Published:Updated:

`9 திட்டங்களுக்கு தலா 1,000 ரூபாய் ஒதுக்கீடு!’ - கேள்விக்குறியாகும் தமிழக ரயில்வே திட்டங்கள்?

 ரயில்
ரயில்

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 10 ரயில்வே திட்டங்களுக்கு வெறும் 1,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால் அவை கைவிடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் ரயில்வே துறைக்கு மட்டும் ரூபாய் 70,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய ரயில்வே உள்ளிட்ட மொத்தம் 17 மண்டலங்களுக்கும் இந்த நிதி பிரித்து வழங்கப்படும். குறிப்பாக தெற்கு ரயில்வே துறைக்கு மட்டும் ரூ.4,057 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 10 திட்டங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால் இந்தத் திட்டங்கள் முடங்கும் அபாயத்தில் உள்ளன.

பட்ஜெட் தாக்கல்
பட்ஜெட் தாக்கல்

தெற்கு ரயில்வேயிக்கு நேரடியாக ரூ.2,876 கோடியும், கடன் மற்றும் கடன் பத்திரம் வெளியீட்டுக்கு ரூ.1,181 கோடி என மொத்தம் ரூ.4,057 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை, திண்டிவனம் - நகரி, அத்திப்பட்டு - புத்தூர், ஈரோடு - பழனி, சென்னை - கடலூர்- மாமல்லபுரம், மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி, கூடுவாஞ்சேரி - இருங்காட்டுக்கோட்டை, மொரப்பூர் - தர்மபுரி, ராமேஷ்வரம் - தனுஷ்கோடி, சத்தியமங்கலம் - மைசூரு ஆகிய திட்டங்களுக்குத்தான் தலா ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் பற்றி தெரிந்துகொள்ள டி.ஆர்.இ.யூ மூத்த நிர்வாகி இளங்கோவனை தொடர்புகொண்டு பேசினோம், ``தென்னக ரயில்வேயில் தமிழ்நாடு நியூ லைன் திட்டங்கள் என ஒன்பது திட்டங்கள் உள்ளன. சத்தியமங்கலத்தையும் சேர்த்தால் மொத்தமாக 10 திட்டங்கள். 2006 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தத் திட்டங்கள் ஒவ்வொன்றாக பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டன. அவை அனைத்துமே அனுமதி பெறப்பட்டதுதான். இந்த 9 திட்டங்களுக்கும் மொத்தமாகச் சேர்த்து ரூ.11,628 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அவை இன்னும் முழுமையாக ஒதுக்கப்படவில்லை.

தென்னக ரயில்
தென்னக ரயில்

இது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம், தென்னக ரயில்வே அதிகாரிகள் மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். அதில், `தேவையான நிதி வழங்காததால் இந்த 9 திட்டங்களையும் கைவிடுவதாகக் கூறியிருந்தனர்’. அதற்கு ஏற்றாற்போல் தற்போது இந்த 9 திட்டங்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை இடையேயான 70 கிமீ திட்டம் 2006- 07-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதற்காக 900 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். ஆனால், இந்த பட்ஜெட்டில் ஆயிரம் ரூபாய்தான் ஒதுக்கியுள்ளனர். அப்படியென்றால் இந்தத் திட்டங்கள் கைவிடப் போவதாகவே அர்த்தம்.

`மத்திய பட்ஜெட் 2020-21' - சிறப்பம்சங்கள்!

நிர்வாக நடைமுறைக்குச் சாத்தியமற்றது, இதனால் லாபம் இருக்காது மற்றும் நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னை போன்றவையே திட்டம் கைவிடலுக்குக் காரணமாக கூறப்படுகிறது. ஆனால், அதில் உண்மையில்லை. அந்த நிலம் தேவைப்பட்டால் நீதிமன்றம் சென்று வாதாடி பெறலாம். அப்படி எதுவும் செய்யவில்லை. நீண்ட காலமாகப் பணம் ஒதுக்கப்படாமல் இருக்கும் திட்டங்களைக் கைவிட வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளதுதான் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருக்க முடியும்.

தென்னக ரயில்
தென்னக ரயில்

இந்த ஆண்டு ஆந்திராவில் புதிய ரயில் பாதை அமைக்க 437 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது அதுவே தமிழகத்துக்கு 2.7 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய ரயில் திட்டங்களுக்கு ஆயிரம் கோடி ஒதுக்குவதாகக் கூறிவிட்டு 500 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்துக்கு வரவேண்டிய புதிய திட்டம் பாதியாகக் குறைகிறது. இன்னும் 6 ஆண்டுகளில் ரயில்வே உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக மட்டும் 13,60,000 கோடி ரூபாய் செலவு செய்யவுள்ளதாகக் கூறுகிறார்கள். அதில் இந்த ஆண்டுக்கு மட்டும் 1,15,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அப்படி எதுவும் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் புதிய திட்டங்களுக்கான நிதி பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக அறிவிக்கப்பட்ட திட்டங்களின் விவரம்!

1) திண்டிவனம்- செஞ்சி- திருவண்ணாமலை, திட்ட மதிப்பு ரூ.900 கோடி இதுவரை ரூ.20 கோடி செலவிடப்பட்டுள்ளது.

2) திண்டிவனம்- நகரி திட்ட மதிப்பு ரூ. 2,300 கோடி, செலவு செய்யப்பட்டது ரூ.51 கோடி

3) அத்திப்பட்டு - புத்தூர் திட்ட மதிப்பு ரூ.1,105 கோடி , இதுவரை ரூ.8 கோடி செலவிடப்பட்டுள்ளது

4) ஈரோடு - பழனி திட்ட மதிப்பு ரூ. 1,140 கோடி, ஆனால், சுமார் ரூ.50 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது

5) சென்னை- கடலுர்-மாமல்லபுரம் திட்ட மதிப்பு ரூ. 2,300 கோடி, இதுவரை ரூ.1 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது

தென்னக ரயில்
தென்னக ரயில்

6) மதுரை- அருப்புக்கோட்டை - தூத்துக்குடியின் திட்ட மதிப்பு ரூ.1,800 கோடி, ரூ.128 கோடி இதுவரை செலவிடப்பட்டுள்ளது

7) கூடுவாஞ்சேரி - இருங்காட்டுக்கோட்டையின் திட்ட மதிப்பு ரூ.1,500 கோடி, ரூ.65 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

8) மொரப்பூர் - தர்மபுரி திட்டமதிப்பு ரூ.360 கோடி, ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது

9) ராமேஸ்வரம்- தனுஷ்கோடி இடையேயான திட்ட மதிப்பு ரூ.208 கோடி, ரூ. 2.70 கோடி மட்டும் செலவிடப்பட்டுள்ளது

அடுத்த கட்டுரைக்கு