Published:Updated:

`மொத சவாரியே 3 மணிக்குத்தான் வருது...' - ஊட்டி நிலவரத்தால் கலங்கும் ஆட்டோ டிரைவர்கள்

நான்காம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், சுகாதார விதிமுறைகளுடன் ஆட்டோக்கள் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அரசு அனுமதியளித்தும் ஆட்டோக்கள் ஓடாத நிலையே நீடிக்கிறது.

கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும் நீலகிரி மாவட்டத்தில் மார்ச் 17-ம் தேதி முதலே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில எல்லைகள் மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

ooty rose park
ooty rose park

கோடைவிழா நேரம் என்பதால் சுற்றுலாத் தொழிலை நேரடியாகவும் மறைமுகமாகவும் நம்பியிருந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

ஊட்டி வர்க்கி, ஹோம் மேட் சாக்லேட், நீலகிரி தைலம், ஸ்ட்ராபெர்ரி, மொட்டுக் காளான் உள்ளிட்ட தொழில்கள் நலிவடைந்தன.

Ooty Market
Ooty Market

அதே சமயம் சுற்றுலாப் பயணிகளை நம்பி இயங்கிவந்த உணவகங்கள், தங்கும் விடுதிகள், ஆட்டோ மற்றும் சுற்றுலா வாடகைக் கார் ஓட்டுநர்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரத்தை ஊரடங்கு சிதைத்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. சுகாதார விதிமுறைகளுடன் ஆட்டோக்கள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. வாழ்வாதாரத்தை இழந்து வீட்டில் தவித்துவந்த ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களுக்கு விடிவுகாலம் பிறந்துவிட்டதாக நம்பி ஆட்டோவை இரண்டு மாதங்களுக்குப் பிறகு தங்களின் வழக்கமான ஸ்டேண்டுகளில் நிறுத்திவிட்டுப் பயணிகள் வருவார்கள் எனக் காத்திருந்தனர். நாள்முழுக்க காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

auto drivers
auto drivers

கோடை சீஸனின் உச்சத்தில் இருக்கும் மே மாதத்தில் ஊட்டி நகரில் வழக்கமாக ஆட்டோக்கள் குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால், இன்றைக்கு ஸ்டேண்டுகளில் நிறுத்திவைக்கப்பட்ட வாக்கிலேயே உள்ளன.

இந்தத் துயரம் குறித்து நம்மிடம் பேசிய ஆட்டோ ஓட்டுநர் லாரன்ஸ், "லாக்டௌன் நாள்கள் எங்களுக்கு அவ்வளவு கொடுமையாக இருந்தது. எப்போது விடிவுகாலம் பிறக்கும் என 24 மணிநேரமும் டி.வி-யைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். சக நண்பர்களைத் தொடர்புகொண்டு எப்போது ஆட்டோக்கள் ஓடத்தொடங்கும் என்பது பற்றியே அதிகம் பேசுவேன். எந்த வருமானமும்‌ இல்லாமல் சிரமப்பட்டு இருந்தோம். ஆட்டோக்கள் ஓட‌லாம் என அனுமதியளித்ததும் நம்பிக்கையுடன் வந்தோம்.‌

auto drivers
auto drivers

ஆனால், நகரில் நிலவரம் மோசமாக உள்ளது. ஒருநாளைக்கு ஒன்றிரண்டு சவாரி கிடைப்பதே பெரும்பாடாக உள்ளது. எப்படி பிழைப்பு நடத்தப்போகிறோம் எனப் புரியவில்லை" என்றார் வேதனையுடன்.

ஊட்டி பாப்புலர் ஆட்டோ ஸ்டேண்ட் ஓட்டுநர் மணி, "20 வருஷத்துக்கும் மேல ஆட்டோ ஓட்டுறேன். இதைவிட்டா வேற தொழில் தெரியாது. நல்ல சீஸன் டைம்ல செலவெல்லாம் போக 300 ரூபாய் மீதி கிடைக்கும். ஊரடங்கு முடிஞ்சு இப்போதான் வெளியே வந்தோம். மொத சவாரி கிடைக்கவே 3 மணியாகுது. சிலருக்கு மூணு நாளா சவாரியே இல்ல.

 auto driver Mani
auto driver Mani

லட்சக்கணக்கான டூரிஸ்ட் வந்துபோற இடம் இப்போ காத்து வாங்குது. உள்ளூர்‌ ஜன‌ நடமாட்டமும் ரொம்ப கம்மி, பணப்புழக்கமும் இல்ல. ஒரு‌ ஆள் மட்டுமே வண்டில ஏத்தமுடியும்கிறதால எந்த மக்களும் ஆட்டோவ தேடுறதுல்ல. இந்த வருமானத்துல டீசல் அடிச்சு வண்டி ஓட்ட முடியாது. ஏதோ ஒண்ணு ரெண்டு சவாரி கெடச்சா வீட்டுக்கு பால் வாங்க உதவும். அரசாங்கம் பாத்து ஏதாச்சும் நிவாரணம் கொடுத்தா உதவியா இருக்கும்" என்றார் ஆதங்கத்துடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு