நீலகிரி மாவட்டம் ஊட்டி- கூடலூர் சாலையில் எம்.என் என்ற பெயரில் தனியார் நிறுவனம் ஒன்று ஹோம் மேட் சாக்லேட் விற்பனை செய்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சில செய்தியாளர்களை அழைத்து 'தங்கள் நிறுவனத்தில் புதிதாக தயாரிக்கப்படும் சாக்லேட்டில் அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தி சேர்க்கப்பட்டுள்ளது. இதை உண்பதன் மூலம் கொரோனவை எதிர்கொள்ள முடியும்' எனத் தெரிவித்துள்ளனர்.

சில தனியார் தொலைக்காட்சிகளிலும் ஆங்கில நாளிதழிலும் இது குறித்து செய்திகள் வெளியாகி உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் உணவு தரக்கட்டுப்பாடு, சுகாதாரத்துறை, சித்தா பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இதில் அது மாதிரியான நோய் எதிர்ப்பு ஆற்றல் இருப்பதறகான எந்த முகாந்திரமும் இல்லை என்பதைக் கண்டறிந்து அந்த நிறுவனத்துக்கு உடனடியாக சீல் வைத்தனர்.

இது குறித்து மருத்துவ பணிகள் இணை இயக்குநர் பழனிசாமி "பத்திரிகை செய்தியின் அடிப்படையிலும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரிலும் இந்த நிறுவனத்தின் சாக்லேட்டை ஆய்வு செய்தோம். இந்த சாக்லேட்டை உண்டால் கொரோனாவில் இருந்து விடுபடலாம். கொரோனவை குணமாக்கும் தன்மை உள்ளது எனத் தவறான தகவலை வெளியிட்டு விற்பனை செய்துவந்துள்ளனர். இது உண்மைக்குப் புறம்பான ஒன்று. எனவே, இந்த நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றார்.
உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் தங்கவிக்னேஷ்,``இந்த நிறுவனத்தை ஆய்வு செய்தபோது இவர்களிடம் சாக்லேட் தயாரிக்கவே முறையான சான்றிதழ் கிடையாது. பேக்கரி நடத்துகிறோம் என உரிமம் வாங்கி சட்டவிரோதமாக ஹோம் மேட் சாக்லேட் தயாரித்து வந்துள்ளனர். எனவே, தற்போது சீல் வைத்துள்ளோம். அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இந்த பொய் விளம்பரம் குறித்து ஊட்டி சித்தாப்பிரிவு மருத்துவர், "சாக்லேட் தயாரிக்க பயன்படுத்தப்படும் கொக்கோ பீன்ஸை உண்டால் நோய் எதிரிப்பு சக்தி கூடும் என்ற எந்த உறுதியும் இல்லை. இது தவறான தகவல்" என்றார்.
இந்த சாக்லேட்டை உண்பதன் மூலம் கொரோனாவிலிருந்து மீளலாம் என விளம்பரம் செய்த தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டோம், ஆனால் நமது அழைப்பை அவர்கள் தவிர்த்து விட்டனர்.

மைசூர் பா போல, நீலகிரி மாவட்டத்தில் ஒரு சாக்லெட் தயாரிப்பு நிறுவனம், தனது நிறுவன சாக்லெட் சாப்பிட்டால் கொரோனா வராது எனப் பொய் விளம்பரம் செய்துள்ள சம்பவம் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.