்காக ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை விளையாடி, பின் அதற்கு அடிமையாகி, சுமார் 38 லட்சத்தை இழந்த புதுச்சேரியைச் சேர்ந்த விஜயகுமார் அந்த விரக்தியில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்துகொண்ட விஜயகுமாரின் மனைவி நல்லம்மாள்
தற்கொலை செய்துகொண்ட விஜயகுமாரின் மனைவி நல்லம்மாள்

தற்கொலைக்கு முன்பு தன் மனைவி நல்லம்மாள் என்ற மதிக்கு அவர் அனுப்பிய வாட்ஸ்அப் ஆடியோவில், ``எப்படியாவது ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் அனைத்தையும் தடை செய்து விடு” என்று உருக்கமாக கோரிக்கை வைத்திருந்தார். தற்போது நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பளித்திருக்கும் நிலையில் விஜயகுமாரின் மனைவி நல்லம்மாளை சந்திக்கச் சென்றோம். பத்து மாதங்கள் கடந்த நிலையிலும் கணவர் உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் வீட்டினுள் முடங்கிக் கிடக்கிறார் நல்லம்மாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டின் நீதிமன்ற தீர்ப்பு குறித்து நம்மிடம் பேசிய அவர்,

``கடந்த ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி 38 லட்சம் ரூபாயை இழந்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார் என் கணவர் விஜயகுமார். வீட்டிலிருந்த அனைத்தையும் விற்றும், உறவினர் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கியும்தான் என் வீட்டுக்காரர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் லட்சக்கணக்கான பணத்தை இழந்தார். அந்தப் பணத்தை கூட அரசாங்கம் எங்களுக்கு மீட்டுத் தர வேண்டாம். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு என் வீட்டுக்காரர் வைத்த கடைசி கோரிக்கை... `என்னைப் போல் இனி யாரும் தற்கொலை செய்துகொள்ளக் கூடாது. அதனால் ஆன்லைன் ரம்மி விளையாட்டை முழுமையாக தடைசெய்ய வேண்டும்' என்பதுதான்.

தீர்ப்பு
தீர்ப்பு

ஆனால், ஆன்லைன் ரம்மி சூதாட்டம் இல்லை என்றும், அதனை தடை செய்ய முடியாது என்றும் நீதிமன்றம் நேற்று முன் தினம் தீர்ப்பளித்திருக்கிறது. இது சூதாட்டம் இல்லையென்றால் வேறு எது சூதாட்டம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? விபத்தில் உயிரிழப்பதற்கும், தற்கொலை செய்துகொள்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு குடும்பத்தை விட்டுவிட்டு அடுத்த நொடி சாகப் போகிறோம் என்ற வேதனையுடன் இறந்தவர் என் கணவர். வெளிநாடுகளில் மக்களுக்கு பாதிப்பு மற்றும் இழப்புகளை ஏற்படுத்தக் கூடிய மருந்துகளை கண்டறிந்து அதனை தடை செய்கிறார்கள்.

`உங்களை கெஞ்சி கேட்டுக்கறேன்!’

ஆனால் இங்கு, ஆன்லைன் ரம்மி விளையாட்டை அனுமதிக்கிறீர்கள். இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டால் என்னைப் போன்ற நிறைய பெண்கள் வாழ்க்கையை இழந்து, தங்கள் குழந்தைகளுடன் எதிர்காலம் என்ன என்பதே தெரியாத நிலையில் நிற்கதியற்று நடுத்தெருவில் நிற்கிறோம். சூதாட்டத்தை தடை செய்ய முடியாது என்று தயவு செய்து தீர்ப்பு கொடுக்காதீர்கள். இப்படியான தருணங்களில் அந்த இடத்தில் உங்கள் வீட்டுப் பெண்களை நினைத்துக் கொள்ளுங்கள்.

புதுச்சேரி: `30 லட்ச ரூபாய்க்கு மேல விட்டுட்டேன், மது!' - இளைஞரின் உயிரைப் பறித்த ஆன்லைன் ரம்மி

தீர்ப்பை மாற்றி எழுதி, என் வீட்டுக்காரரின் இறுதி வார்த்தைகளின் படி இளைஞர்களின் வாழ்வை காப்பாற்றிக் கொடுங்கள். அரசு இந்த வழக்கை அப்படியே விட்டுவிடாமல் முழு கவனத்தையும் செலுத்தி ஆன்லைன் சூதாட்டத்தை முழுமையாக நிறுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். தமிழக அரசுடன் புதுச்சேரி அரசும் இணைந்து இந்த ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். மக்களை காப்பாற்றுவது அரசின் கடமைதான். என்னைப் போன்ற பெண்களின் வாழ்வில் இன்னொருமுறை இந்த ஆன்லைன் ரம்மி சூதாட்டம் விளையாடிவிடக் கூடாது. உங்களை கெஞ்சி கேட்டுக்கறேன், தயது செய்து ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்துவிடுங்கள்” என்கிறார் கலங்கிய கண்களுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு