`கதவுகள் திறந்தே இருக்கும்!’- தூய்மைப் பணியாளர்களுக்கு ஊட்டி மலர்ப் பூங்காவில் சிறப்பு அனுமதி
கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த இரவு பகலாக களமாடிக்கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சிறப்பு மலர் அலங்காரங்களைக் கண்டு ரசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது 4வது கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரங்கில் தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் பல துறைகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன. அதில் சுற்றுலாவும் ஒன்று.
சுற்றுலாவை முக்கியப் பொருளாதாரமாகக் கொண்டுள்ள நீலகிரியில் கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதியே சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
பூங்காக்கள் மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் அனைத்துப் பூங்காக்களிலும் லட்சக்கணக்கான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த மலர்களைக் கண்டு ரசிக்க யாருமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
மருத்துவப் பணியாளர்கள், வருவாய்த்துறையினர், காவல்துறையினர், பூங்கா ஊழியர்கள் உள்ளிட்டோர் தங்கள் குடும்பத்தோடு மலர் அலங்காரங்களைக் கண்டு ரசித்துச் சென்றனர்.
இந்தநிலையில் ஊட்டி நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து பூங்காவைக் கண்டுரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலை 11 மணியளவில் பூங்காவிற்கு வந்த தூய்மைப் பணியாளர்களை பூங்கா அலுவலர்கள் மலர்கொத்து கொடுத்தும், கைகளைத்தட்டியும் இன்முகத்துடன் வரவேற்றனர். உற்சாக மிகுதியில் தூய்மைப் பணியாளர்கள் லட்சக்கணக்கான பூக்களைக் கண்டு ரசித்தனர்.
இந்த அனுபவம் குறித்து நம்மிடம் பேசிய தூய்மைப் பணியாளர்கள் வேணி, ``ஊட்டி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக இருக்கும் எங்களுக்கு உற்சாகம் அளிக்க இந்த சமயத்தில் பலரும் ஆறுதலாக இருந்து வருகின்றனர். எங்களையும் எங்கள் குடும்ப உறுப்பினர்களையும் சிறப்பு விருந்தினராக அழைத்து வரவேற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது மட்டுமல்லாது பூக்களின் பெயர் மற்றும் அதன் சிறப்பையும் அருகில் நின்று கூறினார்கள் இது மிகுந்த மன நிறைவை அளிக்கிறது," என மகிழ்ச்சி தெரிவித்தார்.
``வரும் ஒரு வாரத்திற்கு தூய்மைப் பணியாளர்கள் அவர்களின் குடும்பத்துடன் பூங்காவைக் கண்டுரசிக்க எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் வந்து கண்டுகளிக்கலாம். இவர்களுக்காக பூங்கா கதவுகள் திறந்தே இருக்கும்" எனப் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.