Published:Updated:

`ராட்சத மரங்கள்; டெண்டர் விட்டும் யாரும் வரல!' - விநோத சிக்கலில் ஊட்டி அரசு மருத்துவமனை

ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள 10 மரங்களை அகற்ற முடியாமல் திணறி வருகின்றனர்.

Eucalyptus trees
Eucalyptus trees

நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்துக்குப் பல்வேறு வகைகளில் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தாலும், சூழலியலை சீர்குலைக்கும் வகையில் பாதிப்பை ஏற்படுத்துவது களைத் தாவரங்களே. ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் பல்வேறு நாடுகளிலிருந்து பல்வேறு வகையான தாவரங்களையும் அறிமுகம் செய்தனர். அழகுக்காகவும் விறகு தேவைக்காகவும் வேறு பல காரணங்களுக்காக நடப்பட்ட இந்த வகை தாவரங்கள் இன்றைக்கு ஆக்கிரமிப்பு தாவரங்களாக மாறி காடுகளுக்கும் காட்டுயிர்களுக்கும் பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன.

Eucalyptus trees
Eucalyptus trees

அதிலும் குறிப்பாக ஊட்டி குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவு வேட்டில், யூகாலிப்டஸ் மரங்கள் நடப்பட்டன. இந்த இரண்டுவகை மரங்களால் பூர்வீகத் தாவரங்கள் முதல் புல்வெளிகள் வரை அனைத்தும் அழிக்கப்பட்டு நிலத்தடி நீரும் அதிக அளவு உறிஞ்சப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், சாலையோரங்களிலும் அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள் போன்ற பகுதிகளில் நடவு செய்யப்பட்ட யூகாலிப்டஸ் போன்ற அந்நிய மரங்கள் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளன. மழை, காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வேருடன் சாய்ந்து உயிரிழப்புகளையும் போக்குவரத்து பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன.

இதேபோல், ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் 10 ராட்சத யூகலிப்டஸ் மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன்னர் நடப்பட்டவை. அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ள கட்டடத்துக்கு அருகில் உள்ளன. மேலும், இந்த மரங்கள் மழைக்காலங்களில் மருத்துவமனை மீது விழுந்து உயிரிழப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் மருத்துவமனை நிர்வாகம் இந்த மரங்களை வெட்ட முடிவு செய்தது. இதற்காக டெண்டரை அறிவித்தது. ஆனால், இந்த 10 மரங்களும் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கின்றன. இதனால் யாரும் மரத்தை வெட்ட முன்வரவில்லை.

Eucalyptus trees
Eucalyptus trees

இதையும் மீறி ஒரு குழுவினர் மரத்தை வெட்ட வந்தனர். மரத்தின் பிரம்மாண்டத்தைப் பார்த்து அவர்களும் முடியாது என்று கூறி பின்வாங்கினர். வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்னர் அகற்ற வேண்டும் என முயன்றும் அகற்ற முடியாமல் திணறி வருகின்றனர்.

இதுகுறித்து ஊட்டி அரசு மருத்துவமனை அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, ``மருத்துவமனை வளாகத்தில் உள்ள இந்த ராட்சத மரங்கள் அச்சுறுத்தலாக உள்ளன. உயிர் சேதம் மற்றும் விபத்தைத் தடுக்கும் வகையில் இந்த மரங்களை வெட்ட முடிவு செய்து டெண்டர் விட்டும் வெட்டுவதற்கு யாரும் முன்வரவில்லை. தற்போது மறு டெண்டர் விடப்பட்டு மரங்களை அகற்ற நடவடிக்கை எடுத்துவருகிறோம்" என்றார்.

Eucalyptus trees
Eucalyptus trees

இதுகுறித்து மரம் வெட்டும் ஒப்பந்ததாரர் ஒருவர் கூறுகையில், ``இந்த மரங்கள் 40 அடி உயரத்துக்கு மேல் வளர்ந்து நிற்கின்றன மேலும் 5 பேர் கைகோத்து நின்றாலும் மரத்தை முழுமையாக சுற்றி வளைக்க முடியாது. இந்த அளவுக்குப் பெரிய மரங்களை அகற்ற வேண்டுமானால் 10 நாள்களுக்கு இந்தப் பகுதியில் சாலை போக்குவரத்தை நிறுத்தி மின்சாரத்தையும் துண்டிக்க வேண்டும். மேலும், நோயாளிகளையும் மாற்றுக் கட்டடத்தில் தற்காலிகமாக அனுமதிக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே அகற்ற முடியும் என வேண்டுகோள் விடுத்தோம். இதற்கு மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொள்ளவில்லை" என்றார்.